என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    அறந்தாங்கியில் திராவகம் குடித்த 4 குழந்தைககளின் தாய் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி சின்ன வாட்டர் டேங்க் பகுதியை சேர்ந்தவர் யோகாம்பாள் (வயது 54). இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் ஒரு மகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அவர் தனது தாயிடம் செல்போனில் சரிவர பேசுவது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உளைச்சலில் இருந்த யோகாம்பாள் நேற்று கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை(திராவகம்) எடுத்து குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். 

    அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடப்பன் வயல் இறைவன் நகர் பகுதியில் ஒரு இடத்தில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை போலீசார் கண்டனர். அவர்களில் 2 பேரை போலீசார் பிடித்த நிலையில் 3 பேர் தப்பி ஓடி விட்டனர். 

    பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் அடப்பன்வயலை சேர்ந்த குமார் (வயது 25), ராஜகோபால் (24) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, மிளகாய் பொடி, கயிறு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோட்டைப்பட்டினம்:

    புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள சிறுகடவாகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 32). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். அன்று இரவு வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 8 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து மீமிசல் போலீசில் குமார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ஆவூர் அருகே பொக்லைன் எந்திர டேங்கில் இருந்து டீசல் திருடிய தந்தை, மகன்கள் உள்பட 3 பேர்கைது செய்யப்பட்டனர்.
    ஆவூர்:

    தஞ்சாவூரில் இருந்து திருச்சி மாவட்டம் துவாக்குடி, புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் மற்றும் இலுப்பூர் வழியாக மதுரைக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல், டீசல் பைப்லைன் செல்கிறது. இதன் அருகே எரிவாயு குழாய் பதிப்பதற்கான வேலை தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது மண்டையூர் பகுதியில் நடைபெற்று வரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்படும் பொக்லைன் எந்திரம் உள்ளிட்ட வாகனங்கள் பணி முடிந்தவுடன் இரவு நேரத்தில் அப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது வழக்கம்.

    வாகனங்களை பாதுகாக்கும் பணியில் மூர்த்தி (வயது 36) என்ற நபர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் உள்ள டீசல் டேங்கில் இருந்து அடிக்கடி டீசல் திருட்டு போவதாக வாகன டிரைவர்கள் புகார் கூறி வந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று அதிகாலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பொக்லைன் எந்திரத்தில் இருந்து டீசலை திருடிக்கொண்டு 3 நபர்கள் செல்வதை அங்கு காவல் பணியில் இருந்த மூர்த்தி பார்த்து சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த சிலரும், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் டீசல் திருடிக் கொண்டு சென்ற 3 பேரையும் கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே உள்ள பேராம்பூர் கல்லுப்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (52) மற்றும் அவரது மகன்கள் தேவராஜ் (22), பிரகாஷ் (19) என்பதும் தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரும் தொடர்ந்து அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களில் உள்ள டீசல் டேங்கில் இருந்து டீசலை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அவர்கள் 3 பேரையும் கைது செய்த மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் அவர்களிடம் இருந்து 45 லிட்டர் டீசல், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.

    மேலும் மண்டையூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட தேவராஜ் ஏற்கனவே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பைப்லைன் பணியில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்ததும், அப்போது அங்குள்ள வாகனங்களில் டீசல் திருட்டில் ஈடுபட்டதால் அவரை பணியிலிருந்து நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
    காரில் கஞ்சா கடத்திய வழக்கில் 2 வாலிபர்களுக்கு தலா 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் இருந்து மதுரைக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி கஞ்சா கடத்தி வந்த காரை, பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே போலீசார் சோதனைக்காக வழிமறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. இதனை கண்ட போலீசார் தங்களது வாகனத்தில், அந்த காரை சினிமா பாணியில் பின்தொடர்ந்து துரத்திச்சென்று பிடித்தனர்.

