என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டை அருகே குடி நீர் தொட்டியில்
    • மனித கழிவு கலக்கப்பட்ட சம்வம் தமிழகத்திற்கு தலை குனிவு என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி வேங்கை வயல் ேமல் நிலை நீர் தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து காவேரி நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது,மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே வெட்கி தலை குனிய வைத்துள்ளது.தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டணையை காவல்துறை பெற்றுத்தர வேண்டும்.தமிழ விவசாயிகள், அரசியல் கட்சிகளில் போராட்டத்தைத் தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்குவது வரவேற்க தக்கது. ஆசிரியர்கள் போராட்டங்கள் என்பது தற்போதைய ஆட்சியே காரணம் என்று கூறமுடியாது. அது கடந்த ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளும் இதில் அடங்கி உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்எஸ்எஸ் காரரைப்போல செயல்படுகிறார். அவரை திரும்பப்பெற வேண்டுமென சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது நியாயமான கோரிக்கைதான் என்றார்.


    • கறம்பக்குடியில் அமையவுள்ள நீதிமன்ற கட்டிடம் ஆய்வு செய்தார்
    • பழைய தாலுகா அலுவலகமாக செயல்பட்டு வந்த பேரூராட்சி சமுதாயக்கூடத்தை ரூ.20 லட்சம் செலவு செய்து புதுப்பிக்கப்பட்டது

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இருப்பினும் இங்கு நீதிமன்றம் இல்லை. இப்பகுதி பொதுமக்கள் ஆலங்குடியில் உள்ள நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். எனவே கறம்பக்குடியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கரம்பக்குடியில் நீதிமன்றம் அமைப்பதற்காக பழைய தாலுகா அலுவலகமாக செயல்பட்டு வந்த பேரூராட்சி சமுதாயக்கூடத்தை ரூ.20 லட்சம் செலவு செய்து புதுப்பிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் தற்காலிகமாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைய உள்ளது. இதனை மதுரை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் நேரில் ஆய்வு செய்தார். மேலும் நீதிமன்றத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டுவது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி, கறம்பக்குடி பேரூராட்சித் தலைவர் முருகேசன், பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆத்மாசேர்மன் முத்துகிருஷ்ணன், பேரூராட்சி துணைத் தலைவர் நைனா முகமது ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய பேரணியானது ஆவுடையார்கோவில் நான்கு ரத வீதிகள் வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் வில்லியம் மோசஸ் தலைமையில் நடைபெற்ற பேரணியில் கோட்டக்கலால் அலுவலர் பரணி முன்னிலை வகித்தார். பேரணியில் மது அருந்துதல் கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது மற்றும் போதைப் பழக்கத்தில் ஈடுபடக்கூடாது என்று பதாகைகள் ஏந்தியும், மக்களை கவரும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய பேரணியானது ஆவுடையார்கோவில் நான்கு ரத வீதிகள் வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது. நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தனர்
    • கூட்டத்தில் புஷ்கரம் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டாரத்தில் 2022-23 ஆண்டில் செயல்படுத்தப்படும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு(அரிசி) செயல் விளக்கத்திடல் ஆனது திருந்திய நெல் தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்தல் பற்றியும், உயிர் உரங்கள் நுண்ணூட்டம் பயன்படுத்துவதின் முக்கியத்துவம் பற்றியும், இலை வண்ண அட்டையை பயன்படுத்தி இலையின் பச்சைய தன்மை பொறுத்து யூரியா உரத்தினை பயன்படுத்துவதால் அதிகளவு பூச்சி நோய் தாக்குதலில் இருந்து பயிர் பாதுகாக்கப்படுகிறது. நுண்ணூட்டக் கலவை மண்ணில் இடுவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் வளர்ச்சி சீராக்கப்பட்டு தாவரத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எளிய முறையில் எடுத்துச் செல்லவும் வழி வகை செய்கின்றன என உணவு மற்றும் பாதுகாப்பு திட்ட ஆலோசகர் சர்புதீன் விவசாயிகள் மத்தியில் விளக்கம் அளித்தார். கூட்டத்தில் புஷ்கரம் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கலந்துகொண்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, நுண்ணூட்டக் கலவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், மண்ணின் வளத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் விவசாயிகள் மத்தியில் கூறினார்கள். விராலிமலை வேளாண்மை விரிவாக்கம் அலுவலர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.


