என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த பெண், 3 வயது மகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சித்தஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் தயாளன் கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வெண்ணிலா (வயது 35). இவர்களது மகன் கீர்த்தி (5) மகள் ஹரிதா (3).

    தயாளனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று இரவு தயாளன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து தயாளன் வெளியே சென்றுவிட்டார். அவரது தாயார் தாயம்மாள் வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கினார்.

    வெண்ணிலா தனது குழந்தைகளுடன் வீட்டுக்குள் படுத்திருந்தார். கணவன் தகராறு செய்ததால் மனமுடைந்து காணப்பட்ட வெண்ணிலா மகன் கீர்த்தியின் கையை வீட்டுக்குள் இருந்த ஒரு நாற்காலியில் கட்டி வைத்தார்.

    பின்னர் மகள் ஹரிதாவை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு பின்புறம் வந்தார். அங்குள்ள மரத்தில் குழந்தைகள் விளையாட கட்டப்பட்டிருந்த சேலையால் ஆன தொட்டிலில் சிறுமி ஹரிதாவை தூக்கில் தொங்க விட்டார்.

    இதில் குழந்தை துடிதுடித்து இறந்தது. தொடர்ந்து வெண்ணிலாவும் அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலையில் வெண்ணிலா மற்றும் குழந்தை தூக்கில் தொங்குவதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த அவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகளை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    சிப்காட் (ராணிப்பேட்டை):

    தி.மு.க. தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து நேற்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

    ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் தலைமையில் ராணிப்பேட்டை நகரில் உள்ள வார்டு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர மற்றும் வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளர் பெல் தமிழரசன் தலைமையில் சீக்கராஜபுரம் உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மேல்விஷாரம் நகர அ.தி.மு.க. சார்பில் கத்தியவாடி கூட்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் இப்ராகிம் கலிபுல்லா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பதாகைகளை கையில் ஏந்தி தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்த திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அதேபோல் ஆற்காடு கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் வளவனூர் எஸ்.அன்பழகன் தலைமையிலும், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தாழனூர் சாரதி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. திமிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தாமரைப்பாக்கம் நா.வ.கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சோளிங்கர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பாணாவரம் கூட்டுசாைலயில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எல்.விஜயன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் ஏ.எல்.சாமி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.சம்பத் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    தொடர்ந்து தி.மு.க. தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற கோரியும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், நீட்தேர்வு ரத்து, மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்காததைகண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    இதேபோன்று சோளிங்கர் பஸ் நிலையம் அருகில் நகர அ.தி.மு.க. சார்பில் ராமு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் மாவட்ட பாசறை துணை செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    கலவை அடுத்த மாம்பாக்கத்தில் திமிரி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் சொரையூர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேம்பி கூட்டுறவு வங்கி தலைவர் பாலி ரமேஷ், மாம்பாக்கம் கூட்டுறவு வங்கி தலைவர் ஹரிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேம்பி முன்னாள் தலைவர் ராமதாஸ் வரவேற்றார். இதில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும்,நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
    ஓச்சேரி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கத்தை அடுத்த அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி, மேஷீட் மற்றும் போலீசார் நேற்று மாலை சங்கரன்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஓடையில் சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டரில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் டிராக்டர் டிரைவர், மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர், பொக்லைன் டிரைவர் ஆகியோர் ஓட்டம் பிடித்தனர். அவர்களில் பொக்லைன் டிரைவர் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த துளசி (வயது 22) என்பவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    தப்பி ஓடிய டிராக்டர் டிரைவர் சங்கரன்பாடி பகுதியைச் சேர்ந்த சுந்தர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சிவா ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
    ஆற்காடு அருகே பீர் பாட்டிலால் குத்தி கண்டக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 30). தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி மஞ்சுளா (24) இவர்களுக்கு சுதர்சன் (3) என்ற மகனும், டிசிகா என்ற மகளும் (2) உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் கிரிவாசன் (20) இவருக்கும் நாகேந்திரனுக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த பகுதியில் நெல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று திருவிழா நடந்தது. இதற்காக மேளதாளம் அமைத்து ஏற்பாடுகளை ஊர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    இதில் கலந்து கொள்வதற்காக கிரிவாசன் நண்பர்களான ராமநாதபுரம் மோட்டூர் பகுதியை சேர்ந்த அன்பரசன் (19), கேசவன் (19), ஹேமபிரசாத் (20), ஹரிஷ் (19) ஆகியோர் வந்தனர்.

