என் மலர்
ராமநாதபுரம்
- ராமேசுவரம் பகுதியில் 2 நாட்கள் மின்தடை ஏற்படும்.
- மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட மின்வாரியம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் துணை மின் நிலையத்தில் அரியமான் முதல் ராமேசுவரம் வரை சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை (7-ந்தேதி) மற்றும் மறுநாள் (8-ந்தேதி) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் வருமாறு:-
அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்கா யர் பட்டினம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் , நீதிமன்றம், திட்டக்குடி, கோவில், வேர்க்கோடு, புதுரோடு தங்கச்சிமடம், ஆத்திக்காடு, சத்யா நகர், செம்ம மடம், மெய்யம்புளி.
பொந்தபுளி, ராமர் தீர்த்தம் வடக்கு மற்றும் தெற்கு, மார்க்கெட் தெரு, பருவதம், பாரதி நகர், முருங்கை வாடி, எம் ஆர் டி நகர், கரையூர், மல்லிகை நகர், ெரயில்வே பீடர் ரோடு, பேக்கரும்பு , அரி யான் குண்டு, பகுதி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
இதேபோல் பட்டினம் காத்தன் துணை மின் நிலையத்தில் உள்ள ராமநாதபுரம் உயர் மின் அழுத்த பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுவதால் நாளை (7-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காவனூர் சுற்றியுள்ள பகுதிகள், தொருவளூர், வயலூர், பனையூர், குளத்தூர், தேர்த்தாங்கல், கிளியூர், முதலூர், கடம்பூர், இல்லுமுள்ளி, வைரவ னேந்தல், வீரவனூர், பாப்பாகுடி, வண்ணிவயல், கவரங்குளம். தேவிபட்டினம் சுற்றியுள்ள பகுதிகள், கழனிக்குடி, சித்தார்கோட்டை, பெருவயல் ,சிறுவயல் , நரியனேந்தல்,மரப்பாலம், இலந்தை கூட்டம்.
திருப்பாலைக்குடி சுற்றியுள்ள பகுதிகள், பொட்டகவயல், கருப்பூர், சம்பை,வெண்ணத்தூர், வைகை, பத்தனேந்தல், மாதவனூர், பாப்பனேந்தல், பூத்தோண்டி, அரசனூர், நாரணமங்கலம், எருமைப்பட்டி, வளமானூர், சோழந்தூர். காட்டூரணி சுற்றியுள்ள பகுதிகள், ஆர்.கே. நகர், எம்.ஜி.ஆர் நகர், ரமலான் நகர், மேலக்கோட்டை, மாடக் கோட்டான், இளமனூர், பேராவூர்.
தில்லைநாயகி புரம், பழங்குளம், திருப்புல்லானி, அம்மன் கோவில், தெற்கு தரவ, கருங்குளம், மஞ்சன மாரியம்மன் கோவில், லாந்தை, புத்தனேந்தல், தெற்குதரவை, பசும்பொன் நகர், கூரியூர், பொக்க னேந்தல், பால்கரை, நாக நாதபுரம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட மின்வாரியம் தெரிவித்துள்ளது.
- பரமக்குடி அருகே சதுரங்க நாயகி அம்மன் கோவிலில் ஆடி பெருக்கை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
- திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மேலப்பெருங்கரை கிராம மக்கள் செய்திருந்தனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தில் சதுரங்க நாயகி அம்மன் சந்தன கருப்பு சாமிகள் கோவில் உள்ளது. இங்கு 20-ம் ஆண்டு ஆடி பதினெட்டாம் பெருக்கு திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதலுன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருமணம் வரம் வேண்டியும், குழந்தை வரம் வேண்டியும், நேர்த்திக்கடனாகவும் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மேலப்பெருங்கரை கிராம மக்கள் செய்திருந்தனர்.
- கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை மேலாண்மை துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
கீழக்கரை
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜ சேகர் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் கள ஒருங்கிணைப்பாளர் அருமை ரூபன் கலந்து கொண்டார். மேலாண்மை துறை தலைவர் அஜ்மல்கான் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் ரியாஸ் கான் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மேலாண்மை துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
- திருவெற்றியூரில் திருவிளக்கு பூஜை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டது.
- 1008 திருவிளக்கு பூஜை நடத்த அனுமதி அளித்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பிரசித்தி பெற்ற திருவெற்றியூர் பாகம்பிரியாள் வன்மீக நாதர் கோவில் உள்ளது. கோவில் முன்பு இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் ஆண்டு தோறும் 1008 திருவிளக்கு பூஜை நடத்துவது வழக்கம். அதற்கான ஏற்பாடுகளை இயக்கத்தின் நிறுவன தலைவர் இளையராஜா செய்து வந்தார்.
