என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது
    • மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனைகளை செய்து காட்டினார்.

    புதுக்கோட்டை

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் 13 ஆயிரத்து 210 பள்ளிகளில் வானவில் மன்றத்தை கடந்த 28-ந்தேதி திருச்சியை அடுத்த காட்டூர் பாக்காக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

    இதையடுத்து தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி மாநிலத்தில் உள்ள அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வானவில் மன்றம் தொடங்கப்பட்டது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளுர் நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம் தலைமையில் தொடங்கப்பட்டது.

    விழாவிற்கு வந்திருந்த மாணவர்களுக்கு வானவில் மன்றத்தின் நோக்கங்கள் செயல்பாடுகள், அறிவியல் சோதனை முறைகளைப் பற்றி அறிவியல் ஆசிரியை ஜெயஜோதி மணி விளக்கமாக எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனைகளை செய்து காட்டினார்.

    எட்டாம் வகுப்பு மாணவன் கலைவாணன் மினி மிக்ஸி செயல்படும் விதம் பற்றியும், ஆறாம் வகுப்பு மாணவி பிருந்தா முட்டையிலிருந்து அழுத்தத்திற்கான நோக்கத்தையும் தெளிவாக செய்து காட்டினார். விழாவில் ஆசிரியர்கள் சுவாமிநாதன், மனோஜ் குமார், நிலோபர் நிஷா, சங்கீதா உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

    • பள்ளிகளில் கலை திருவிழா போட்டிகள் நடந்து வருகிறது
    • ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட

    புதுக்கோட்டை:

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆவுடையார்கோவில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நிகழ்ச்சி இன்று முதல் 5 நாட்களுக்கு ெதாடர்ந்து நடைபெறுகிறது.

    இதில் ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட 31 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் கவின் கலை, இசை(வாய்ப்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் உள்ளிட்ட 6 தலைப்புகளில் மொத்தம் 36 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 5 நாட்கள் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. மேலும் போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் மாவட்ட அளவில் நடைபெறுகின்ற போட்டிகளிலும், அதனை தொடர்ந்து மாநில அளவில் நடைபெறவுள்ள போட்டிகளிலும் கலந்து கொள்ளவுள்ளனர். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி, வட்டாரக்கல்வி அலுவலர்கள் முத்துக்குமார், மலர்விழி, மாவட்டக்குழு உறுப்பினர் ராமநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமரன்,உதயம் சரண், தலைமை ஆசிரியர்கள் ராமு, தாமரைச்செல்வன், பெரிய இருளப்பன், மனோகரன், நல்லமுத்து, அறிவழகன், துரைபிரபாகர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் திறக்கப்பட்டது
    • அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா கோட்டாட்சியர் செல்வி தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொண்டவர்களை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கலந்து கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 23. 65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து, தமிழக அரசின் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம் சின்னத்துரை, தி.மு.க. மாவட்ட செயலாளர் கே. கே. செல்லபாண்டியன், ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், துணைத் தலைவர் செந்தாமரை குமார், ஆணையர்கள் ஸ்ரீதரன், நளினி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தமிழ் ஐயா பரமசிவம், தி.மு.க. நகரச் செயலாளர் ராஜா, இளைஞரின் அமைப்பாளர் கலையரசன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராணி முருகேசன், கவிதா மணிகண்டன், ஆரஞ்சு பாப்பா குணசேகரன், செல்லப்பிள்ளை, அருணாச்சலம், கல்லாக்கோட்டை முத்துக்குமார், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பெண் கொலையில் வாலிபர் கைது செய்யப்பட்டார்
    • கறம்பக்குடி அருகே தைலமரக்காட்டில் பிணமாக கிடந்தார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள தெற்கு பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சேர்ந்தவர் திருச்செல்வம். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 35). இவரை கடந்த 23-ந்தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்து இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான பழனியம்மாளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழனியம்மாள் அப்பகுதியில் உள்ள தைலமரக் காட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீக்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தியதில் மறியல் கைவிடப்பட்டது.

