என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் 400-க்கும் மேற்பட்டவர்களும், தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் தேர்வெழுதினர். இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க அரசு மனநல ஆலோசனை மையம் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் கூறியதாவது:-

    போட்டித்தேர்வு என்பது அனைவரும் வெற்றி பெறக்கூடியது அல்ல. அதற்கான மதிப்பெண்களை நிர்ணயித்து குறிப்பிட்ட நபர்களை தேர்ந்தெடுப்பது தான். அதனால் தேர்வில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். மாணவர்கள் வெற்றி பெற்றால் மகிழ்ச்சியடையலாம். தோல்வி அடைந்தால் துவண்டு விடக்கூடாது. மருத்துவம் மட்டும் படிப்பல்ல, அதற்கு மாற்றாக வேறெதும் உயர்கல்வியை தேர்ந்தெடுக்கலாம். வாய்ப்புகள் நிறைய உள்ளது. மேலும் பல்வேறு போட்டித்தேர்வுகள் உள்ளது.

    பெற்றோரும் தங்களது விருப்பத்தை மாணவர்கள் மீது அதிகம் சுமத்தகூடாது. குடும்பத்தில் அனைவரும் கலந்து ஆலோசித்து மாணவர்களுக்கு எந்த துறை பிடிக்கிறது, எதில் ஆர்வம், ஈடுபாடு உள்ளதை என்பதை கேட்டறிய வேண்டும். அதற்கேற்ப வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஒரு முறை தோற்றால் தோல்வி அடைந்து மனக்கவலை அடைய கூடாது. அடுத்த முறை வெற்றிக்கான வழியை தேட வேண்டும். பெற்றோர், மாணவர்களுக்கு ஆறுதல் அளித்து உறுதுணையாக இருக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு ஆலோசனை வழங்குவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மனநல ஆலோசனை மையத்தை 94860 67686 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஏற்கனவே நீட் தேர்வு எழுத செல்வதற்கு முன்பும், தேர்வு எழுதிய பின்பும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டன. இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஆதனக்கோட்டை அருகே கருக்கலைப்பு செய்த பெண் திடீரென இறந்ததை தொடர்ந்து கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆதனக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள சோத்துப்பாளை கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் விஜய் (வயது 22). மரம் வெட்டும் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு திருமயம் அருகே கல்லுக்குடியிருப்பு பகுதியில் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டபோது, அதே பகுதியை சேர்ந்த அடைக்கண் மகள் ரேவதி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் காதலாக மாறியது. இதனிடையே இருவரும் நெருங்கிப் பழகியதால் சில மாதங்களில் ரேவதி கர்ப்பம் ஆனார். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். பின்னர் இருவீட்டாரும் கலந்து பேசி கடந்த ஜூன் மாதம் விஜய்க்கும், ரேவதிக்கும் திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் ரேவதியின் வயிற்றில் வளர்ந்த கரு போதிய வளர்ச்சி இல்லை என கூறி விஜயின் குடும்பத்தார் ரேவதியின் சம்மதம் இல்லாமலும், அவரது பெற்றோருக்கு தெரிவிக்காமலும் முறைகேடாக கருவை கலைத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரேவதிக்கு அடிக்கடி உடல் உபாதை ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம் உடல்நிலை மோசமடையவே புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதை அறிந்த ரேவதியின் தாய் ராக்கி (60) அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்து, உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சம்மதம் இன்றி கருவை கலைத்ததாக விஜய், அவரது தந்தை முத்தையா (55), தாய் லெட்சுமி (48) ஆகிய 3 பேரை கந்தர்வகோட்டைபோலீசார் கைது செய்தனர். மேலும் ரேவதியின் மரணம் குறித்து உதவி கலெக்டர் விசாரித்து வருகிறார்.
    கல்லூரிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி பிடாரி கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் ரோகிணி (வயது 18). இவர் 12-ம் வகுப்பு முடித்து கல்லூரி செல்வதற்காக பெற்றோரிடம் கேட்டுள்ளார். அப்போது, கொரோனா கால நேரம் என்பதாலும், குடும்ப வறுமை காரணமாகவும் கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளனர்.

    இதனால் மனம் உடைந்த ரோகிணி கடந்த 9-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது, எலி பேஸ்ட் (விஷம்) தின்று மயங்கி கிடந்தார்.

    இதைபார்த்த ரோகிணியின் தாயார் கலையரசி மகளை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன் விடுதியை சேர்ந்தவர் பீர் முகமது (வயது 60). விவசாயி. இவர், கடந்த 9-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அரிமளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    நேற்று முன்தினம் அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்புறம் உள்ள இரும்பு கேட் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவும் திறந்திருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பீர்முகமதுவின் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.

