என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • மத வழிபாட்டு தலங்கள், மக்கள் கூடும் இடங்கள், மருத்துவமனைகள் இருப்பதால் அனுமதி மறுப்பு
    • நோட்டீஸை ஏற்காமல், காவல்துறையுடன் பா.ஜனதாவினர் வாக்குவாதம்

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற பாதயாத்திரையை (நடைபயணம்) மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மாவட்டங்களில் நடைபயணத்தை முடித்துள்ளார். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    இந்த நிலையில் காவல்துறை அவரது நடைபயணத்திற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது. யாத்திரை நடைபெறும் பகுதிகளில் மத வழிபாட்டு தலங்கள், மக்கள் கூடும் இடங்கள், மருத்துவமனைகள் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் வழங்கிய நோட்டீஸை ஏற்காமல், அறிவிக்கப்படட வழியில்தான் யாத்திரை நடைபெறும் என பா.ஜனதாவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாற்றுப் பாதையில் அனுமதி வழங்க பா.ஜனதாவடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • புதுக்கோட்டையில் நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார நடைபயிற்சி
    • அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

    புதுக்கோட்டை,

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் - 8 கி.மீ. சுகாதார நடைபயிற்சியினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் புதுக்கோட்டை கருணாநிதி மாவட்ட விளையாட்ட ரங்கிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்திற்கான 8 கி.மீ. தூரம் கொண்ட பாதை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலிருந்து தொடங்கி விளையாட்டு மைதானத்தை ஒரு சுற்று வந்து மாலையீடு சென்று திரும்பவும் அதே வழியாக பால்பண்ணை ரவுண்டானம் சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 8 கி.மீ நடைபயிற்சியினை நிறைவு செய்தனர்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மாலையீடு மற்றும் விளையாட்டு அரங்கில் 2 மருத்துவக்குழுக்களும், நடைபயிற்சி மேற்கொள்ளும் வழியில் 4 இடங்களில் குடிநீர் வசதியும் நடைபயிற்சி நிறைவடைந்தவுடன் பங்கேற்றவர்களுக்கு மூலிகை சூப் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

    மேலும் பிரதிமாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடப்போம் நலம் பெறுவோம் 8 கி.மீ. திட்டம் சுகாதாரத்துறை, அனைத்துதுறைகள், நடைபயிற்சி மேற்கொள்வோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களும் ஒருங்கிணைந்து இத்திட்டத்தில் பங்கேற்று திட்டத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி அனைவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒன்றாக இணைவோம் என்று அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) ராம்கணேஷ் (புதுக்கோட்டை), நமச்சிவாயம் (அறந்தாங்கி), மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், நகராட்சி ஆணையாளர் ஷியாமளா,தாசில்தார் கவியரசன் மற்றும் சாத்தையா, நைனாமுகமது, பாலு உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு
    • பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் லால்குடி எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன் தலைமையில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலையில் நடைபெற்றது.

    புதுக்கோட்டை,  

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் ஆய்வுக் கூட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் லால்குடி எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன் தலைமையில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்களும், எம்.எல்.ஏ.க்களுமான மணப்பாறை அப்துல்சமது, உடுமலைப்பேட்டை உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி கடம்பூர் ராஜு, திருவாடணை இராம.கருமாணிக்கம், செங்கம் மு.பெ.கிரி, பாப்பிரெட்டிபட்டி கோவிந்தசாமி, வாசுதேவநல்லூர் டாக்டர். தி.சதன் திருமலைக்குமார், கந்தர்வக்கோட்டை சின்னதுரை, திருவாரூர் பூண்டி கலைவாணன், விராலிமலை டாக்டர் விஜயபாஸ்கார் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 19 பயனாளிகளுக்கு ரூ.1.78 லட்சம் மதிப்பீலான திருமண உதவி தொகைகளையும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 41 பயனாளிகளுக்கு ரூ.9.20 லட்சம் மதிப்பிலான இயற்கை மரண நிவாரண உதவித் தொகைகளையும், தாட்கோ மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.19.36 லட்சம் மதிப்பிலான மானிய உதவித்தொகை மூலம் வாகனங்களையும், 7 தூய்மை பணியாளார்களுக்கு ரூ.56.63 லட்சம் மதிப்பீட்டில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது.

