என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி வனக்கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 10 புலிகள் இறந்துள்ளது.
    • புலிக்குட்டிகள் இறந்து கிடந்த இடத்துக்கு சற்று தொலைவில் ஒரு கடமானின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி வனக்கோட்டத்தில் ஊட்டி வனசரகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள சின்னகுன்னூரில் தாய்புலி ஒன்று 4 குட்டிகளுடன் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

    வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 குட்டிபுலிகள் சடலமாகவும், ஒரு குட்டிப்புலி உயிருக்கு போராடிய நிலையிலும் மீட்கப்பட்டது. ஆனால் அந்த புலியும் சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.

    மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி வனக்கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 10 புலிகள் இறந்துள்ளது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே இறந்த குட்டி புலிகளின் தாய் புலியின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அதனை தொடர்ந்து தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 நாளில் 4 வயதான புலிகள், 6 குட்டிப்புலிகள் என 10 புலிகள் இறந்துள்ளன. ஆகஸ்டு 16-ந் தேதி சீகூர் வனப்பகுதியில் நீரோடை அருகே 2 புலிகள் இறந்து கிடந்தன. அதனை ஆய்வு செய்தபோது அவை தாய்புலியால் கைவிடப்பட்டது தெரியவந்தது.

    ஆகஸ்டு 17-ந் தேதி நடுவட்டத்தில் ஒரு புலி இறந்து கிடந்தது. அந்த புலியின் உடலில் உள்ள காயங்களை ஆய்வு செய்த போது வேறு ஒரு புலியுடன் ஏற்பட்ட சண்டையில் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது..

    இதேபோல் புலிகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஆகஸ்டு 31-ல் ஒரு புலி இறந்தது.

    தொடர்ந்து கடந்த 9-ந் தேதி அவலாஞ்சி உபரி நீர் ஓடை அருகே 2 புலிகள் இறந்து கிடந்தன.

    மாட்டு மாமிசத்தில் விஷம் வைத்து இந்த புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் உடல் உறுப்புகள் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தி சேகர் என்பவரை கைது செய்துள்ளோம்.

    கடந்த 14-ந் தேதி சின்னக்குன்னூரில் புலிக்குட்டிகள் சுற்றுவதாக வந்த தகவலின் பேரில் புலிகளை கண்டுபிடிக்கும் வல்லுநர்களை அனுப்பி தேடும் பணி நடந்தது.

    அடர்ந்த வனப்பகுதியில் 3 புலிக்குட்டிகள் இறந்த நிலையிலும், ஒரு புலிக்குட்டி உயிருக்கு போராடிய நிலையிலும் மீட்கப்பட்டது.

    அதனை மீட்டு சிகிச்சை அளித்த போது அந்த குட்டிபுலியும் இறந்துவிட்டது.

    இறந்த குட்டிகளை ஆய்வு செய்த போது, 4 குட்டிகளும் உணவின்றி இறந்தது தெரியவந்தது. இவற்றின் உடல் உறுப்பின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    புலிக்குட்டிகள் இறந்து கிடந்த இடத்துக்கு சற்று தொலைவில் ஒரு கடமானின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. அதன் மாதிரியும் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். மேலும் குட்டிகளின் தாய்புலியை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    பொதுவாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடைபெறும்.

    மேலும் கோரகுந்தா, குந்தா, நடுவட்டம் உள்ளிட்ட 6 சரகங்களில் முகாம்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படும். அத்துடன் அங்கு தொடர் கண்காணிப்புக்காக வேட்டை தடுப்பு காவலர்களும் நியமிக்கப்படுவர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 20-ம் நாளாக போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது
    • 6 கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு விலை வேண்டி கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் நாக்கு பெட்டா படுகர் நலசங்கம் சார்பில் கடந்த 19 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. அவர்களின் போராட்டம் 20-ம் நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் தேயிலை விவசாயிகளின் போராட்டம் தற்போது மாவட்ட அளவில் பரவி வருகிறது. இதன் ஒருபகுதியாக குன்னூர் தாலுக்காவில் படுகர் இன மக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை ஆரூர் தலைவர் குமார் தலைமைதாங்கி தொடங்கி வைத்தார்.