இந்தநிலையில் திருவெற்றியூர் பஞ்சாயத்து தலைவர் திருவிளக்கு பூஜை நடத்துவதால் இடநெருக்கடி, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே விளக்கு பூஜை நடத்தக்கூடாது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது, ஆண்டுதோறும் விளக்கு பூஜை நடத்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை இயக்கத்தின் மாநில தலைவரான இளையராஜா கோர்ட்டில் சமர்ப்பித்தார். அதனைப்பார்த்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிப திகள் வழக்கம் போல 1008 திருவிளக்கு பூஜை நடத்த அனுமதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து இன்று திருவெற்றி யூரில் 1008 திருவிளக்கு பூஜை நடை பெறுகிறது.
- ஆர்.எஸ்.மங்கலம் அருகே 1800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- திருவாடானை நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆர்.எஸ்.மங்கலம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப் படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வட்ட வழங்கல் அலுவலர் கோகிலா தலைமையில் அதிகாரிகள் சிலுக வயல் பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனையிட்ட போது 50 கிலோ எடையுள்ள 36 பிளாஸ்டிக் பையில் 1800 கிலோ ரேசன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், லாரி டிரைவர் பார்த்திபனூர் பெருங்கரையை சேர்ந்த பாலமுருகன்(27) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் வீடுகளில் ரேசன் அரிசியை குறைந்த விலையில் வாங்கி கடத்தி செல்வதாக கூறினார். இது தொடர்பாக குற்றப்பு லனாய்வு பிரிவு துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 1800 கிலோ ரேசன் அரிசி திருவாடானை நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
- ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை எம்.எல்.ஏ., கலெக்டர் தொடங்கி வைத்தனர்.
- ராமேசுவரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல போதுமான பஸ் வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் செயல்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் நகராட்சிநிர்வாகம் மூலம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்தனர்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
ராமநாதபுரம் வளர்ந்து வரும் நகராட்சியாக உள்ளது. பல்வேறு மாவட்ட மக்கள் வந்து செல்லும் பகுதியாக ராமநாதபுரம் உள்ளதால் பெரிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது நகராட்சி நிர்வாகம் மூலம் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 16909.5 சதுரடி பரப்பில் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ராமேசுவரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல போதுமான பஸ் வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் செயல்படும். ஒரு ஆண்டுக்குள் பஸ் நிலைய பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ராமநாதபுரம் நகர்மன்றதலைவர் கார்மேகம், ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் அஜிதாபர்வீன், ராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தேவைகளை முதல்-அமைச்சரிடம் பெற்று பயனடைய வேண்டும்.
- மண்டபத்தில் 18-ந்தேதி நடைபெறும் மீனவர்கள் மாநாட்டில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட–ரங்கில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச் சர் அனிதா ஆர்.ராதாகி–ருஷ் ணன் தலைமையில், கலெக் டர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் மீனவர்களு–டனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமைச் சர் அனிதா ஆர்.ராதாகி–ருஷ்ணன் மீனவர்களின் கோரிக்கை குறித்து கேட்ட–றிந்தார். பின்னர் அவர் கூறி–யதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ராமநாதபுரம் மாவட்டத் திற்கு 18.08.2023 அன்று வருகை தந்து மீனவர்களுட–னான மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீனவர்க–ளின் கோரிக்கைகளை நேர–டி–யாக சந்தித்து கேட்டறிகி–றார். மேலும், வளைகுடா பகுதியில் மீன்பிடி தொழி–லையே பிரதான தொழிலாக இருந்து வரும் மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாது–காத்து நலன் காக்கும் முத–லமைச்சராக தமிழ்நாடு முத–லமைச்சர் இருந்து வருகிறார்.
அவர் ராமநாதபுரம் வருகை தரும் தினத்தில் மீனவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை வழங்க உள்ளார். அதன் முன்னேற் பாடாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் சங்க பிரதிநிதிகளை சந்தித்து அவர்களிடம் முக்கிய தேவை–களை குறித்து கேட்டறி–யப்பட்டது. இந்த–நிலை–யில் 20-க்கும் மேற் பட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அதில் குறிப்பாக மீன்பிடி இறங்கு தளத்தில் உட்கட்ட–மைப்பு மேம்படுத்துதல், டீசல் மானியம் உயர்த்தி தர வேண்டுதல், மீன்பிடி தடைக்காலம் நாட்களை குறைக்க வேண்டுதல், இலங்கை அரசால் பிடிக்கப் படும் படகுகளை மீனவர்க–ளுடன் சேர்த்து விடுதலை செய்ய வேண்டுதல், மீனவர் க–ளுக்கான ஓய்வூதி–யம் வயது வரம்பை உயர்த்து–தல், அரசு நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பதிவு முறை இணையதளத்தில் ஏற்படும் தவறுகளை உட–னுக்குடன் சரி செய்திட வேண்டுதல்,
நீண்ட நாளாக மீனவர்கள் குடியிருக்கும் பகுதியில் மீனவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுதல் போன்ற கோரிக்கைகள் முன்வைத்ததில் இணைய–தளத்தில் பதிவேற்ற முறை–யில் ஏற்பட்டுள்ள தவறு–களை சிறப்பு முகாம் அமைத்து ஒருவார காலத்திற் குள் சரி செய்து அரசு நிவா–ர–ணத்தொகை பெறாத–வர்களுக்கு வழங்கிட நட–வடிக்கை மேற்கொள்ளப்ப–டும்.