    அப்போது காரை ஓட்டிய நபர் போலீசாரை தாக்குவதற்காக காரில் இருந்து ஏதோ துப்பாக்கியை எடுப்பது போல் ஆயுதத்தை எடுக்க முயன்றார். இதனால் சுதாரித்து கொண்ட போலீசாரில் ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். இதையடுத்து காரை ஓட்டியவரும், காரில் இருந்த மற்றொருவரும் காரின் கதவுகளை திறந்து தப்ப முயன்றனர். அப்போது போலீசார் துப்பாக்கி முனையில் அவர்கள் 2 பேரையும் பிடித்தனர். மேலும் போலீசார் அந்த காரை சோதனை செய்து, அதில் இருந்த 180 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரில் கஞ்சா கடத்தி வந்த மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த முத்துவின் மகன் முனியசாமி என்ற படை முனியசாமி(வயது 31), ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள எருமைகுளம் பகுதியை சேர்ந்த சிறை மீட்டான் மகன் வழிவிடும் முருகன் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை காரில் கடத்தி வந்த முனியசாமி, வழிவிடும்முருகன் ஆகியோருக்கு தலா 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சத்து 5 ஆயிரமும் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து முனியசாமியையும், வழிவிடும்முருகனையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    விராலிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா பொய்யாமணி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 35). இவர், பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். வீட்டில் அவரது தாயார் செல்லம்மாள் (58) மட்டும் தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21-ந் தேதி காலை செல்லம்மாள் வீட்டை பூட்டிவிட்டு மாடு மேய்க்க சென்று விட்டார். பின்னர் மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு உள்ள அரையின் பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து செல்லம்மாள் விராலிமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 16 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    கோட்டைப்பட்டினம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விவசாயி பலியானார். வாலிபர் படுகாயமடைந்தார்.
    கோட்டைப்பட்டினம்:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள கீழச்சேரி பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 57). விவசாயி. இவர் தற்போது குடும்பத்துடன் கோட்டைப்பட்டினம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர், தனது மோட்டார் சைக்கிளில் ஜெகதாப்பட்டினம் சென்றுவிட்டு பின்னர் கோட்டைப்பட்டினம் திரும்பி வந்து கொண்டிருந்தார். கோட்டைப்பட்டினம் பாலம் அருகே வந்தபோது எதிரே கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சாம்ராஜ் (32) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், காளிமுத்து ஓட்டி வந்தமோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதின.

    இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காளிமுத்துவை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காளிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், இந்த பாலத்தில் இரண்டு குழிகள் உள்ளன. இதனால் இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்கள் இந்த குழிக்குள் விட்டு விடுவதால் கீழே விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இது வரை இந்த பாலத்தில் பத்துக்கும் மேற்பட்ட விபத்துகள் நடைபெற்றுள்ளன. ஆகையால் நெடுஞ்சாலைத்துறையினர் இந்த பாலத்தில் உள்ள குழிகளை சரி செய்தால், இந்த விபத்தினை தடுத்து இருக்கலாம் என்று கூறினர்.
    ஆவூர் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவூர்:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்வதே தடுக்கவும், டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் நேற்று மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி தலைமையிலான போலீசார் மாத்தூர், ஆவூர், பேராம்பூர் ஆகிய பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பேராம்பூரில் சாத்திவயல் ரோட்டில் உள்ள குளக்கரையில் மறைவான இடத்தில் வைத்து கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த நாகராஜ் மகன் காளிமுத்து (வயது 35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    புதுக்கோட்டை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி பாட்டி, பேத்தி ஆகிய 2 பேரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், கீருனூர் அருகே உள்ள மரிங்கிப்பட்டியை சேர்ந்தவர் பச்சைக்கண்ணு மனைவி ராணி (வயது 50). இவரது மகள் ராதிகாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களது மகள் நதிலாஸ்ரீ (7). இவர், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில். மரிங்கிப்பட்டி அருகே சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் நிறைந்துள்ள கல்குவாரி குட்டையில் ராணியும், நதிலாஸ்ரீயும் குளிக்க சென்றனர்.