    சாமி ஊர்வலத்தில் நாகேந்திரன் வந்த போது இவருக்கும், கிரிவாசன் கூட்டாளிகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

    கிரிவாசன் வைத்திருந்த பீர் பாட்டிலால் நாகேந்திரனை தாக்கி கழுத்தில் குத்தினர். இதில் படுகாயமடைந்த நாகேந்திரனை ரத்தம் கொட்டிய நிலையில் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இதுகுறித்து நாகேந்திரனின் மனைவி மஞ்சுளா ஆற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கிரிவாசன் உள்பட 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாலாஜாவில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை கச்சால நாயக்கர் தெருவில் வசிப்பவர் சுரேஷ். இவரது மகன் நித்திஷ்குமார் (வயது22) கூலி தொழிலாளி.

    இவர் சரிவர வேலைக்கு போகாமல் இருந்ததால் இவரது மனைவி வேலைக்கு செல்லுமாறு கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனையில் இருந்த நித்திஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து நித்திஷ்குமாரின் மனைவி அளித்த புகாரின் பேரில் வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லா பயணிகளையும், மாதாந்திர பயணச்சீட்டு பயணிகளையும் அனுமதிக்கக் கோரி அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையத்துக்கு அந்த ரெயில் வந்தபோது ரெயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரக்கோணம்:

    ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு தினமும் இயக்கப்படும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனைத்து பெட்டிகளும் முன்பதிவில்லா பயணிகளுக்காக இருந்து வந்தது.

    கொரோனா பொது முடக்கத்தால் அனைத்து பெட்டிகளும் முன்பதிவு பயணிகளுக்கான பெட்டியாக மாற்றப்பட்டது. இதில் மாதாந்திர பயண சீட்டு உள்ள பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்த ரெயிலை அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தி வந்த நிலையில் மாதாந்திர பயணச்சீட்டு பயணிகள் அனுமதிக்கப்படாததால் அவர்கள் வேதனையில் இருந்தனர்.

    இந்த ரெயிலுக்கு அன்வர்திகான்பேட்டையில் பயண சீட்டு தருவதும் இல்லை. இதனால் சென்னைக்கு தினமும் செல்ல வேண்டிய பலர் அரக்கோணம் வரை பஸ்சில் பயணம் செய்து அங்கிருந்து மின்சார ரெயிலில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவில்லா பயணிகளையும், மாதாந்திர பயணச்சீட்டு பயணிகளையும் அனுமதிக்கக் கோரி அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையத்துக்கு நேற்று அந்த ரெயில் வந்தபோது ரெயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த பிரச்சனை குறித்து ரெயில்வே நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க செய்வதாக உறுதியளிக்கப்பட்டது.

    இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடந்த போராட்டத்தால் 7 ரெயில்கள் தாமதமானது.

    இந்த போராட்டம் குறித்து சித்தேரி ரெயில் நிலைய அதிகாரி அரக்கோணம் ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

    இது தொடர்பாக போலீசார் மறியலில் ஈடுபட்ட பயணிகள் 200 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 23 பேருக்கு தொற்று உறுதியானது. மாவட்டம் முழுவதிலும்‌ அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 237 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 315 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    2 மாவட்டங்களிலும் நேற்று கொரோனாவிற்கு உயிரிழப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    கடந்த மாதத்தில் இருந்து பெண் பயணிகள் 24 மணி நேரமும், ஆண் பயணிகள் கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் மட்டும் புறநகர் ரெயில்களில் பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
    அரக்கோணம்:

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான அரசு அதிகாரிகள், ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், கூலித் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் ரெயிலில் சென்னைக்கு சென்று வருகின்றனர்.

