search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கைது
    X
    கைது

    பாலியல் வன்கொடுமையால் தற்கொலை: 11 வயது சிறுமியின் தாய் கைது

    பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட 11 வயது சிறுமியின் தாயை, கள்ளக்காதலன் வாக்குமூலம் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் கணேசன் (வயது 32). இவருக்கு புதுக்கோட்டையை சேர்ந்த 34 வயது பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண் ஏற்கனவே கணவரை பிரிந்தவர். அவரது 11 வயது மகளிடம் கணேசன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்தநிலையில் பாலியல் வன்கொடுமையால் அந்த சிறுமி மனமுடைந்து சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கணேசன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    இந்த சம்பவத்தில் கைதான கணேசன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் போலீசார் அவரை காவலில் எடுத்து நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். இதில் அந்த சிறுமியிடம் 3 மாதங்களுக்கு மேல் பாலியல் தொந்தரவு செய்து வந்தது, சிறுமியின் தாய்க்கு தெரியும் எனவும், அவர் சிறுமியிடம் அனுசரித்து செல்லுமாறு கூறியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

    இதையடுத்து தற்கொலை செய்த சிறுமியின் தாயை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். மேலும் கணேசனிடம் அனுசரித்து செல்லாவிட்டால் இறந்து விடும்படி கூறியதும், அதனாலும் அந்த சிறுமி தற்கொலை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்ததாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுமியின் தாயை நேற்று கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள மகளிர் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.
    Next Story
    ×