    குட்டையில் உள்ள பாறையின் மேல் ராணி அமர்ந்து துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது நிதிலாஸ்ரீ எதிர்பாராத விதமாக குட்டையில் விழுந்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்து ராணி குட்டையில் குதித்து பேத்தியை காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியாமல் 2 பேரும் நீரில் மூழ்கினர்.

    இதையடுத்து அங்கு குளித்து கொண்டிருந்த 2 பேரையும் காணவில்லை என்று அருகில் உள்ள குட்டையில் குளித்து கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்தனர். பின்னர் குட்டையில் இறங்கி 2 பேரையும் தேடி பார்த்தனர். அதில் சிறுமியை மட்டும் மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசுமருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் அவரது உடலை வீட்டிற்கு கொண்டு வந்தனர். இதற்கிடையே குட்டையில் தேடி பார்த்து கொண்டிருந்தவர்கள் ராணியையும் பிணமாக மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்தனர். 2 பேரிடம் உடல்களையும் பார்த்த உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க வைத்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரி குட்டையில் மூழ்கி பாட்டி, பேத்தி ஆகிய 2 பேரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    புதுக்கோட்டையில் தனியார் பள்ளியில் பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் ஏற்படுவது மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாக தொடர்ந்து கொண்டே வருகிறது. மாணவிகளுக்கு மட்டுமல்ல சிறிய வகுப்பு மாணவர்களும் இது போன்ற தாக்குதல்களுக்கு ஆளாவதாக புகார்கள் வருகின்றன.

    இந்த சம்பங்கள் இன்றோ, நேற்றோ அல்ல. பல ஆண்டுகளாக இந்தச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி செல்லும் சாலையில், மருப்பினியில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவிக்கு, அந்த வகுப்பின் ஆசிரியர் சண்முகநாதன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர், பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியர் சண்முகநாதனை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி, முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக கல்விஅதிகாரி ராஜேந்திரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பிளஸ்-1 மாணவியிடம் ஆன்-லைன், வாட்ஸ்-அப் மூலம் பாடம் நடத்தும் போது செல்போனில் இரட்டை அர்த்தத்தில் ஆசிரியர் சண்முகநாதன் பேசியுள்ளார். அவர் பணிக்கு சேர்ந்து சில மாதங்கள் தான் ஆனதாம். புகாரின் அடிப்படையில் உடனடியாக அவரை பணி நீக்கம் செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தரப்பில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள். கல்வித்துறை தரப்பில் விசாரணை முடிந்தது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையில் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் ஆசிரியர் சண்முகநாதன் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று இரவு அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    மணமேல்குடி அருகே கல்லூரி சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணமேல்குடி:

    மணமேல்குடியை அடுத்த கொடிக்குளம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன் மனைவி சுகன்யா(வயது 31). இவர் பேராவூரணி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று வழக்கம்போல, தனது இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். கட்டுமாவடி பகுதியில் சென்றபோது அடையாளம் தெரியாத 2 நபர்கள் சுகன்யாவின் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் சுகன்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து மணமேல்குடி போலீசில் சுகன்யா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டம் புனல்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் புனல்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக புனல்குளம், தெத்துவாசல்பட்டி, மஞ்சப்பேட்டை, தச்சங்குறிச்சி, விராலிப்பட்டி, நத்தமாடிப்பட்டி, சோழகம்பட்டி, நொடியூர், கோமாபுரம், சமுத்திரப்பட்டி, கொத்தம்பட்டி, அரியாணிப்பட்டி, காடவராயன்பட்டி, புதுநகர், முதுகுளம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதேபோல குளத்தூர் நாயக்கர்பட்டி துணைமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் குளத்தூர் நாயக்கர்பட்டி, நடுப்பட்டி, சேவியர்குடிகாடு, ஆத்தங்கரைப்பட்டி, சாமிப்பட்டி, கீராத்தூர், பருக்கைவிடுதி, குளத்தூர், மூக்கப்புடையான்பள்ளம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை புனல்குளம் மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×