என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையில் கர்ப்பமாக்கிய காதலியை கோர்ட்டு வளாக கோவிலில் திருமணம் செய்துகொண்ட காதலன், திருமணம் முடிந்தபின் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வடக்குப்பட்டி வடகாடு பகுதியை சேர்ந்தவர் ராம்கி (வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கி உள்ளார். ஆனால் திருமணம் செய்ய மறுத்ததால் ராம்கி மீது ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அந்த இளம்பெண் புகார் கொடுத்தார். அப்போது அவர் 2 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. ராம்கி மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

    இந்த வழக்கு ஆலங்குடியில் உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன்பின் இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ராம்கி இடைக்கால ஜாமீனில் இருந்து வந்த நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறியிருக்கிறார். ஆனால் திருமணம் செய்யாததால் அவர் மீண்டும் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் ராம்கி மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று ராம்கி மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்ப்பமான பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து கோர்ட்டு வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு ராம்கி தனது காதலிக்கு தாலி கட்டினார். அப்போது அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், வக்கீல்கள் உடன் இருந்தனர். திருமணம் முடிந்த பின் ராம்கி சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 776 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சை பெற்றவர்களில் 18 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 144 ஆக அதிகரித்தது. கொரோனாவுக்கு தற்போது 223 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 409 ஆக உள்ளது.
    கோவில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் தங்க நகைகளை உருக்கக்கூடாது என்று எச்.ராஜா கூறினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறுகையில், ருத்ர தாண்டவம் படத்தில் இந்து மக்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்திற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்து சமய அறநிலையத்துறை எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு மதித்து நடக்கவில்லை. கோவில்களில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் தங்க நகைகளை உருக்கக்கூடாது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    சரக்கு வேனில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெக்ஸ்ஸ்டாலின் தலைமையில், போலீசார் இலுப்பூர் அருகே உள்ள கோங்குடிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணல் கடத்தி வந்த சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீசார் ஆவூர் மேலப்பட்டியை பகுதியை சேர்ந்த பாரதிராஜா (வயது 25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.25 ஆயிரத்தை நூதன முறையில் மோசடி செய்தவர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே காரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவரது செல்போன் எண்ணிற்கு மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து தான் பேசுவதாகவும், தங்களுக்கு ஏதேனும் வங்கி தொடர்பாக புகார்கள், குறைகள் ஏதேனும் உள்ளதா? என கேட்டுள்ளார். அப்போது அவரது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவலில் வரும் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.

    இதையடுத்து ராஜேந்திரனும் தனது செல்போன் எண்ணிற்கு வந்த ரகசிய குறியீடு எண்ணை மர்மநபரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த குறியீடு எண்ணை வைத்து ராஜேந்திரனின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.25 ஆயிரத்தை மர்ம நபர் தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளார். இந்த நிலையில் பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து அறிந்த ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    முருகானந்தம் மற்றும் அவரது சகோதரர்கள் பழனிவேல், ரவிச்சந்திரன் ஆகியோர் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வெட்டான்விடுதி அருகே உள்ள கருக்காகாடு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். அ.தி.மு.க. ஆதரவாளரான இவர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காந்திமதி. முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

    முதலில் புதுக்கோட்டையில் பணியில் இருந்த அவர் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். முருகானந்தம் மற்றும் அவரது சகோதரர்களான ரவிச்சந்திரன், பழனிவேல் ஆகியோர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் ஒப்பந்தங்களை எடுத்து நடத்தி வந்தனர்.

    இதில் ரவிச்சந்திரனும் திருவரங்குளத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். முருகானந்தமும், ரவிச்சந்திரனும் அரசு ஊழியர்களாக இருந்த போதிலும் முன்னாள் அமைச்சர் ஒருவரின் துணையோடு அரசு ஒப்பந்தங்களை எடுத்து நடத்தினர்.

    குறிப்பாக எல்.இ.டி. மின் விளக்குகள், பிளீச்சிங் பவுடர் வாங்குவது, அரசு விளம்பர பதாகைகள் வைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அவர்கள் ஒப்பந்ததாரராக இருந்தனர். இதற்காக சகோதரர்கள் மூவரும் கட்சியினர் மற்றும் அதிகாரிகளை தங்கள் கைக்குள் வைத்திருந்தனர்.

    தற்போது முருகானந்தம் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமாக புதுக்கோட்டையில் வணிக வளாகங்கள், திருமண மண்டபம், ஏராளமான நிலங்கள், வீடுகள் உள்ளன. அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் உள்ளாட்சி ஒப்பந்த பணிகளில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக புகார்கள் வந்தன.