    • கந்தர்வகோட்டையில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றபட்டன

    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டையில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது. துணைத் தலைவர் செந்தாமரை குமார், ஆணையர்கள் ஸ்ரீதரன், நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற பொருள்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினர்கள் ஒப்புதல் பெறப்பட்டது. இதில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் பேசியதாவது:-உறுப்பினர்களின் சாலை வசதி, புதிய ஆழ்துளை கிணறு, அங்கன்வாடி மைய கட்டிடம், பள்ளி சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு ஏற்ப நிறைவேற்றப்படும் என்று கூறினார். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாண்டியன், கலியபெருமாள், திருப்பதி, முருகேசன், சுதா, பாரதி பிரியா மற்றும் உறுப்பினர்கள், அலுவலர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • விழாவிற்கு வருகை தர உள்ள அனைத்து சமூக மாநில தலைவர்களை புதுக்கோட்டை நகரம் திருக்கோகர்னத்தில் சிறப்பாக வரவேற்பது குறித்து ஆலோசிக்கபட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் மரக்கடை சந்து 5ம்வீதியில் உள்ள நமது மக்கள் கட்சி அலுவலகத்தில் எஸ்.எப்.ஆர்.பி.சி. மத்திய மண்டல தலைவர் திருச்சி மணிவேல் தேவர் தலைமையில் நடைபெற்றது. அனைத்து வெள்ளாளர் வேளாளர் சங்க செயலாளர் நிலாமணியன், தென்னிந்திய யாதவ மகாசபை மாநில அமைப்பு செயலாளர் வேலுச்சாமி, வீர சைவ பேரவை மாவட்ட செயலாளர் முத்து கருப்பன், நாயுடு சங்க மாவட்டத் துணைச்செயலாளர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய மண்டல துணைத் தலைவர் சின்னத்தம்பி யாதவ் வரவேற்றுப் பேசினார். இதில் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் மோகன், ஐயப்பன், நாயுடு சங்கம் தேவராஜன், வீர சைவ பேரவை மாவட்ட பொருளாளர் சதாசிவம், அறந்தாங்கி தொகுதி பொறுப்பாளர் வீர சைவ பேரவை ஜெயராமன், மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் இராம சுரேஸ்வர்மன், அலுவலக செயலாளர் செல்ல விக்னேஷ், மஞ்சாடியார், பூவரசகுடி முருகேசன், அறந்தை பாலகுமாரன், முத்துப்பாண்டி மற்றும் கள்ளர், மறவர், அகமுடையார், பார்க்கவ குல உடையார், யாதவர், முத்தரையர், அனைத்து வல்லநாடு செட்டியார் நல சங்கம், வெள்ளாளர் வேளாளர் சங்கம், நாயுடு வீர சைவ பேரவை பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய மண்டல செயலாளர் டாக்டர் சரவண தேவா பேசுகையில்:-வரும் ஜனவரி மாதத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு தலைவர் மேனாள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் இரத்தின சபாபதி ஆலோசனைப்படி கொடியினை ஏற்றி பிரச்சார பொதுக்கூட்டம் நடத்துவது எனவும், விழாவிற்கு வருகை தர உள்ள அனைத்து சமூக மாநில தலைவர்களை புதுக்கோட்டை நகரம் திருக்கோகர்னத்தில் சிறப்பாக வரவேற்பது எனவும், நமது 256 சமூகங்களின் சமூக நீதி கூட்டமைப்பு தொடர்ந்து உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுத்து சட்டப் போராட்டங்களில் வாயிலாக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய சட்டப் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றது. தற்போது ஒன்றிய அரசு அமல்படுத்திய உயர் ஜாதியினர் மாத வருமானம் 66 ஆயிரம் ரூபாய்க்கு உள்ளவர்களுக்கு 10% இட ஒதுக்கிட எதிர்த்து வழக்காடி இன்றுவரை தமிழக அரசையும் ஒன்றிய அரசையும் தொடர்ந்து ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் நமது பிள்ளைகளின் கல்வி, வேலை வாய்ப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு போன்ற கோரிக்கையை முன்னிறுத்தி ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறது. இப்போராட்டத்தை மக்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்ல பிரச்சார பொதுக்கூட்டம் நடத்த அனைத்து சமூகங்களும் ஒன்று திரள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


    • கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் விழா நடைபெற்றது
    • மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன் தனது நிதியிலிருந்து ரூ.7லட்சம் மதிப்பிலான இருக்கைகளை பள்ளிக்கு வழங்கினார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம் விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இருக்கைகள் வழங்கும் விழா ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கம் விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட மனப்பட்டி தொடக்கப்பள்ளி, குருவாண்டான் தெரு தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுக்கு மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன் தனது நிதியிலிருந்து ரூ.7லட்சம் மதிப்பிலான இருக்கைகளை பள்ளிக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.இதில் கவுன்சிலர் பூபதி, நெப்புகை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், ஒன்றிய கழகச் செயலாளர் குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டை அருகே ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது
    • சுகாதார பணியாளர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் துவார் ஊராட்சிக்கு உட்பட்ட கீழப்பட்டியல் வசித்து வரும் ஒரு நபருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது.தகவல் அறிந்த வட்டார மருத்துவ அதிகாரி மணிமாறன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர் தலைமையிலான மருத்துவத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் இணைந்து துவார் ஊராட்சியில் தூய்மைப்பணி, காய்ச்சல் சர்வே, குளோரி நேசன் ஆய்வுகள் செய்யப்பட்டது. மேலும் பொது மக்களிடம் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பலதா செந்தில், வெள்ளாள விடுதலை மருத்துவ அலுவலர் ரஞ்சித், சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