    முன்னதாக, புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நகர் பணிமனையில், ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் பேருந்து இயக்கம், பேருந்து சீரமைக்கும் பணிகள் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மகளிர் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டம் குறித்தும், அதன் மூலம் நாள் தோறும் பயன்பெற்றுவரும் மகளிரின் எண்ணிக்கை குறித்தும் விரிவாக கேட்டறிந்தனர். அதனைதொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் மாணவிகள் விடுதியினை பார்வையிட்டு, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் விடுதியில் உள்ளனவா என்பது குறித்தும், தினந்தோறும் விடுதியில் வழங்கப்படும் உணவு வகைகள் குறித்தும், மாணவியர்களிடம் கேட்டறிந்தனர். அதனைதொடர்ந்து புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் ஆவின் பால் உற்பத்தி நிறுவனத்தினை பார்வையிட்ட குழுவினர் நாள்தோறும் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு குறித்தும், விற்பனை மற்றும் விநியோகம் குறித்தும், துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.

    புதுக்கோட்டை சிப்காட் பகுதியினை பார்வையிட்ட குழுவினர் அங்கு 7.76 பரப்பளவில் சுமார் 3786 மரங்கன்றுகள் நடப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் பசுமை பூங்காவினை பார்வையிட்டு அதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், சிப்காட் பகுதி முழுவதும் மரக்கன்றுகளை அதிக அளவு நடுவதற்கும், நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். அதனைதொடர்ந்து அன்னவாசல் பகுதியில், மின்சாரம் விநியோகம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின் நிலையத்தினை பார்வையிட்டு, மின் விநியோகம் குறித்தும், பயன்பெறும் கிராமங்களின் எண்ணிக்கையை கேட்டறிந்தனர். இந்நிகழ்வுகளில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர்செல்வி உள்ளிட்ட அரசுத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டையில் கூட்டுறவு மெகா பட்டாசு கடை
    • சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்

    புதுக்கோட்டை,  

    புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில், கூட்டுறவு மெகா பட்டாசுக் கடையினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்த விற்பனை பண்டகசாலை, திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி கூட்டுறவு பண்டகசாலை ஆகிய கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் இந்தாண்டு புதிய தயாரிப்பு பட்டாசு வகைகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட உள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.80 லட்சத்துக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு பட்டாசுகள் விற்பனை இலக்கு ரூ.1 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் கூட்டுறவு மெகா பட்டாசு கடையில் தரமான பட்டாசுகளை வாங்கிக் கொள்ளலாம் என்றார்.

    இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துராஜா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ கவிதை பித்தன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்ற துணை தலைவர் லியாகத்அலி, நகர்மன்ற உறுப்பினர்கள் சரவணன், சந்தோஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    சாலையில் கிடந்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு பொன்னமராவதி பெண்ணின் நேர்மையை பாராட்டிய போலீசார்

    பொன்னமராவதி,  

    பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் ஊராட்சி காடம்பட்டியை சேர்ந்தவர் கோகிலா.

    கூலித்தொழிலாளியான இவர் வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக ரூ.43,500 ரொக்கத்தை எடுத்துக்கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் பொன்னமராவதி சென்றுள்ளார்.

    அப்போது ஏனாதி அருகே இரு சக்கர வாகனத்தில் பணம் வைத்திருந்த கூடை தவறி சாலையில் விழுந்துள்ளது. இதைக்கவனிக்காத கோகிலா பொன்னமராவதி சென்று பணத்தை காணாமல் அதிர்ச்சியடைந்துள்ளார்.

    இந்நிலையில் மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் அமுதா என்பவர் பணி முடித்து அச்சாலையில் வந்த போது சாலையில் கிடந்த பணம் உள்ள கூடையை எடுத்து வந்து பொன்னமராவதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    இதையடுத்து கூடையில் இருந்த ரசீது மூலம் உரியவரை கண்டறிந்த பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் ரமேஷ் கோகிலாவிடம் பணத்தை ஒப்படைத்தார்.