    அதுமட்டுமின்றி குறைந்த காலத்தில் பழனிவேல், முருகானந்தம், ரவிச்சந்திரன் ஆகியோர் அளவுக்கு அதிகமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். இது தொடர்பாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முருகானந்தம் மற்றும் அவரது மனைவி காந்திமதி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    அதன் அடிப்படையிலும், புகார்களின் பேரிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 40-க்கும் மேற்பட்டோர், துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவர்மன் தலைமையில் இன்று புதுக்கோட்டை வருகை தந்தனர்.

    அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள ஒப்பந்ததாரர் பழனிவேல் வீடு, வெட்டான்விடுதியில் உள்ள முருகானந்தம் வீடு, கருக்காகாடு பகுதியில் உள்ள சகோதரர்களுக்கு சொந்தமான வீடுகள், புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி எதிரில் உள்ள பிரமாண்டமான விஜய் பேலஸ் வணிக வளாகம் உள்பட 6 இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    காலை 6.30 மணிக்கு அதிரடியாக அலுவலகங்கள், வீடுகளில் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கிருந்தவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. சோதனை நடத்தப்பட்டு வரும் இடங்களில் இருந்து பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், லட்சக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வந்துள்ளன. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

    இதற்கிடையே முருகானந்தம் மற்றும் அவரது சகோதரர்கள் பழனிவேல், ரவிச்சந்திரன் ஆகியோர் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

    லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த அதிரடி சோதனை புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படியுங்கள்... இங்கிலாந்தில் தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சனை - அரசு எடுத்த அதிரடி முடிவு

    பெண்ணிடம் நூதன முறையில் 10 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரிமளம்:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கலிபுல்லா நகரை சேர்ந்தவர் முகமது இத்ரீஸ். இவரது மனைவி நசீரா பானு (வயது 28). இவர் சிவகங்கை மாவட்டம் கண்டனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி கே.புதுப்பட்டிக்கு பஸ்சில் நின்று கொண்டு சென்று கொண்டிருந்தார். இவரது அருகில் உட்கார்ந்து இருந்த பெண் ஒருவர் பையை கொடுங்கள் நான் வைத்திருக்கிறேன் என கேட்டு வாங்கி உள்ளார். பின்னர் கீழாநிலைக்கோட்டை பஸ்நிறுத்தம் வந்ததும் அந்த பெண், நசீமா பானுவிடம் பையை கொடுத்து விட்டு இறங்கி சென்றுவிட்டார். நசீமாபானு கே.புதுப்பட்டி வந்து இறங்கி பையை திறந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த பர்ஸ் காணவில்லை. அதில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.7 ஆயிரமும் காணவில்லை. இது தொடர்பாக நசீமா பானு கொடுத்த புகாரின் பேரில் கே. புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்துடன் தப்பி ஓடிய பெண்ணை தேடி வருகின்றனர்.
    போலீஸ்காரர் அன்பழகன் அஜாக்கிரதையாக செயல்பட்டதோடு, பணியின் போது மது அருந்தியது தொடர்பாக அவர் பணியாற்றி வரும் போலீஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் அன்பழகன். இவர் தனது வாக்கி- டாக்கியுடன் கடந்த 24-ந்தேதி இரவு கீரனூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு ரோந்துப்பணி சென்றார்.

    இதற்கிடையே அவர் ஏற்கனவே பணியாற்றி வந்த ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நெம்மேலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணல் கடத்தும் தொழிலில் ஈடுபட்ட இன்பசுரேஷ் என்பவருக்கும், போலீஸ்காரர் அன்பழகனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

    இந்தநிலையில் அன்பழகனை இன்பசுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் முகேஷ், சீனிவாசன், செந்தில் ஆகிய 4 பேரும் அழைத்து சென்று மது வாங்கி கொடுத்துள்ளனர்.

    போதை தலைக்கேறிய நிலையில் அன்பழகன் வைத்திருந்த வாக்கி-டாக்கி தவறி கீழே விழுந்துள்ளது. அதனை எடுத்துக்கொண்ட மணல் திருடர்கள் 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர். போதை தெளிந்த போலீஸ்காரர் அன்பழகனுக்கு அப்போதுதான் தனது வாக்கி- டாக்கி மாயமானது குறித்து தெரியவந்தது.

