என் மலர்
புதுக்கோட்டை
அறந்தாங்கி:
அறந்தாங்கி தாலுகா ரெத்தினக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கநாதன் மனைவி ஜோதி (வயது 60). இவரும் அதே ஊரைச் சேர்ந்த லலிதா (80) என்ற மூதாட்டியும் அருகே உள்ள மேய்ச்சல் நிலத்தில் ஆடு மேய்க்க சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக இவர்கள் நின்று கொண்டிருந்த பகுதியில் பலத்த சத்தத்துடன் இடி மின்னல் தாக்கியுள்ளது. இதில் இடி சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைப்பார்த்த லலிதா மயக்கமடைந்தார். அதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த துறை அதிகாரிகள் ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயக்க நிலையில் இருந்த லலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே பிரேத பரிசோதனையை விரைவாக செய்து உடலை ஒப்படைக்கக்கோரி இறந்த ஜோதியின் உறவினர்கள் சிறிது நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆடு மேய்க்க சென்று பெண் மணி ஒருவர் இடி விழுந்த அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அமைந்துள்ளது குளவாய்ப்பட்டி கிராமம். இங்கு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் சாலையோரம் உள்ளது. பூ கட்டும் தொழில் செய்து வருபவர்கள் இந்த கோவிலை நிர்வகித்து வருகிறார்கள்.
காவல் தெய்வமாக கருதப்படும் இந்த கோவிலுக்கு குளவாய்ப்பட்டி மற்றும் அக்கம்பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். தற்போது சுந்தரலிங்கம் என்பவர் கோவிலில் பூஜைகள் செய்து வருகிறார். நேற்று மாலை அவர் வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு சென்றார்.
குளவாய்ப்பட்டி அருகே உள்ள பேராம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 41). டெய்லராக வேலை பார்த்து வரும் அவர் இரவில் குடிபோதையில் அங்கு வந்துள்ளார். திடீரென்று கோவிலுக்குள் சென்ற கண்ணன் சாமி சிலையை கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதுள்ளார்.
பின்னர் அங்காளம்மன் சாமி சிலையை உடைத்துள்ளார். இதில் அந்த சிலை இரண்டாக பிளந்தது. இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த விராலிமலை போலீசார் கண்ணனை கைது செய்தனர்.
இன்று காலை போதை தெளிந்த அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் தனக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளதாகவும், டெய்லர் தொழில் நஷ்டம் அடைந்த விரக்தியில் மது போதையில் சாமி சிலையை உடைத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அம்மன் சாமி சிலை உடைக்கப்பட்டதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர்கள் 27 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு காரணங்கள், வேண்டுகோள்கள் மற்றும் நிர்வாக ரீதியாக இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கோட்டைப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கும், வடகாடு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் காரையூர் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் மழையூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்திற்கும், கோட்டைப்பட்டினம் நெடுஞ்சாலை ரோந்து வாகன சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் ரெகுநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கும், இலுப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ரேஷ்மா திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 27 எஸ்.ஐ.க்கள் இடமாற்ற பட்டியலில் உள்ளனர்.
இதற்கான உத்தரவினை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கலியரான் விடுதி கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மகள் கவுரி (வயது 16). பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 8-ம் வகுப்பு படிக்கும்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசு துறையில் பல்வேறு தகவல்களை கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் முறையான விவரங்கள் கிடைக்கவில்லை. பல அரசு துறைகளில் எந்த புள்ளி விவரங்களும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதைதொடர்ந்து கவுரியின் தந்தை லெட்சுமணன் மதுரை ஐகோர்ட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கடந்த 2 மாதத்திற்கு முன்பு மாணவி கவுரியிடம் காணொலி வாயிலாக விசாரணை நடத்தி கிராம மேம்பாட்டு அறிக்கை குறித்து பாராட்டு தெரிவித்தனர். வழக்கு இறுதி விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மாணவி கவுரியின் திட்ட அறிக்கையை செயல்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதுகுறித்து திட்ட அறிக்கை தயாரித்த கறம்பக்குடி மாணவி கவுரி தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-
எனது திட்ட அறிக்கையை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நல திட்டங்களை செயல்படுத்த புள்ளிவிவர பதிவேடு கட்டாயம். தமிழக நிதியமைச்சர் புள்ளி விவரங்கள் இல்லாதது குறித்து வருத்தம் தெரிவித்து உள்ளார். இதனால் குடும்ப தலைவிகளுக்கும் 1,000 வழங்கும் திட்டம் தாமதம் ஆகி உள்ளது. கிராம புற புள்ளிவிவர பதிவேடு தேச வளர்ச்சிக்கு நிச்சயம் கைகொடுக்கும்.