அதேபோல் மீன் இறங்கு தளம் மற்றும் மீனவர் குடி–யிருப்பு பகுதிகளில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் மூலம் உயர்மட்ட மின் விளக்குகள் அமைத்து தரப்படும், சாலை வசதிகள், குடிநீர் குழாய் இணைப்புகள் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்து கொடுக்கப்படும். மேலும் மீனவர்களுக்கான முக்கிய கோரிக்கைகள் மற்றும் முக்கிய திட்டப்ப–ணிகளை முதலமைச்சர் வழங்க உள்ளார்.
எனவே 18.08.2023 அன்று நடைபெறுகின்ற மீனவர்கள் மாநாட்டில் குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டு தங்கள் தேவைகளை முதலமைச்சரி–டம் பெற்று பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் புதிய மீன்பிடி இறங்குதளம் அமைப்பதற்கும் மற்றும் குந்துகால், நாலுபனை, பாம்பன் பகுதியில் உள்ள மீன்பிடி இறங்குதளத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் (ராமநா–தபுரம்), செ.முருகேசன் (பரமக்குடி), சென்னை தலைமை பொறியாளர் மீன்பிடி துறைமுகம் வி.–ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, கூடுதல் காவல் கண்காணிப் பாளர் காந்தி, உதவி கலெக் டர் (பயிற்சி) சிவானந் தம், மீன்வளத்துறை துணை இயக்குநர்கள் பிரபாவதி, காத்தவராயன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவள்ளி மற்றும் அரசு அலுவலர்கள், மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வழுதூர் மாரியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
- அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே வழுதூர் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலின் முளைக்கொட்டு உற்சவ விழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு கும்மி ஒயிலாட் டம் ஆகிய நிகழ்ச்சிகள் ஒரு வார காலமாக நடைபெற்றது. கோவி லில் இருந்து வழுதூர் பெரிய ஊரணி பகுதியில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குலவையிட்டு பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக வழுதூர் கிராமத்தை சுற்றி வந்தனர். அதனைத் தொடர்ந்து அனைத்து முளைப்பாரி களையும் பெரிய ஊரணி கரையில் கரைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வழுதூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். இதே போல வாலாந்தரவை, ஏந்தல், பட்டணம் காத்தான், பால்குளம், படவெட்டி வலசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதே போன்ற முளைக்கொட்டு உற்சவ விழா நடை பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ராமநாதபுரம் அருகே உள்ள மல்லல் கண்மாய்க்கு வைகை தண்ணீர் வேண்டும்.
- அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராமநாதபுரம்
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் மழை சரிவர பெய்யாததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய், ஊருணிகளும் தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளித்து வருகின்றன. ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் இருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் மல்லல் கிராமம் உள்ளது.
இந்த கிராமம் ராமநாத புரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வருகின்றது. இந்த மல்லல் கிராமத்தில் உள்ள கண்மாயும் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றது. கண்மாய்க்கு அருகில் உள்ள திருஉத்தரகோசமங்கை, மேலச்சீத்தை, களக்குடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்க்கு வைகை தண்ணீர் வருகிறது.
ஆனால் மல்லல் கண்மாய்க்கு வைகை தண்ணீர் வராததால் கண்மாய் தண்ணீர் இன்றி முற்றிலும் வறண்டு காட்சி யளிக்கிறது. அருகில் உள்ள திருஉத்தரகோசமங்கை, மேலச்சீத்தை, உள்ளிட்ட பல கிராமங்களில் வைகை தண்ணீரை பயன்படுத்தி அந்த கிராமங்களில் உள்ள விவசாயிகள் மிளகாய் மற்றும் நெல் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் மல்லல் கிராமத்தில் கண்மாயில் தண்ணீர் இல்லாமல் வறண்டதால் நெல் விவசா யம், மிளகாய், பருத்தி விவசாயமும் அடியோடு பாதிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக வைகை தண்ணீர் வராததால் இந்த கிராம மக்கள் மழையை மட்டும் நம்பி இருக்கிறார்கள். மழை பெய்து கண்மாய் நிரம்பினால் தான் விவசாய பணியை தொடங்கி வந்தனர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாததால் கண்மாய் வறண்டு விவசாய பணி மேற்கொள்ள முடியாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கண்மாயில் தண்ணீர் இல்லாததால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் அலைந்து வருகின்றன. எனவே இந்த மல்லல் கிராமத்திற்கு வைகை தண்ணீர் வரும் பாதையில் உள்ள ஆக்கிர மிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். தண்ணீர் வரத்து வரும் கால்வாயை தூர்வார வேண்டும்.