    பின்னர் அவர் இதுபற்றி கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அன்பழகனுக்கு மது வாங்கி கொடுத்த 4 பேரும் சேர்ந்து வாக்கி-டாக்கியை திருடியது தெரிய வந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர். அதன்பேரில் வாக்கி- டாக்கியை திருடிய இன்ப சுரேஷ் உள்பட 4 பேரையும் கைது செய்த போலீசார் வாக்கி-டாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் சமரசம் பேச சென்ற போலீஸ்காரர் அன்பழகன் அஜாக்கிரதையாக செயல்பட்டதோடு, பணியின் போது மது அருந்தியது தொடர்பாக அவர் பணியாற்றி வரும் போலீஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்பேரில் தீவிர விசாரணை நடத்திய புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், போதையில் வாக்கி- டாக்கியை தவற விட்ட போலீஸ்காரர் அன்பழகனை இன்று சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இதையும் படியுங்கள்... 165 ஆண்டு கால வரலாற்று பெட்டகமாக எழும்பூர் போலீஸ் அருங்காட்சியகம்

    புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் மருதன் கோன்விடுதி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் சோதனை நடத்தியபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து விற்பனைக்கு வைத்திருந்த 90 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து முகமது அலி, முகமது யூசுப், பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பஸ்சில் பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணமேல்குடி:

    மணமேல்குடி அருகே கணேசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆத்மநாதன் மனைவி மாசிலா. இவர், கட்டுமாவடியிலிருந்து ராமநாதபுரத்திற்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். மணமேல்குடி பஸ் நிலையத்தில் பஸ் நின்றபோது மாசிலாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை யாரோ திருடி சென்றனர். இதுகுறித்து மாசிலா மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கறம்பக்குடி முருகன் கோவிலை அகற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பில் கெடு‘ விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் 45 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர், சிவலிங்கம், தெட்சிணாமூர்த்தி, நவக்கிரகம், துர்க்கை உள்ளிட்ட சாமிகளின் சன்னதிகளும் உள்ளன. சங்கடகர சதுர்த்தி, சஷ்டி, பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் இந்த கோவிலில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். இதைதவிர இந்த கோவிலில் உள்ள பழனி பாதயாத்திரை குழு, பங்குனி உத்திர ரத யாத்திரை குழு மூலம் ஆன்மிக, சமூக பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், முகூர்த்த நாட்களில் ஏழை மக்களின் இல்ல திருமணங்களும் எளிய முறையில் நடைபெற்று வருகிறது.

    இந்தகோவில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாகவும், அதனை அகற்ற வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் முருகன் கோவிலை அகற்ற உத்தரவிட்டனர். கோர்ட்டு உத்தரவின்பேரில், கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு கோவிலை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் வந்தனர். அப்போது பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கோவிலை அகற்றும் முயற்சியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கைவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து முருகன் கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன் முருகன் கோவிலை அகற்ற மீண்டும் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் கோவில் நிர்வாகத்திற்கு நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் கொடுத்தனர். அதில் நீதிமன்ற உத்தரவுபடி முருகன் கோவிலை கோவில் நிர்வாகத்தினரே ஒரு மாதத்திற்குள் அகற்றி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கோவில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் நெடுஞ்சாலைதுறை சார்பில் முருகன் கோவில் நிர்வாகத்திற்கு நேற்று மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் வருகிற 29-ந் தேதிக்குள் முருகன் கோவிலை முழுமையாக இடித்து அகற்றி கொள்ள வேண்டும், இல்லையேல் அன்றையதினம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோவில் இடித்து அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

    இதனால் பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர். இதுகுறித்து பெண் பக்தர்கள் கூறுகையில், கோவிலை அகற்ற முயல்வது வருத்தமாக உள்ளது. கோவில் அமைந்துள்ள சாலை விசாலமானது. கோவிலால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எனவே, கோவிலை அகற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    வடகாடு பகுதியில் நடவுப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாரம்பரிய நெல் ரகங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    வடகாடு:

    வடகாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி நெல் நடவு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். வழக்கமாக இப்பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக சம்பா மற்றும் குறுவை நெல் சாகுபடி பணிகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டும் சம்பா நடவு பணிக்காக விவசாயிகள் தங்களது நெல் வயல்களை உழுது தயார் படுத்தியுள்ளனர். புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி அந்த நிலங்களில் தற்போது நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனினும் குளங்களுக்கு செல்லும் வரத்து வாரிகள் இன்னும் சீரமைக்க படாமல் இருப்பதாகவும் இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் குறை கூறுகின்றனர்.

    மேலும் நெல் பயிருக்கான நெல் காப்பீட்டு திட்டத்தையும் அறிவிக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு இப்பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டும் இதுநாள் வரை காப்பீடு தொகை கிடைக்கவில்லை, அதனை வழங்க வேண்டும் என்றும், இப்பகுதிகளில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய விவசாயிகளை அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், பாரம்பரிய விதை நெல்லை மானியவிலையில் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ×