என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 957 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 17 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 336 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 209 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 412 ஆக உள்ளது.
    கடந்த சில நாட்களாக ரூ.10 முதல் ரூ.20 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    அன்னவாசல்:

    சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களில் தக்காளியும் ஒன்றாகும். கடந்த மாதம் கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை தக்காளி விற்பனையானது. இந்த விலை கட்டுபடியாகாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்தநிலையில், சாகுபடி பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையாலும், தக்காளி வரத்து குறைந்ததாலும் அதன்விலை கிடுகிடு வென உயர்ந்து தற்போது ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது‌. தக்காளியின் விலை திடீரென உயர்ந்ததால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

    விலை உயர்வு காரணமாக வழக்கமாக ஒரு கிலோ வாங்கும் இல்லத்தரசிகள் அரை கிலோவும், அரை கிலோ வாங்குபவர்கள் கால் கிலோவும் வாங்கியதை காண முடிந்தது. அதேவேளையில் இந்த விலை உயர்வு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், கடந்த சில நாட்களாக ரூ.10 முதல் ரூ.20 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை அருகே நத்தமாடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகேசன். இவர், தனது மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்க்கும் போது, மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்று விட்டது தெரியவந்தது. இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோட்டைப்பட்டினம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோட்டைப்பட்டினம்:

    கோட்டைப்பட்டினம் அருகே மீமிசலை அடுத்த கோபாலப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமுகமது. இவரது மனைவி தாஜி நிஷா (வயது 39). இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாஜி நிஷா தன் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். வலி தாங்க முடியாமல் தாஜி நிஷா அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த மீமிசல் போலீசார் தாஜிநிஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை:

    விராலிமலை தாலுகா வடக்கு ஆண்டியப்பட்டியை சேர்ந்தவர் கணபதி (வயது 57). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு கணபதி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் அருகே உள்ள அவர்களுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் இருந்துள்ளனர். இவரது மகன் ராஜேந்திரன் (22) வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் நடந்து வந்த ராஜாளிப்பட்டி காலனியை சேர்ந்த முத்துசாமி மகன் கவியரசனை (20) அழைத்து விசாரித்தனர். அதற்கு அவர் நாடகம் பார்க்க மணப்பாறையில் உள்ள குமாரப்பட்டிக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதனையடுத்து ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த தங்க நகை, ஒரு ஜோடி கொலுசு மற்றும் செல்போன் ஆகியவை திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ராஜேந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கவியரசனை துரத்திப்பிடித்து விராலிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த விராலிமலை போலீசார் கவியரசனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும் இதற்கு துணையாக இருந்த அவரது நண்பர்களான ராஜாளிபட்ட காலனி, மணப்பாறையை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பொதுமக்களிடம் அதிகம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 914 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 9 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 295 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் தற்போது 207 பேர் உள்ளனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 412 ஆக உள்ளது.

    ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட முள்ளூரைச்சேர்ந்த 20 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 671 ஆக உயர்ந்த நிலையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 15 பேர் இறந்துள்ள நிலையில் 652 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 735 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதற்காக 1 லட்சத்து 11 ஆயிரம் டோஸ்கள் வந்துள்ளதாக கலெக்டர் கவிதாராமு தெரிவித்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 5-வது மெகா தடுப்பூசி முகாம் 735 இடங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமிற்காக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1 லட்சத்து 11 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வந்துள்ளது. மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 64 சதவீதம், 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 19 சதவீதம் பேர் ஆவார்கள்.

    2-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் பற்றி வீடு, வீடாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில் 94 ஆயிரம் பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. அவர்கள் நாளை நடைபெறும் முகாமில் தடுப்பூசி செலுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போன்றவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 92 சதவீத நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதியவர்களுக்கு தடுப்பூசி முகாமில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவார்கள். எனவே கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 497 கிராம ஊராட்சிகளில் இதுவரை 134 ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று பிற ஊராட்சிகளிலும் 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி விரைவில் முடிவடையும்.