    பீரோவில் இருந்த தங்கநெக்லஸ், காசு மாலை, வளையல்கள், தோடுகள், தங்க ஆரம், தங்க சங்கிலி, மோதிரங்கள் உள்ளிட்ட 60 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை நடைபெற்ற வீட்டை பார்வையிட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

    இதைத்தவிர புதுக்கோட்டையிலிருந்து தடய அறிவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார், வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். பூட்டியிருந்த விவசாயி வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கந்தர்வகோட்டை அருகே சாலை விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தர்வகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், காடனேரி கிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அந்தோணிசாமி (வயது 38) என்பவர் தஞ்சாவூரில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். புனல்குளம் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு வாகனம் அவர்மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், படுகாயம் அடைந்த அந்தோணிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தோணிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மூக்குடி ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம் நடைபெற்றது.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மூக்குடி ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் கிராமத்தை சேர்ந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முககவசம் வழங்கப்பட்டது. மேலும், வெளியிடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிந்து செல்லுமாறும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டது. முகாமில், மருத்துவ அலுவலர் முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஆலங்குடி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட சம்பட்டிவிடுதியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    ஆலங்குடி:

    ஆலங்குடி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட சம்பட்டிவிடுதியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா தலைமை வகித்தார். அப்போது அவர் கூறுகையில், பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வீட்டிற்கு சென்றவுடன் கைகளை சோப்பு மூலமாகமோ, கிருமி நாசினி மூலமாகவோ நன்றாக கழுவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், சம்பட்டிவிடுதி வழியாகச் சென்ற பஸ்களை நிறுத்தி அதில் முககவசம் அணியாமல் சென்ற பயணிகளுக்கு இலவசமாக முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    புதுக்கோட்டை அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 34) . இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொழில் நஷ்டம் காரணமாக அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.
    ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி:

    ஆலங்குடியை அடுத்த பாப்பான் விடுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது50). கூலி தொழிலாளியான இவர் கடந்த 25-ந்தேதி பாப்பான் விடுதி ஆலங்குடி சாலையோரம் நின்றுகொண்டிருந்தார். அப்போது கீழப்பட்டி ராசியமங்கலத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் நடராஜன் படுகாயம் அடைந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடராஜன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிப்காட் அருகே கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    சிப்காட் அருகே உள்ள ரெங்கம்மாள் சத்திரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வெள்ளனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி, சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் உள்ளிட்ட போலீசார் ரெங்கம்மாள் சத்திரம் காமராஜர் நகர் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் மனைவி மல்லிகா (வயது 40) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மல்லிகாவை போலீசார் கைது செய்து, திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    அரிமளம் அருகே தொழிலாளி வீட்டு பீரோவில் இருந்த 6 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம்:

    புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சி மீனாட்சிபுரம் வீதியில் வசித்து வருபவர் முத்தையா. தொழிலாளி. இவரது மனைவி விஜயா (வயது 26). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு சாவியை நிலை கதவு மேல்புறத்தில் வைத்துவிட்டு அரிமளம் மயிலாடும்பாறை பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த தங்க நெக்லஸ், கம்மல் தோடு உள்ளிட்ட சுமார் 6 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முத்தையா அரிமளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
    பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட 11 வயது சிறுமியின் தாயை, கள்ளக்காதலன் வாக்குமூலம் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் கணேசன் (வயது 32). இவருக்கு புதுக்கோட்டையை சேர்ந்த 34 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண் ஏற்கனவே கணவரை பிரிந்தவர். அவரது 11 வயது மகளிடம் கணேசன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்தநிலையில் பாலியல் வன்கொடுமையால் அந்த சிறுமி மனமுடைந்து சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கணேசன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    இந்த சம்பவத்தில் கைதான கணேசன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் போலீசார் அவரை காவலில் எடுத்து நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். இதில் அந்த சிறுமியிடம் 3 மாதங்களுக்கு மேல் பாலியல் தொந்தரவு செய்து வந்தது, சிறுமியின் தாய்க்கு தெரியும் எனவும், அவர் சிறுமியிடம் அனுசரித்து செல்லுமாறு கூறியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

    இதையடுத்து தற்கொலை செய்த சிறுமியின் தாயை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். மேலும் கணேசனிடம் அனுசரித்து செல்லாவிட்டால் இறந்து விடும்படி கூறியதும், அதனாலும் அந்த சிறுமி தற்கொலை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்ததாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுமியின் தாயை நேற்று கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள மகளிர் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.
    ×