    மேற்கு நாடு சீமை நல சங்கம், நாக்கு பெட்டா சங்கம், நெலிகோலு அறக்கட்டளை உள்ளிட்ட சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் ராமன், தருமன்னன்,கேத்தி 14 ஊர் தலைவர் ரமேஷ், தேனலை ஊர் தலைவர் போஜன், கொதங்கட்டி சங்க செயலாளர் குமார், சோகத்தொரை ஊர் தலைவர் மகாலிங்கம், சக்கலட்டி ஊர் தலைவர் ராஜு, ஒடையரட்டி ஊர் தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் அர்ஜுனன், தொட்டணி ஊர் தலைவர் நாகராஜ் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    குன்னூர் உண்ணாவிரத போராட்டத்தில் கேத்தொரை, ஒடையரட்டி, சோகத்தொரை, தேனலை, தொட்டனி, சக்கலட்டி உள்ளடக்கிய 6 கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று உள்ளனர். மேலும் அவர்கள் பாரம்பரிய உடை அணிந்து பதாகைகளை கையில் ஏந்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை ஊட்டி, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் தற்போது குன்னூர் பகுதிகளுக்கு பரவியது அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஏழை-எளியோரின் நலன் கருதி கட்டணமில்லா தொலைபேசி எண்: 1100 நம்பரும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • அடுத்த 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வாயிலாக மேல்முறையீட்டு மனுவை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள், விண்ணப்பம் நிராகரிக் கப்பட்டதற்கான காரணங் களை அறியும் வகையில் ஊட்டி கலெக்டர் அலுவ லகம், ஊட்டி, குன்னூர், கூடலூரில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் ஊட்டி, குந்தா, குன்னுார், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் தாசில்தார் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு உதவிமையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக பிரத்யேக அலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    எனவே நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான விவரங்களை அறியலாம்.

    மேலும் ஏழை-எளியோரின் நலன் கருதி கட்டணமில்லா தொலைபேசி எண்: 1100 நம்பரும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எண்களையும் வாடிக்கையாளர்கள் தொடர்புகொள்ளலாம்.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நிராகரிகப்பட்டவர்கள் அடுத்த 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வாயிலாக மேல்முறையீட்டு மனுவை பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற்றவர்கள் டெபிட் கார்டு மட்டுமின்றி ரூபே கார்டு மூலமாகவும் பணம் எடுக்கலாம்.

    வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட வங்கியில் கடனுதவி பெற்றிருந்தாலும், அரசு வரவு செய்த உரிமைத்தொகையில் பணம் எடுக்கக்கூடாது.

    பயனாளிகளின் வங்கி கணக்கில் இருந்து எக்காரணம் கொண்டும் பணம் திரும்ப எடுத்துக்கொள்ளப்படாது என நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்து உள்ளார்.

    • நாடு முழுவதும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது
    • பேரணியில் ஊட்டச்சத்து பணியாளர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ஊட்டி,

    நாடு முழுவதும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்ஒருப குதியாக நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் அருணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ-மாணவிகள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள், ஊட்டச்சத்து பணியாளர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது சேரிங்கிராஸ் வழியாக காபிஹவுஸ் சென்ற டைந்தது.

    முன்னதாக மகளிர் சுயஉதவிக்குழுவினரின் விழிப்புணர்வு ரங்கோலி கோலம், வளரிளம் பெண்களுக்கான ரத்தசோதை முகாம் ஆகியவற்றையும் கலெக்டர் அருணா பார்வையிட்டார்.

    நீலகிரி மாவட்டத்தில் பொதுசுகாதாரம் மற்றும் மருந்துதுறை சார்பில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு விட்ட மின்-ஏ திரவம் வழங்கும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இது வருகிற 23-ந்தேதி வரை மாவட்டம் முழுவதும் நடக்க உள்ளது.