மல்லல் கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு வைகை தண்ணீர் கொண்டு வருவ தற்கு தேவையான நடவ டிக்கைகளை தமிழக அரசும், மாவட்ட கலெக்டரும் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆதி திராவிடர்-பழங்குடியினர் மாணவர்கள் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
சென்னை தரமணியில் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற இந்த நிறுவனம் மத்திய அரசின் சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி நிறுவனமாகும்.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்த நிறுவனத்துடன் பிரான்ஸ் நாட்டில் உள்ள கேட்டரிங் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஓட்டல் மேனேஜ்மெண்ட்டில் கடந்த ஆண்டு மனிதவள மேம்பாட்டு மையத்தில் 2-ம் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு பல சிறப்புகளை பெற்ற இந்த நிறுவனத்தில் 12-ம் வகுப்பு முடித்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஓட்டல் மேலாண்மை நிர்வாகம் 3 வருட முழுநேர பட்டப்படிப்பு, 1½ ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டய படிப்பு, மேலும் 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு 1½ ஆண்டு உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் உணவு மற்றும் பான சேவையில் கைவினைத்திறன் படிப்பு, பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு, முன் அலுவலக செயல்பாட்டில் பட்டயப்படிப்பு, ஹவுஸ் கீப்பிங் பட்டயப்படிப்பு, உணவு முறை மற்றும் உணவு சேவை முதுகலை பட்டயப்படிப்பு, விடுதி செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டயப்படிப்பில் விண்ணப்பிக்கலாம்.
படித்து முடித்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமானம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர்தர உணவகங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும்.
இந்த பயிற்சியில் சேர ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். 10, 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த படிப்பிற்கான செலவுகளை தாட்கோ ஏற்றுக்கொள்ளும். ஆரம்ப கால ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம். www.tahdco.com என்ற இணையதளம் மூலமாக இந்த திட்டத்தில் பதிவு செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.
- கீழக்கரையில் வெறி நாய்கள் நடமாட்டத்தால் மாணவ-மாணவிகள் பீதியடைந்துள்ளனர்.
- கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் வழக்கமாக பள்ளிக்கு நடந்து சென்று வந்தனர், தற்போது கீழக்கரையில் அனைத்து பகுதிகளிலும் வெறி நாய் வலம் வருவதால் அச்சமடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வாகனங்களில் பள்ளிக்கு அனுப்பி விடுகின்றனர்.
மக்களை அச்சுறுத்தும் வெறி நாய்களை அப்புறப்படுத்த கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், கீழக்கரை நகர் மக்களை நாய் கடி தொல்லையில் இருந்து பாதுகாக்க தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கீழக்கரை பொதுமக்கள்
100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- மதநல்லிணக்க முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
- விழாவிற்கான ஏற்பாடுகள் தேவேந்திரர்குல வேளாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தேவேந்திரர் நகரில் அமைந்துள்ள வாழவந்தாள் மாரியம்மன் கோவில் 29-ம் ஆண்டு முளைக்கொட்டு திருவிழா கடந்த 25-ந்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
தினமும் இரவு ஆண்கள் ஒயிலாட்டமும், பெண்கள் கும்மியடித்து முளைப்பாரி வளர்த்தனர். செவ்வாய்க் கிழமை இரவு கரகம், அக்னி சட்டி எடுத்தும், புதன் கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனையடுத்து ஆண்கள் ஒயிலாட்டமும், பெண்கள் கும்மியடித்து பின் தேவேந்திரர் நகர் அம்மன் சன்னதியில் தொடங்கி முஸ்லீம் தெரு வழியாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்கா வினுள் நுாற்றுக்கணக்கான முளைப்பாரிகளை சுமந்து சென்ற பக்தர்களுக்கு, ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது.
தர்காவின் முன்புறம் பாரிகள் இறக்கி வைக்கப் பட்டு, கும்மி அடிக்கப் பட்டது. 3 முளைப்பாரிகளை தர்காவின் உள்ளே மக்பரா அமைந்துள்ள இடத்தில் வைத்து உலக நன்மைக் காகவும், நல்ல மழை வளம் வேண்டியும் (பாத்தியா) சிறப்பு துஆ ஓதினர்.
பின்னர் தர்காவை 3 முறை முளைப்பாரி சுமந்து வலம் வந்தனர். முடிவில் சின்ன ஏர்வாடி கடற்கரையில் முளைப்பாரிகளை கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடு கள் தேவேந்திரர்குல வேளாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.






