search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நாளை 735 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்: 1 லட்சத்து 11 ஆயிரம் டோஸ்கள் வந்தன - கலெக்டர் தகவல்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 735 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதற்காக 1 லட்சத்து 11 ஆயிரம் டோஸ்கள் வந்துள்ளதாக கலெக்டர் கவிதாராமு தெரிவித்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 5-வது மெகா தடுப்பூசி முகாம் 735 இடங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமிற்காக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1 லட்சத்து 11 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வந்துள்ளது. மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 64 சதவீதம், 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 19 சதவீதம் பேர் ஆவார்கள்.

    2-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் பற்றி வீடு, வீடாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில் 94 ஆயிரம் பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. அவர்கள் நாளை நடைபெறும் முகாமில் தடுப்பூசி செலுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போன்றவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 92 சதவீத நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதியவர்களுக்கு தடுப்பூசி முகாமில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவார்கள். எனவே கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 497 கிராம ஊராட்சிகளில் இதுவரை 134 ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று பிற ஊராட்சிகளிலும் 100 சதவீதம் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி விரைவில் முடிவடையும்.

    மண் ஈரமாக இருப்பதால் அதனை உடனடியாக அகற்ற முடியவில்லை. அந்த மண்ணை உரமாக பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 57 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. 5 நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×