    மண் ஈரமாக இருப்பதால் அதனை உடனடியாக அகற்ற முடியவில்லை. அந்த மண்ணை உரமாக பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 57 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. 5 நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விராலிமலை அருகே கோவிலின் பூட்டை உடைத்து குத்து விளக்குகளை திருடி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    விராலிமலை:

    விராலிமலை அருகே விராலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூமீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு நடையை சாத்தி விட்டு பூசாரி தனது வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கோவில் உள்ளே சென்று பார்த்தபோது தொங்கு விளக்கு மற்றும் 3 செட் குத்துவிளக்குகளை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 1272 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு தற்போது 198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 412 ஆக உயர்ந்துள்ளது.
    இலுப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர் அருகே வளதாடிப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.இவரது மனைவி மாலதி (வயது 37). இவர்களது மகன் கேசவன் (17). தாய்-மகன் இருவரும் நேற்று வாளதாடிப்பட்டியில் இருந்து இலுப்பூரில் நடக்கும் வாரச்சந்தைக்கு பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை கேசவன் ஓட்டினார். பிலிப்பட்டி வடுவன்குளம் அருகே சென்ற போது மாடு ஒன்று குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது அப்போது மாடுமீது மோதாமல் இருக்க கேசவன் பிரேக் போட்டபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தலையில் படுகாயமடைந்த கேசவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மாலதி படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெக்ஸ்ஸ்டாலின் உள்ளிட்ட போலீசார் படுகாயம் அடைந்த மாலதியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கேசவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நிஜாம் காலனியை சேர்ந்தவர் தில்சத் பேகம். இவருடைய கணவர் இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தில்சத் பேகம் வீட்டை பூட்டிவிட்டு தன் மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கணேஷ் நகர் போலீசாருக்கும், தில்சத் பேகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வீட்டுக்கு வந்த தில்சத்பேகம், உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தில்சத்பேகம் கணேஷ் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை மாதிரிகள் எடுக்கப்பட்டது. மேலும் திருடுபோன வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் உள்ள பதிவை ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் 7 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    புதுக்கோட்டை அருகே எவ்வித அனுமதியின்றி காப்பகம் நடத்தியது தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியை மற்றும் அவரது கணவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை அரசு உயர் நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை கலைமகள் தனது கணவர் ராஜேந்திரன் என்பவருடன் சேர்ந்து எவ்வித அனுமதியும் பெறாமல் குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வந்தார். அதன் மூலம் வெளிநாடுகளில் சுய ஆதாயத்திற்காக நிதியும் திரட்டியுள்ளார்.

    இந்த நிலையில் அனுமதியின்றி செயல்பட்ட காப்பகத்தை குழந்தைகள் நல அலுவலர் குணசீலி தலைமையில் ஏற்கனவே மூடப்பட்டது. ஆனால் விதிகளை மீறி காப்பகத்தை மறுபடியும் அனுமதி பெறாமல் திறந்து நடத்தியதும், குழந்தைகளை உரிய முறையில் பராமரிக்காமல் இருந்ததோடு, அவர்களை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தியதும் தெரிந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் குழந்தைகள் காப்பகம் மீண்டும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையே அரசு பள்ளியில் கலைமகள் ஆசிரியராக பணியாற்றி வந்த காரணத்தினால் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தி ஆசிரியை கலைமகளுக்கு அரசு அனுமதியின்றியும், அரசு ஊழியர்கள் செயல்பாட்டை மீறிய குற்றத்திற்காகவும் அரசு பணியாளர் நன்னடைத்தை விதி 17(பி) குற்ற நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

    இதற்கு அவர் கொடுக்கும் தகவல் அடிப்படையில் மேல் நடவடிக்கை இருக்கும். இருந்தபோதிலும் தற்போது அன்னவாசல் போலீசார் கலைமகள் மற்றும் அவரது கணவர் ராஜேந்திரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை போலீசார் கைது செய்யும் பட்சத்தில் கலைமகள் பணியிலிருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இச்சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×