என் மலர்
செய்திகள்

ரூ.100 கோடிக்கு மேல் சொத்து குவிப்பு- அரசு ஊழியர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வெட்டான்விடுதி அருகே உள்ள கருக்காகாடு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். அ.தி.மு.க. ஆதரவாளரான இவர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காந்திமதி. முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
முதலில் புதுக்கோட்டையில் பணியில் இருந்த அவர் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். முருகானந்தம் மற்றும் அவரது சகோதரர்களான ரவிச்சந்திரன், பழனிவேல் ஆகியோர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் ஒப்பந்தங்களை எடுத்து நடத்தி வந்தனர்.
இதில் ரவிச்சந்திரனும் திருவரங்குளத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். முருகானந்தமும், ரவிச்சந்திரனும் அரசு ஊழியர்களாக இருந்த போதிலும் முன்னாள் அமைச்சர் ஒருவரின் துணையோடு அரசு ஒப்பந்தங்களை எடுத்து நடத்தினர்.
குறிப்பாக எல்.இ.டி. மின் விளக்குகள், பிளீச்சிங் பவுடர் வாங்குவது, அரசு விளம்பர பதாகைகள் வைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அவர்கள் ஒப்பந்ததாரராக இருந்தனர். இதற்காக சகோதரர்கள் மூவரும் கட்சியினர் மற்றும் அதிகாரிகளை தங்கள் கைக்குள் வைத்திருந்தனர்.
தற்போது முருகானந்தம் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமாக புதுக்கோட்டையில் வணிக வளாகங்கள், திருமண மண்டபம், ஏராளமான நிலங்கள், வீடுகள் உள்ளன. அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் உள்ளாட்சி ஒப்பந்த பணிகளில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக புகார்கள் வந்தன.
அதுமட்டுமின்றி குறைந்த காலத்தில் பழனிவேல், முருகானந்தம், ரவிச்சந்திரன் ஆகியோர் அளவுக்கு அதிகமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். இது தொடர்பாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முருகானந்தம் மற்றும் அவரது மனைவி காந்திமதி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையிலும், புகார்களின் பேரிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 40-க்கும் மேற்பட்டோர், துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவர்மன் தலைமையில் இன்று புதுக்கோட்டை வருகை தந்தனர்.
அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள ஒப்பந்ததாரர் பழனிவேல் வீடு, வெட்டான்விடுதியில் உள்ள முருகானந்தம் வீடு, கருக்காகாடு பகுதியில் உள்ள சகோதரர்களுக்கு சொந்தமான வீடுகள், புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி எதிரில் உள்ள பிரமாண்டமான விஜய் பேலஸ் வணிக வளாகம் உள்பட 6 இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
காலை 6.30 மணிக்கு அதிரடியாக அலுவலகங்கள், வீடுகளில் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கிருந்தவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. சோதனை நடத்தப்பட்டு வரும் இடங்களில் இருந்து பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், லட்சக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வந்துள்ளன. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
இதற்கிடையே முருகானந்தம் மற்றும் அவரது சகோதரர்கள் பழனிவேல், ரவிச்சந்திரன் ஆகியோர் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த அதிரடி சோதனை புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... இங்கிலாந்தில் தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சனை - அரசு எடுத்த அதிரடி முடிவு