என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள எஸ்.குளவாய்ப்பட்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் நளினி பாரதி முன்னிலை வகித்தார்.
கோவேக்சின் 32, கோவிஷீல்டு 92 என மொத்தம், 124 பேர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். இவர்கள் அனைவருமே 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆண்கள், பெண்கள் அனைவருமே சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் தங்கியிருந்த பின்னர் அவரவர் வீடுகளுக்கு சென்றனர்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் நளினி பாரதி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பிஸ்கட், பால் வழங்கினார். முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வீரம்மாள் முத்தையா, கிராம நிர்வாக அலுவலர் உலகநாதன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகர் கல்லுகுண்டுகரையை சேர்ந்தவர் செல்வகணபதி என்ற விஜய் (21). டிரைவரான இவர், சம்பவத்தன்று நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் விஜயை, அரிவாளால் சிலர் வெட்டி கொலை செய்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிந்து மேலசுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த செந்தில் ராஜா, கே.வி.எஸ் தெருவைச் சேர்ந்த தபசுமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய முருகேசன், ராமு, பசுபதி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பாரதி நகர் சுண்ணாம்பு காரத்தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் விஜய் என்ற செல்வகணபதி (வயது 23). படித்துவிட்டு வீட்டில் இருந்த அவர் வைக்கோல் வியாபாரம், எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்று வந்தார்.
இவர் தினமும் ஆலங்குடி கல்லுக்குண்டு பகுதிக்கு தனது நண்பர்களுடன் மது அருந்த செல்வது வழக்கம். நேற்றும் அதேபோல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய விஜய் இரவில் நண்பர்களுடன் கல்லுக்குண்டு பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே மது குடித்துக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு மது குடிக்க வந்த மற்றொரு தரப்பினருடன் மோதல் உருவானது. இதில் விஜய் தரப்பினரும், எதிர் தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். ஒருவருக்கொருவர்கையில் கிடைத்த பொருட்களால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து விஜய் தனியாக வீட்டுக்கு மது போதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கலிபுல்லாநகரில் உள்ள ஒரு கோவில் அருகே சென்றபோது திடீரென்று 10 பேர் கும்பல் விஜயை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
அவர்களிடம் தப்பி ஓட முயன்றபோதும் அந்த கும்பல் தொடர்ந்து துரத்தி வெட்டி சாய்த்துவிட்டு தப்பியது. இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் விஜயை மீட்டு ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜய் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், இன்ஸ்பெக்டர் அலாவுதீன், சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மது போதையில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் காரணமாக விஜய் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே கொலையுண்ட விஜய்யின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் இன்று காலை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை அருகே உள்ள கைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வீரன். இவரது மகள் ராணி (வயது 25). இவருக்கும், பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் ராணி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இந்தநிலையில் திடீரென ராணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் சேர்த்தனர். அப்போது ராணியை பரிசோதனை செய்ததில் அவர் மீண்டும் கருத்தரித்து உள்ளதாக கூறியுள்ளனர். இதை கேட்டு ராணியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், மீண்டும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக ராணி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று காலை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது திடீரென அவர் இறந்து விட்டதாக தெரிகிறது. மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் இறந்ததாக ராணியின் உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் ராணி இறந்து விட்டார் என கூறி அவரது உடலை வாங்க மறுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது உடல் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து ராணியின் உறவினர்கள் டவுன் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் மீண்டும் கருத்தரித்து உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.






