search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீரமங்கலம் அருகே பாண்டிக்குடி கிராமத்தில் வரிசையாக பனை மரங்கள் வளர்ந்திருப்பதை படத்தில் காணலாம்.
    X
    கீரமங்கலம் அருகே பாண்டிக்குடி கிராமத்தில் வரிசையாக பனை மரங்கள் வளர்ந்திருப்பதை படத்தில் காணலாம்.

    ஆயிரக்கணக்கான பனைமரங்களை வளர்த்து சாதனை - பாண்டிக்குடி கிராம மக்கள் அசத்தல்

    பாண்டிக்குடி கிராமத்தில் 60 ஏக்கர் குளத்தில் ஆயிரக்கணக்கான பனைமரங்களை பொதுமக்கள் வளர்த்து சாதனை புரிந்துள்ளனர்.
    கீரமங்கலம்:

    பனை மரங்களால் நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டு வறட்சி ஏற்படாமல் இருக்கும் என்பதால் கடந்த சில வருடங்களாக இளைஞர்கள் பனை மரங்களை நட்டு வளர்த்து வருகிறார்கள். மற்றொரு பக்கம் வளர்ந்த பனை மரங்களை செங்கல் சூலைகளுக்கு விறகுக்காக சிலர் வெட்டி வருகிறார்கள்.

    புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டதால் சமூக ஆர்வலர்கள் அதற்கு எதிராக போராடி வந்தனர். இந்த நிலையில் பனை மரங்களை வெட்ட தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள பாண்டிக்குடி கிராமத்தில் கடந்த 1984-ம் ஆண்டு முதல் அப்பகுதியில் உள்ள சுமார் 60 ஏக்கர் குளத்தில் பனை விதைகளை விதைத்து ஆயிரக்கணக்கான பனை மரங்களை வளர்த்துள்ளனர் கிராம மக்கள். இதுகுறித்து மகாகவி பாரதி நற்பணி மன்றத்தை சேர்ந்த திருப்பதி கூறியதாவது:-

    எனக்கு 26 வயது இருக்கும் போது ஒவ்வொரு கிராமத்திலும் தேசிய தலைவர்கள் பெயரில் நற்பணி மன்றங்கள் தொடங்கி ஏதாவது நலப்பணிகள் செய்வார்கள். அதேபோல் தான் பாண்டிக்குடி கிராமத்தில் மகாகவி பாரதி நற்பணி மன்றத்தை தொடங்கி 60 ஏக்கர் பரப்பளவுள்ள பாண்டிக்குளத்தில் பனை மரங்களை வளர்க்க திட்டமிட்டோம். இளைஞர்களும் முன்வந்தார்கள்.

    ஊர் ஊராக சென்று பனை விதை சேகரித்து சிறுவர்களுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து பனை விதைகளை விதைக்கச் செய்தோம். இப்படியே சுமார் 37 வருடங்களில் ஆயிரக்கணக்கான பனைமரக்காட்டை உருவாக்கிவிட்டோம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.

    இப்போது நாங்கள் நட்ட பனை மரங்களில் இருந்தே விதை சேகரித்து மீண்டும் விதைக்கிறோம். இப்போதைய இளைஞர்களும் ஆர்வமாக பனை விதை விைதக்கிறார்கள். பனைமரக்காடு உருவான பிறகு பல உயிரினங்களும் இங்கே வாழ்கிறது. எங்கள் கிராமத்தில் உள்ளவர்களில் நுங்கு தேவையும் பூர்த்தியாகிறது. இதேபோல் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் முன்வந்து பனை விதை விதைத்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    சத்தமில்லாமல் பல ஆயிரம் பனைமரங்களோடு பனைமரக்காட்டை உருவாக்கிய மகாகவிபாரதி நற்பணி மன்றத்தினரை இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
    Next Story
    ×