    மேலும் சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த அமுதாவின் நேர்மையை பாராட்டி போலீசார் கௌரவித்தனர்.

    பொன்னமராவதியில்ரூ.4.50 லட்சம் மதிப்பிலான கம்பி திருடியவர் கைது; லாரி பறிமுதல்

    பொன்னமராவதி.  

    பொன்னமராவதி - புதுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் ஸ்டீல் கடையில் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான கம்பிகள் திருடப்பட்டு விட்டதாக கடையின் உரிமையாளர் சாதிக் பாட்சா அளித்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான காவல்து றையினர் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட தடயங்களை கைபற்றி தொடர்ந்து நடத்திய விசாரணையில் கம்பிகளை திருடிய புதுக்கோட்டை பூசத்துறையை சேர்ந்த டீசல்முருகேசன்(வயது 54) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த ரூ.4.50 லட்சம் மதிப்பிலான கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட டீசல் முருகேசன் இதே போன்ற 77 கம்பித்திருட்டு வழக்கில் தேடப்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருவரங்குளம் அரசு பள்ளியில் அமைச்சர்கள் மெய்யநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டனர்
    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலும் ஆய்வு நடைபெற்றது

    ஆலங்குடி,

    தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

    திருமயம் வட்டார கல்வி அலுவலகம் மற்றும் திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அவர் ஆய்வு செய்தார். மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்து, தலைமை ஆசின்யர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நடந்து வருவதை பார்வையிட்டு, பணி மாறுதல் ஆணைகளை, ஆசின்யர்களுக்கு வழங்கினார்.

    இதனைத்தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறும்போது:-

    பள்ளிக் கல்வி துறை சார்பில் 234 தொகுதியிலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆய்வுப் பணி மேற்கொண்டு அங்குள்ள குறைகள், ஆசின்யர்களின் கோன்க்கைகள் என்னென்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த ஆய்வுப் பணி நடந்து வருகிறது.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் நூலகம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதுபோன்று கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளும் போது, ஆசின்யர்களின் கோன்க்கைகள் குறித்து கேட்டு அறிந்து கொள்வதற்கு வசதியாக உள்ளது. கோன்க்கைகள் மட்டுமல்லாமல் என்னென்ன தேவைகள் என்பது குறித்தும் இந்த ஆய்வின் மூலமாக தென்ந்து கொள்ள முடிகிறது. இந்த ஆய்வில் பெறப்படும் ஆலோசனைகள் கருத்துக்கள் ஆகியவற்றை சென்னையில் நடைபெறும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூட்டங்களில் விவாதிப்பதற்கு இது வசதியாக உள்ளது என்றார்.

    • திருவரங்குளம் ஊராட்சியில் ரூ.3 கோடி செலவிலான புதிய மினி ஸ்டேடியம் சிறந்த பசுமை மைதானமாக அமைக்கப்படும்
    • சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல்

    ஆலங்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் ஊராட்சியில் புதிய மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய மினிஸ்டேடியம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினர்.

    இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:-

    200 மீட்டர் 400 மீட்டர் ஓட்டம், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, கோகோ, பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளுக்கான மைதானம் 6 ஏக்கர் பரப்பளவில் இங்கு அமைக்கப்பட உள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சர் ரூ.3கோடி நிதி ஒதுக்கி உள்ளார். விரைவில் மினி ஸ்டேடியம் கட்டி முடிக்கப்பட்டு முதல்-அமைச்சர் திறந்து வைப்பார்.

