என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், துடையூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சத்தியா(வயது 35). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று மாலை மாமியாருடன் ஒரு காரில் புறப்பட்டு துடையூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை சத்தியா காரை ஓட்டினார்.
அவர்கள் துடையூர் அருகே வந்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. அந்த வழியாக கார் வந்தபோது மழைநீரில் சிக்கிக் கொண்டது. மாமியார் கார் கதவை திறந்து கொண்டு வெளியேறினார். ஆனால், சீல்ட் பெல்ட் அணிந்து இருந்ததால் சத்தியாவால் உடனடியாக வெளியே வர முடியவில்லை.
சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி சத்தியா உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் மற்றும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கி இறந்த சத்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்த ஒரு பெண்ணும், அவரது மகளும் மருத்துவ சிகிச்சைக்கு பட்டுக்கோட்டை செல்ல கொத்தமங்கலத்தில் இருந்து அறந்தாங்கி செல்லும் டவுன் பஸ்சில் ஏறியுள்ளனர். இருவரும் கீரமங்கலத்தில் இறங்கி பட்டுக்கோட்டை செல்லும் தனியார் பஸ்சில் ஏறி டிக்கெட் எடுக்க பையை தேடினர்.
ஆனால் பையை காணவில்லை. அதில் இருந்த பணம், மருந்து சீட்டும், தொலைந்து போனது. இதனால் நகரம் சன்னதி சாலையில் இறங்கி அவர்கள் அழுது கொண்டு நின்றுள்ளனர். பின்னர் கீரமங்கலம் பஸ் நிலையத்திற்கு நடந்து வந்து, அங்கு இருந்தவர்களிடம் பையை பார்த்தீர்களா என்று கேட்டுள்ளனர். இதற்கிடையில் அறந்தாங்கியிலிருந்து திரும்பி வந்த அதே பஸை நிறுத்தி, டிரைவர் ஜெயராஜியிடம், பையை குறித்து கேட்டனர். அப்போது கண்டக்டர், அந்த பையில் என்ன இருந்தது என்று கேட்ட போது, ரூ.4 ஆயிரத்து 200 மற்றும் மருந்து சீட்டு இருந்ததாக கூறினர். அவர்கள் சொன்னது சரியாக இருந்ததால் பையை அவர்களிடம் ஒப்படைத்தார். பையை பெற்றுக் கொண்ட தாயும், மகளும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
அறந்தாங்கி மீமிசல் கடை வீதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதனால் இப்பகுதியில் இரவு, பகல் என எந்த நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் இப்பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரத்தை முடித்துக்கொண்டு, கடையை பூட்டி விட்டு அதன் உரிமையாளர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இன்று காலை வழக்கம் போல் கடை திறப்பதற்காக உரிமையாளர்கள் வந்த போது அப்பகுதிகளில் தொடர்ந்து 10 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதில் மளிகைகடைகள் 3, மருந்து கடை 1, ஷாப்பிங் சென்டர் 1, கட்டுமான வேலைக்கு பொருட்களை வாடகைக்கு விடும் கடை1, பெட்டிக்கடை 1 ஆகிய 7 கடைகளில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அள்ளிச் சென்றது தெரியவந்தது.
மற்ற 3 கடைகளில் பூட்டை உடைத்த கொள்ளையர்கள், அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து 7 கடை உரிமையாளர்களும் தனித்தனியாக மீமிசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் வழக்கு பதிவு செய்து, கொள்ளை நடந்த பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பிறகு அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்.
மக்கள் அதிகமாக நடமாடும் கடைவீதியில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்த 7 கடைகளில் கொள்ளை நடந்திருப்பது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 1,933 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையை முழுமையாக செலுத்தியுள்ள 376 பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகளை தேர்வு செய்யும் திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்று தங்களுடைய பங்களிப்பு தொகையை செலுத்திய 376 பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் தேர்வு செய்யப்பட்டது. தமிழக அரசின் முன்னோடித் திட்டமாக விளங்கும் இந்த திட்டத்தின்கீழ் குடிசையில் வாழும் பொது மக்கள் இங்கு பயன்பெறுவார்கள்.
இந்த குடியிருப்பு பகுதிகளின் கட்டுமான பணி முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த குடியிருப்பின் தரம் குறித்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. தரம் நன்றாக இருந்தால் மட்டுமே பயனாளிகளிடம் வீடு ஒப்படைக்கப்படுகிறது.
கட்டுமான பணியின் தரம் குறைவு கண்டுபிடிக்கப்பட்டால் ஒப்பந்தகாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பாக சட்டமன்றத்தில் சட்ட முன் வடிவு தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் தமிழக அரசின் அட்டார்னி ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து மேல்முறையீடு செய்யலாம் என்று கூறியதால் தற்போது சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு கொண்டு வரப்படவில்லை

இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 கைதிகள் விடுதலை செய்வது தொடர்பாக சர்ச்சையான கருத்துக்கள் நிலவி வருகிறது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, சட்டத்திற்கு உட்பட்டு நன்னடத்தை காரணமாக அண்ணா பிறந்தநாளையொட்டி கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொடும் குற்றங்கள், குண்டு வெடிப்பு தொடர்பாக சிறையில் உள்ள கைதிகள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை.
திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாமில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்துள்ள அகதிகள் போராட்டம் செய்து வருகின்றனர். ஆனால் அவர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. சிறை துறைக்கும் சிறப்பு முகாமிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை
இவர்கள் விவகாரத்தில் தமிழக அரசு தலையிட முடியாது. அவர்களின் விடுதலை நீதிமன்றத்தின் கையில்தான் உள்ளது. மேலும் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவது தொடர்பாக நீதிமன்றமும், மத்திய அரசும் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.






