search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலைகள் உடைப்பு"

    கோவிலுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை மாற்று சமூகத்தை சேர்ந்தவர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராம எல்லையில் உள்ள பஞ்சமி நிலத்தில் சேலம் மாவட்டம் ஊனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பொதுமக்கள் கன்னிமார் என்ற கோவிலை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.இந்த கோவிலுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை மாற்று சமூகத்தை சேர்ந்தவர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆதிதிராவிட பொதுமக்களுக்கும் மாற்று சமூகத்தை சேர்ந்தவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கடந்த 10 வருடங்களாக கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது சம்பந்தமாக ஆதிதிராவிட பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து முறையாக அனுமதி பெற்று போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 8-ந் தேதி கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் ஊனத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிட கிராம மக்கள் பூசப்பாடி கிராம எல்லையில் உள்ள குலதெய்வமான கன்னிமார் கோவிலில் கிடா வெட்டி வழிபாடு செய்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தனர். அப்பொழுது கோவிலில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்டு, மரங்கள் அனைத்தும் வெட்டி சாய்த்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் இது சம்பந்தமாக போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.கோவில் சிலையை உடைத்து சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று 100-க்கும் மேற்பட்டோர் கோவிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாவிட்டால் தீக்குளிக்க போவதாகவும் சாகும்வரை கோவிலில் இருந்து வெளியேற போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிராம மக்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாகவும், தாசில்தாரை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.அப்போது இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் இந்த இடத்தை விட்டு நகரம் போவதில்லை என கிராம மக்கள் தெரிவித்ததால் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இந்த பேச்சு வார்த்தையில் கோவிலுக்கு செல்ல பாதை ஏற்படுத்தி தருவதாகவும் கோவில் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.இதனால் கிராம மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

    • முனீஸ்வரன் கோவிலில் சுமார் 3 அடி உயரத்திற்கு கற்சிலையால் ஆன கருப்பசாமி சிலையை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
    • சிலைகள் உடைக்கப்பட்ட முனீஸ்வரன் கோவிலில் பாக்கம், வெங்கடாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம்-சித்தூர் சாலையில் பாக்கம் ஊராட்சி பாக்கம் ஏரிக்கரையில் காளியம்மன் கோவில் உள்ளது.

    அதன் அருகிலேயே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் சார்பில் முனீஸ்வரன் கோவில் அமைக்கப்பட்டது.

    இந்த முனீஸ்வரன் கோவிலில் சுமார் 3 அடி உயரத்திற்கு கற்சிலையால் ஆன கருப்பசாமி சிலையை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவிலில் இருந்த 2 சாமி சிலைகளை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்தனர். மேலும் கோவிலில் இருந்த கருப்பசாமி சிலையை திருடி சென்று விட்டனர்.

    இன்று காலையில் கோவிலில் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    சிலைகள் உடைக்கப்பட்ட முனீஸ்வரன் கோவிலில் பாக்கம், வெங்கடாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டனர்.

    இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு குடியாத்தம் டி.எஸ்.பி. ராமமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    சுற்றுப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் கிணற்றில் கருப்பசாமி சிலையை வீசி சென்றுள்ளனரா என ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த விநாயகர் சிலை, நவக்கிரக சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர்.
    • சாமி சிலைகளை சேதப்படுத்திய கும்பலை கைது செய்யக்கோரி 50-க்கும் மேற்பட்டோர் எடையார்பாக்கம்-பிச்சிவாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அடுத்த துலசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிவாக்கம் கிராமத்தில் விநாயகர் கோவில் உள்ளது.

    நேற்று அதிகாலை கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த விநாயகர் சிலை, நவக்கிரக சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர். மேலும் சிலைகளை கோவில் அருகே தூக்கி வீசி சென்றுவிட்டனர்.

    இதேபோல் அதே பகுதியில் உள்ள ஸ்ரீலட்சுமி அம்மன் கோவிலில் பிரகாரத்தின் வெளியில் உள்ள அம்மன் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனர்.

    2 கோவில்களிலும் இருந்த நவக்கிரக சிலைகள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை உள்ளிட்ட 22 சிலைகள் பீடத்தில் இருந்து பெயர்த்து எடுத்து சேதப்படுத்தி தூக்கி வீசப்பட்டு இருந்தது. திரிசூலத்தையும் உடைத்து இருந்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சாமி சிலைகளை சேதப்படுத்திய கும்பலை கைது செய்யக்கோரி 50-க்கும் மேற்பட்டோர் எடையார்பாக்கம்-பிச்சிவாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுங்குவார்சத்திரம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாமி சிலைகளை சேதப்படுத்திய நபர்களை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×