    எதிர்பார்த்ததை விட சிறப்பாக பசுமை மைதானமாக இந்த மைதானம் அமைக்கப்படும். மிகப்பெரிய வெற்றிகளையும் பதக்கங்களையும் பெற்று இந்த மண்ணிற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் வீரர் வீராங்கனைகளை இந்த மைதானத்தில் இருந்து அனுப்புவோம்

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மெர்சிரம்யா, திருவரங்குளம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, தெற்கு ஒன்றிய செயலாளர் அரு.வடிவேல், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் அருண்ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில்நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள்

    புதுக்கோட்டை,  

    புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டும், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, நடையக்குடி, லேணாவிலக்கு எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே கீரமங்கலம், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, குளமங்கலம், வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், செரியலூர், பனங்குளம், நகரம், ஆவணத்தான்கோட்டை, ராஜேந்திரபுரம், பெரியாளூர், குளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி, திருப்புனவாசல், மீமிசல், ஆவுடையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என்று அறந்தாங்கி உதவி செயற்பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார்.

    • ஆர்.பன்னீர் தேவர் கல்வி அறக்கட்டளை சார்பில்அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
    • 9-ம் வகுப்பு 10-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலை யில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் குளத்திரன்பட்டு ஆர்.பன்னீர் தேவர் கல்வி அறக்கட்ட ளை சார்பில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் மற்றும் 9-ம் வகுப்பு 10-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலை யில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பன்னீர் தேவர் அறக்கட்டளையின் தலைவரும் தொழில் அதிபருமான கரிகாலன் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் செயலாளரும் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளருமான கருப்பையா அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னதாக பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் பரதநாட்டியம், யோகா, சிலம்பம் மற்றும் கராத்தே போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். பின்னர் மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா சைக்கிள் மற்றும் சீருடை கல்வி உபகரணங்களை வழங்கி பேசியதாவது:-

    கல்வியே சமூக மாற்றத்திற்கு சிறந்த கருவி. இது போன்ற கல்வி பணிகளை இந்த அறக்கட்டளை தொடர்ந்து செய்து வரும். இப்பகுதி மாணவ மாணவியர்கள் இதனை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சதன் பிரபாகர், ரவி , பல்லவராயர் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் சிவ திருமேனிநாதன்

    பிரபல பட்டிமன்ற நடுவரும் பழனியாண்டவர் கலைக்கல்லூரியின் பொருளாதார பேராசிரியருமான தங்க ரவிசங்கர் முன்னாள் எம்.எல்.ஏ நார்த்தாமலை ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பன், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானசேகரன், அன்புக் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் சுமன் காளிதாஸ், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், தலைமை ஆசிரியர் மற்றும் கிராம பொதுமக்கள் மாணவ மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டுஆவணத்தான்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

    புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ஆவணத்தான்கோட்டை கிராம ஊராட்சியில், உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா கலந்துகொண்டார்.

    மேலும் இந்த கிராம சபைக் கூட்டத்தில்,சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்,சமுதாய முதலீட்டு நிதியின்கீழ், பயனாளிகளுக்கு கடனுதவிகளையும் மற்றும் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறையின் சார்பில்,மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு மா,பலா,நெல்லி உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    பின்னர்,மாவட்ட கலெக்டர்,அறந்தாங்கி வட்டாரம், ஆவணத்தான்கோட்டை மேற்கு குழந்தைகள் மையத்தில் பயிலும் குழந்தைகளின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .இம்மையத்தில் குழந்தைகளுக்கான இருப்பிட வசதி,கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் இம்மையத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்வுகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன்,உதவி இயக்குநர் இளங்கோ தாயுமானவன்,துணை இயக்குநர் நமச்சிவாயம்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேலன், இந்திராகாந்தி, ஊராட்சிமன்றத் தலைவர் ஜெயமணி கருணாநிதி,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அம்மா புதுப்பட்டி கிராமத்தில் விவசாயியின் ஆடு கிணற்றில் விழுந்தது
    • தீயணைப்பு வீரர்கள் ஆட்டை உயிருடன் மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த அம்மா புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ். விவசாயியான இவர் ஆடு வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று மேய்ச்சலுக்கு செல்லும்போது 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதனை பார்த்த ரெங்கராஜ் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆட்டை உயிருடன் மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர்.

    ×