    • கறம்பக்குடி அருகே சரக்கு லாரி மோதி தொழிலாளி பலியானார்
    • மகேந்திரன் சரக்கு லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்
    கறம்பக்குடி:


    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சேவுகன் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 40). கூலித் தொழிலாளியான இவர் சரக்கு வேனில் சிமெண்ட் மற்றும் கற்களை ஏற்றி விட்டு அதன் பின்னால் தனது மோட்டார் சைக்கிளில் கல்லாக் கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். மருதன்கோன் விடுதி அருகே சென்றபோது சரக்கு வேனை முந்த முயன்றார் அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு வேன்மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மகேந்திரன் சரக்கு லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதைபார்த்த அப்பகுதி பொதுமக்கள் மகேந்திரனை மீட்டு அருகில் உள்ள ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மகேந்திரன் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கறம்பக்குடி போலீசார் சரக்கு லாரி டிரைவர் கருப்பபக்கோண் தெருவை சேர்ந்த ரகுநாதன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


    • ஆலங்குடியில் தீயை விழுங்கும் வினோத வழிபாடு நடைபெற்றது
    • கற்பக விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டது

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலப்புல்லான் விடுதியில் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் தீயை விழுங்கும் வினோத வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு கற்பக விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து விநாயகருக்கு பிடித்தமான அவல்பொரி, கடலை, எள்ளுருண்டை அப்பம், கொழுக்கட்டை, பொங்கல், சுண்டல் போன்ற பதார்த்தங்களை படையல் செய்து விநாயகருக்கு வழிபாடு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து மாவிளக்கில் தீயை வைத்து அதில் தீயை பற்ற வைத்து மா விளக்குடன் தீயை விழுங்கும் விநோத வழிபாடு நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தீயை விழுங்கி சிறப்பு வழிபாடு செய்தனர்.


    • ஆலங்குடியில் லாட்டரி விற்றவர் கைது செய்யபட்டார்
    • லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம், செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்

    ஆலங்குடி:

    ஆலங்குடியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக மாவட்ட எஸ்.பி வந்தித பாண்டேவுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் உதவி ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் காமராஜர் சிலை பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதியை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் தர்மலிங்கம் (வயது 38) என்பவர் மூன்று நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம், செல்போன், 4,140 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆலங்குடி போலீசார் விசாரணை செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கந்தர்வகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


    • லாரி டிரைவர் விபத்தில் சிக்கி பலியானார்
    • ராமகவுண்டம்பட்டி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.

    விராலிமலை:

    சென்னையிலிருந்து மதுரைக்கு டிராக்டர்களை ஏற்றுவதற்காக உத்திர பிரதேச மாநில பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரி விராலிமலை அருகே உள்ள கல்குடி வழியாக சென்றது. லாரியை உத்திர பிரதேச மாநிலம் சபியுல்லா மகன் சகீர் அகமத்(வயது39) ஓட்டினார். இந்நிலையில் அந்த கண்டெய்னர் லாரி விராலிமலை காமராஜர் நகர் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே சென்ற மின் வயர் மீது உரசியதில் மின் வயர் அருந்தது. இதனை கவனிக்காமல் லாரியை ஓட்டுனர் இயக்கியுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், விரட்டி சென்று முருகன் கோவில் மலை அடிவாரத்தில் அந்த கண்டெய்னர் லாரியை மறித்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் வாக்குவாதம் முற்றியதில் அவர்களிடம் சிக்காமல் இருப்பதற்காக கண்டெய்னர் லாரியை சகீர் அகமத் வேகமாக எடுத்து விராலிமலை-மதுரை சாலையில் ஓட்டி சென்றார். அப்போது ராமகவுண்டம்பட்டி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுனர் சகீர் அகமத் அதிர்ச்சியில் வலிப்பு வந்து உயிரிழந்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த விராலிமலை போலீசார் லாரியை துரத்தி சென்ற அசோக்குமார் மகன் ஹரிஹரன், ஆறுமுகம் மகன் ரவிச்சந்திரன், செபஸ்டின் மகன் ஆரோக்கிய ஜார்ஜ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


    ×