    இது குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல்குடி கொத்தக்கோட்டை குடியிருப்பைச் சேர்ந்த பாண்டியராஜன் (19) என்பவர் பழனியம்மாளிடம் தொடர்ந்து நான்கு நாட்களாக செல்போனில் பேசியுள்ளார். இதனை அறிந்த போலீசார் அவரை கறம்பக்குடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் தனது நண்பர்களின் மூலம் பழனியம்மாளின் செல்போனின் நம்பர் பெற்று பேசியதாக கூறினார். கடந்த 23-ந்தேதி இரவு நேரத்தில் தைல மரக்கட்டில் பழனியம்மாளை கீழே தள்ளியதில் அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து பாண்டியராஜனை கைது செய்த போலீசார் அவரை ஆலங்குடி நீதிமன்ற நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நான்கு குழந்தைகளின் தாயான பழனியம்மாள் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


    • பெருமாள் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது
    • சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது

    புதுக்கோட்டை

    கந்தர்வகோட்டை பெருமாள் கோவிலில் வருடாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டு சென்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை யாதவர் தெருவில் அமைந்துள்ள கோதண்ட ராமர் சீதாலட்சுமி திருக்கோவில் ஐந்தாவது ஆண்டு வருடம் அபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த அபிஷேக விழாவை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டு சென்றனர். விழா குழு சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து தினமும் சுமார் 550-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றன. இதனை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி சர்வதேச எல்லை அருகே இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 24 பேர் மற்றும் அவர்கள் சென்ற 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இது மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

    சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.

    இதற்கிடையே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி, உடனடியாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீனவர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கடற்கரையில் 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

    • புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டனர்
    • இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் துறைமுகங்களிலிருந்து நேற்று காலை 302 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்திய கடல் எல்லை பகுதியில் நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் அங்கே வந்த இலங்கை கடற்படையினர், அத்துமீறி எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி துரைராஜ், வளர்செல்வம், ஜெலிலா, மகேந்திரன், சிவபிரகாஷ் ஆகியோருக்கு சொந்தமான 5 விசைப்படகுகள் மற்றும் அதில் சென்ற தியாகு (வயது48), பாண்டி(46),காடியப்பன் (26) பாண்டி (26), மாதவன் (21), வீரமணி (44), அறிவழகன் (35), தாமரைச்செல்வன் (38), முத்துப்பாண்டி(45), கலைச்செல்வன் (35), காளிதாஸ் (32), அஜய் (29), நவீன் (30), விஜி (25), மகேந்திரன் (40), மாயகிருஷ்ணன் (65), முருகன் (40), பாண்டி(38), குமரவேல் (26), அய்யனார் (41), ஜெயந்தன் (43), பிரதீப் (46), சுப்பிரமணி(39), குப்புராஜ் (55) ஆகிய 24 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். மேலும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மயிலட்டி துறைமுகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கடலுக்குச் சென்ற சக மீனவர்கள் தெரிவிக்கையில் நேற்று மாலை 4 மணி அளவில் சர்வதேச எல்லை பகுதி அருகே இந்திய எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த எங்களை இலங்கை கடற்படையினர் எங்களில் சக மீனவர்களை கைது செய்தது. இது மிகவும் கண்டனத்திற்குறியது. நம் நாட்டு எல்லை பகுதியில் மீன்பிடித்தாலும் இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து துன்புறுத்தும் போக்கை கடைபிடித்து வருகிறது. அவர்களுக்கு மீனவர்கள் முக்கியமில்லை, அவர்களுக்கு எங்கள் படகின் மீதே நாட்டம், எனவே மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வருவது மீனவ மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

