search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 கோவில்களில் 22 சாமி சிலைகள் உடைப்பு- மர்மகும்பல் அட்டகாசம்
    X

    ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 கோவில்களில் 22 சாமி சிலைகள் உடைப்பு- மர்மகும்பல் அட்டகாசம்

    • கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த விநாயகர் சிலை, நவக்கிரக சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர்.
    • சாமி சிலைகளை சேதப்படுத்திய கும்பலை கைது செய்யக்கோரி 50-க்கும் மேற்பட்டோர் எடையார்பாக்கம்-பிச்சிவாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அடுத்த துலசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிவாக்கம் கிராமத்தில் விநாயகர் கோவில் உள்ளது.

    நேற்று அதிகாலை கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த விநாயகர் சிலை, நவக்கிரக சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர். மேலும் சிலைகளை கோவில் அருகே தூக்கி வீசி சென்றுவிட்டனர்.

    இதேபோல் அதே பகுதியில் உள்ள ஸ்ரீலட்சுமி அம்மன் கோவிலில் பிரகாரத்தின் வெளியில் உள்ள அம்மன் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனர்.

    2 கோவில்களிலும் இருந்த நவக்கிரக சிலைகள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை உள்ளிட்ட 22 சிலைகள் பீடத்தில் இருந்து பெயர்த்து எடுத்து சேதப்படுத்தி தூக்கி வீசப்பட்டு இருந்தது. திரிசூலத்தையும் உடைத்து இருந்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சாமி சிலைகளை சேதப்படுத்திய கும்பலை கைது செய்யக்கோரி 50-க்கும் மேற்பட்டோர் எடையார்பாக்கம்-பிச்சிவாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுங்குவார்சத்திரம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாமி சிலைகளை சேதப்படுத்திய நபர்களை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×