search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்பாட்டம்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    சிப்காட் (ராணிப்பேட்டை):

    தி.மு.க. தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து நேற்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

    ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் தலைமையில் ராணிப்பேட்டை நகரில் உள்ள வார்டு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர மற்றும் வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வாலாஜா மேற்கு ஒன்றிய செயலாளர் பெல் தமிழரசன் தலைமையில் சீக்கராஜபுரம் உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மேல்விஷாரம் நகர அ.தி.மு.க. சார்பில் கத்தியவாடி கூட்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் இப்ராகிம் கலிபுல்லா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பதாகைகளை கையில் ஏந்தி தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்த திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அதேபோல் ஆற்காடு கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் வளவனூர் எஸ்.அன்பழகன் தலைமையிலும், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தாழனூர் சாரதி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. திமிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தாமரைப்பாக்கம் நா.வ.கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சோளிங்கர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பாணாவரம் கூட்டுசாைலயில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எல்.விஜயன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் ஏ.எல்.சாமி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.சம்பத் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    தொடர்ந்து தி.மு.க. தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற கோரியும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், நீட்தேர்வு ரத்து, மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்காததைகண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    இதேபோன்று சோளிங்கர் பஸ் நிலையம் அருகில் நகர அ.தி.மு.க. சார்பில் ராமு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் மாவட்ட பாசறை துணை செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

    கலவை அடுத்த மாம்பாக்கத்தில் திமிரி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் சொரையூர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேம்பி கூட்டுறவு வங்கி தலைவர் பாலி ரமேஷ், மாம்பாக்கம் கூட்டுறவு வங்கி தலைவர் ஹரிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேம்பி முன்னாள் தலைவர் ராமதாஸ் வரவேற்றார். இதில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும்,நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×