    • சாலை சீரமைக்க கோரி மறியல் போராட்டம் நடைபெற்றது
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சத்தியமங்கலம் பிரிவு சாலை முதல் இரும்பாளி வரையிலான சுமார் 6 கி.மீ. பழுதடைந்த கிராம சாலையை செப்பனிடாததை கண்டித்து, திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் பேருந்து நிறுதம் அருகே கிராம மக்ள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளூர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சிதிலமடைந்த சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து ெ சன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • தனி நபருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்ய கோரி போராட்டம் நடைபெற்றது
    • கலெக்டரிடமும் கோரிக்கை மனுவை அளித்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கண்மாய் பகுதியில் 15 ஏக்கர் நிலத்துக்கு தனி நபர் பெயரில் பட்டா வழங்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமயம் வட்ட கும்மங்குடி அருகேயுள்ள கீரணிப்பட்டியில் 50 ஏக்கரில் கீரணி கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் நீர் மூலம் 80 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கண்மாய் பகுதியில் ஆதி திராவிடர்களுக்காக வழங்கப்பட்ட 15 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த பகுதி நீர்ப் பிடிப்பு பகுதியாக உள்ளதால் யாரும் பயன்படுத்தாமல் தரிசாக இருந்து வந்தது.

    இந்நிலையில் அண்மையில் அந்த நிலத்தில் தனி நபர் ருவர் பணிகளை தொடங்கியுள்ளார். இது குறித்து கிராமத்தினர் விசாரிதததில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடம் அவரது பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது என தெரியவந்தது. இந்த நிலையில் அந்த நிலத்தில் சாகுபடி பணிகள் தொடங்கினால் கண்மாய்க்கு நீர் வரத்து முற்றிலுமாக தடைபடும். எனவே தனி நபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி கீரணிப்பட்டி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கலெக்டர் கவிதா ராமுவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

    • பாலியல் தொல்லை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது
    • மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள ஒடுகம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் என்ற தினேஷ்குமார் (வயது 19). இவர் 18 வயது மாற்றுத் திறனாளி பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதில் அந்தப் பெண் கர்ப்பம் தரித்த நிலையில், திருமணம் செய்து கொள்ள தினேஷ்குமார் மறுத்துள்ளார். இதனிடையே, அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட தினேஷ்குமாருக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தினேஷ்குமார் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

    • சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது
    • 10 ஆண்டு–களுக்கு மேலாக இருந்த

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லாக்கோட்டை ஊராட்சி ஆண்டாள் தெரு வழியாக கரம்பக்குடி ஒன்றியம் அம்பு கோயிலுக்குசெல்லும் பாதை சுமார் 10 ஆண்டு–களுக்கு மேலாக செப்பனிடாமலும் தனிநபர் ஆக்கிரமிப்புகளாலும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கந்தர்வ–கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, கரம்பக்குடி தாசில்தார் ராமசாமி, கந்தர்வகோட்டை தாசில்தார் ராஜேஸ்வரி மற்றும் ஒன்றிய குழு தலைவர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மேற்கண்ட பாதையை அமைக்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

    இதனால் பல ஆண்டு–களாக ஆண்டாள் தெரு மற்றும் அம்பு கோயில் சாலை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து நிலை மாறி, அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றியும், புதிய தார் சாலை அமைப்பதற்கான முன்னேற்பாடுகளையும் எடுத்தனர்.

    இதனால் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்தனர்.

    • ரூ.1.2 கோடி செலவில் 11 முடிவுற்றப் பணிகள் தொடங்கப்பட்டது
    • பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.02 கோடி செலவில் 11 முடிவுற்றப் பணிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் பேசும் போது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புறங்களில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் முத்தமிழறிஞர் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த ஊராட்சிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில் பொன்னமராவதி ஒன்றியத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், திருக்களம்பூர்ஊராட்சியில் ரூ.5.50 கோடி மதிப்பிலான 2 சாலைப் பணிகளும், கோவனூர் ஊராட்சியில் ரூ.4.27 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளும், செவலூர்ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளும் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் திறந்து வைக்கப்பட்டுள்ள செவலூர் ஊராட்சி, மலையடிப்பட்டி பகுதிநேர நியாயவிலைக்கடையின் மூலம் 145 குடும்ப அட்டைதாரர்களுக்கு வீண்அலைச்சலை தவிர்த்து எளிதான முறையில் தங்களது குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.

    எனவே கிராமப்புறங்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    ×