    கொரோனா 2-வது அலை காரணமாக ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் வேலைக்கு சென்று வருபவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்ததால் கடந்த மாதம் முதல் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னைக்கு செல்வோர் மீண்டும் ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

    தினமும் ரெயிலில் வேலைக்கு சென்று வருபவர்கள் சீசன் டிக்கெட் பயன்படுத்தி வந்தனர். கொரோனா தொற்றுக்கு பிறகு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சீசன் டிக்கெட் மீண்டும் வழங்காமல் ரெயில்வே நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.

    இதனால் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூடுதலாக பணம் செலவழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தனர்.

    ஆனால் ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளது.

    இந்த நிலையில் அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையத்தில் இன்று காலை சென்னை செல்வதற்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். சீசன் டிக்கெட் கிடைக்காமல் ஆத்திரத்தில் இருந்த பயணிகள் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி வந்த ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.

    பயணிகள் தண்டவாளத்தில் அமர்ந்து சீசன் டிக்கெட் வழங்கக் கோரி கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ரெயிலில் வந்த பயணிகள் அவதியடைந்தனர்.

    இதையடுத்து அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்த அதிகாரிகள் சீசன் டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் கூறினர்.

    அரக்கோணத்தில் இருந்து உயர் அதிகாரிகள் வந்து சீசன் டிக்கெட் வழங்குவதாக உறுதி அளித்தால் மட்டுமே ரெயில் மறியலை கைவிடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உயர் அதிகாரிகளின் உறுதியை ஏற்று பயணிகள் மறியலை கைவிட்டனர். அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு தொடங்கிய ரெயில் மறியல் போராட்டம் 10 மணியளவில் முடிவுக்கு வந்தது. 2 மணி நேரம் பயணிகள் மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ரெயில் மறியல் போராட்டத்தால் சென்னை மார்க்கமாக செல்லும் சதாப்தி, லால்பாக் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. மற்ற ரெயில்களும் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும்‌ அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 237 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் சார்பில், தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    அரக்கோணம் கிருஷ்ணா கல்வி குழுமம் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக்கில் உள்ள துளசியம்மாள் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
    அரக்கோணம்:

    ரோட்டரி சங்கம் மற்றும் அரக்கோணம் கிருஷ்ணா கல்வி குழுமம் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக்கில் உள்ள துளசியம்மாள் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார் . முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    இதில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழும செயலாளரும், ரோட்டரி முன்னாள் துணை ஆளுநருமான டி.எஸ். ரவிக்குமார், பாலிடெக்னிக் முதல்வர் சுரேஷ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஜி.மணி, மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் இளங்கோ, கே.பி.கே.பிரபாகரன், நரேந்திர குமார், ஜி.கே.வெங்கடேசன், மனோகர் பிரபு, வெங்கடாசலபதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை கிருஷ்ணா கல்வி குழு மேனேஜர் குமார் மற்றும் நிர்வாக அலுவலர் கோபிநாத் செய்திருந்தனர்.
    ரத்தினகிரி அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலாற்றுப் படுகையில் மணல் கடத்துவதாக ரத்தினகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பாலாற்றுப் படுகையில் இருந்து மணலை மூட்டைகளாக கட்டிக்கொண்டு நந்தியாலம் டாஸ்மாக் கடை எதிரே வேனில் அடுக்கி வைத்து கொண்டு இருந்தனர்.

    இதனைக் கண்ட போலீசார் மணல் மூட்டை மற்றும் வேனை பறிமுதல் செய்தனர். மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த வேன் டிரைவர் பார்த்திபன் (வயது 21) என்பவரை கைது செய்தனர்.
    சோளிங்கரில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களுக்கு தலா 200 ரூபாய் வீதம் 25 பேருக்கு அபராதம் விதித்தனர்.
    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால் முகக் கவசம் அணியாமல் வருவோர், சமூக இடைவெளியை பின்பற்றாதோருக்கு அபராதம் விதிக்க மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டார்.

    அதன்படி சோளிங்கர் தாசில்தார் வெற்றிகுமார், வருவாய் ஆய்வாளர் யுவராஜ், கிராம நிர்வாக அலுவலர் சானு மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் சோளிங்கர் அண்ணாசிலை கருமாரியம்மன் கூட்டுச்சாலை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களுக்கு தலா 200 ரூபாய் வீதம் 25 பேருக்கு அபராதம் விதித்தனர். அவர்களுக்கு கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    ×