என் மலர்
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை தாலுகாவில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறும் கோரோனோ தடுப்பூசி முகாமில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று வட்டாட்சியர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சி மன்றங்களில் நாளை 12-9-21 அன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து கிராமங்களில் உள்ள துணை சுகாதார நிலையம் அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன் வாடி மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அனைவரும் தவறாது கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தடுப்பூசி போட்டுக் கொள்ள வருபவர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். மேலும், தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஆலங்குடி அருகே பூவரசக்குடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 25). இவர் தனது முகநூலில் புதிய ரக மோட்டார்சைக்கிள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட விளம்பரத்தை பார்வையிட்டார். அதன் லிங்கை அஜித்குமார் கிளிக் செய்த நிலையில் மர்ம ஆசாமி, வாட்ஸ்அப் மூலம் அஜித்குமாரை தொடர்பு கொண்டார்.
மேலும் தான் ராணுவ வீரர் எனவும், தற்போது விஜயவாடா விமானநிலையத்தில் பணியாற்றிவருவதாகவும் கூறினார். மோட்டார் சைக்கிளுக்கானபணத்தை கூகுள் பே மூலம் அனுப்ப கூறினார்.
இதையடுத்து, அஜித்குமாரும் ரூ.44 ஆயிரத்து500ஐ அனுப்பினார். ஆனால் தெரிவித்தப்படி மோட்டார் சைக்கிளை அவர் விற்கவில்லை. இதுகுறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் அஜித் குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை 12.9.21 தேதியன்று தமிழக அரசின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளின்படி, தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.
போலியோ தடுப்பூசி முகாம் நடத்தப்படும்முறையில் தடுப்பூசி பூத்துக்கள் அமைக்கப்பட்டு ஒருபூத்திற்கு குறைந்தது 200 முதல் 300 வரையிலான பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முகாமினை சிறப்புற செயல்படுத்துவதற்காக அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்த உள்ளனர். மேலும் இம்முகாம்களை பயன்படுத்தி இதுவரை தடுப்பூசி போடாமல் விடுப்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இத்தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் கந்தர்வகோட்டை கிளையின் சார்பாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மாதாந்திர ஓய்வூதியம் 9,000 வழங்க வேண்டும், ஒட்டுமொத்த பணப்பலன் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொருளாளர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி அருகே கொடிவயல் வடக்கையை சேர்ந்தவர் சாந்தி (வயது 45). இவர் நேற்று ரெத்தினகோட்டையில் உள்ள அவரது அண்ணன் மகனை பார்த்து விட்டு மீண்டும் ஊருக்கு செல்ல அரசு டவுன் பஸ்சில் ஏறியுள்ளார். பஸ் வல்லவாரி பாலம் அருகே வந்த போது சாந்தி, தனது ஊருக்கு செல்லாத வேறொரு பஸ்சில் ஏறிவிட்டதாக கூறி பஸ்சில் இருந்து அவசரமாக இறங்கினார்.
அப்போது நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் வேலாயுதநகரை சேர்ந்த வீராசாமியின் மனைவி லட்சுமி(வயது 40). இவரது மகள் அபி. பள்ளிமாணவி. அபியுடன், லெட்சுமியின் அக்காள் மகனான வினோத் (20) ஒரு மோட்டார் சைக்கிளில் உடையார்பாளையம் நோக்கி சென்றார்.
அப்போது பாலவேலை நடந்துவரும் பகுதியில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் அபிக்கு பலத்தகாயமும், வினோத்துக்கு லேசான காயமும் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், அதன் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.
அதனையடுத்து கடந்த 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த மாணவிக்கு வீட்டுத் தனிமையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 9-ம் வகுப்பில் மொத்தம் 326 பேர் படித்து வருகின்றனர். ஒரு அறைக்கு 20 நபர்கள் வீதம் 16 அறைகளில் மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது ஒரு மாணவிக்கு தொற்று உறுதியானதைய டுத்து 9-ம் வகுப்பிற்கு இரண்டு நாட்கள் மட்டும் விடுமுறை அளித்து பள்ளித்தலைமை ஆசிரியர் காயத்திரி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அனைத்து மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான மாணவி படித்த அறை மட்டும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் மாணவிக்கு தொற்று உறுதியாகியுள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் ஆலங்குடி அருகே குளமங்கலம் தெற்கு உயர் நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம், நெய்வேலி வட தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் மதியரசன் (வயது 27). இவருக்கு திருமணமாகி 45 நாட்கள் ஆகிறது. இவர், தனது அக்கா மகன் ஆகாஷ் (12) என்ற சிறுவனை அழைத்து கொண்டு வேம்பன்பட்டியில் உள்ள அக்கா வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அம்புக்கோவில் சாலை பிலாவிடுதி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே கறம்பக்குடி அருகே உள்ள தட்டாவூரணியைச் சேர்ந்த சங்கர் (45) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மதியரசன் சம்பவ இடத்திலேயே பலியானார். சங்கர், சிறுவன் ஆகாஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 2 பேரும் மேல்சிகிச்சைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் விபத்தில் இறந்த மதியரசன் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 45 நாட்களில் புதுமாப்பிள்ளை விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