    நிகழ்ச்சியில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பாலுசாமி, மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சுரேஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அதிகாரி தேவகுமாரி, மாவட்ட சமூகநல அலுவலர் பிரவீணாதேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரி (பொ) ஷோபனா, வட்டார மருத்துவ அலுவலர்கள் முருகேசன், ஊட்டி தாசில்தார் சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 32 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
    • சம்பந்தப்பட்ட 5 கடைகளுக்கு உணவுத்துறை அதிகாரிகள் நோட்டீஸ்

    ஊட்டி,

    நாமக்கல் மாவட்டத்தில் கெட்டுப்போன இறைச்சி உணவு (சவர்மா) சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அசைவ உணவகங்களில் உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் நந்தகுமார், சிவராஜ் அடங்கிய குழுவினர், ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து கமர்சியல் சாலை, பாரதியார் காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு கெட்டுப்போன 32 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் பல்வேறு அசைவ உணவகங்களில் விதிமுறை மீறல் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட 5 கடைகளுக்கு உணவுத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சுரேஷ் கூறுகையில், பழைய கெட்டுப்போன இறைச்சிகளை உணவகங்களில் பயன்படுத்துவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • போலீசார் சந்தேகத்தின்பேரில் காரை சோதனை செய்து பார்த்தனர்.
    • காருக்குள் இறைச்சி பதுக்குவதற்காக ஒரு ரகசியஅறை இருப்பது கண்டறியப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூடலூர் சரகத்துக்கு உட்பட்ட ஓவேலி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு கார் வந்தது. எனவே அதனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    அந்த காருக்குள் 5 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

    எனவே போலீசார் சந்தேகத்தின்பேரில் காரை சோதனை செய்து பார்த்தனர். இதில் காருக்குள் இறைச்சி பதுக்குவதற்காக ஒரு ரகசியஅறை இருப்பது கண்டறியப்பட்டது.

    மேலும் விலங்குகளை கொல்வதற்கான கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் சிக்கின. எனவே காருடன் ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், மேற்கண்ட 5 பேரையும் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் ஜாம்ஷெர்,ஜோபின், ஜிஜோ ஜான், முகம்மது அனீஸ், ஜிபின் ஜான் என்பது தெரிய வந்தது. எனவே அவர்களிடம் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்து உள்ளன.

    கேரளாவை சேர்ந்த ஜாம்ஷெர்,ஜோபின், ஜிஜோ ஜான், முகம்மது அனீஸ், ஜிபின் ஜான் ஆகிய 5 பேரும் காடுகளில் புகுந்து அதிநவீன கருவிகள் உதவியுடன் வன விலங்குகளை வேட்டையாடும் தொழில் செய்து வருகின்றனர். இதற்காக அவர்கள் ஒரு காரை பயன்படுத்தி வந்து உள்ளனர்.

    அந்த காரில் இறைச்சியை பதுக்கி எடுத்து செல்வதற்காக, ஒரு ரகசிய அறை வைக்கப்பட்டு உள்ளது. இதனை நாங்கள் தற்செயலாக கண்டுபிடித்து உள்ளோம்.

    நீலகிரி காட்டுக்குள் புகுந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக காரில் வந்திருந்த 5 பேரையும் வனஊழியர்கள் நடுவழியில் தடுத்து நிறுத்தி கைது செய்து உள்ளோம். அவர்கள் எத்தனை ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக 5 பேரிடமும் மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வனஅதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • 3 புலிக்குட்டிகள் மற்றும் தாய்ப்புலியை வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
    • புலிக்குட்டிகள் தனியாக இருந்ததால் தாய் புலியின் நிலையை அறிவதற்காக, 40 பேர் அடங்கிய 4 குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட சீகூர் வனச்சரக எல்லையான சின்னக்குன்னூர் பெந்தட்டி அருகில் உள்ள வனப்பகுதியில் கடந்த 14-ந் தேதி 4 புலிக்குட்டிகள் நடமாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து வனத்துறையினர் குழு அமைத்து புலிக்குட்டிகளை தேடி வந்தனர்.

    இதில் கடந்த 17-ந் தேதி சின்னக்குன்னூர் வனப்பகுதியில் ஒரு ஆண் புலிக்குட்டி இறந்து கிடப்பது தெரியவந்தது. பின்னர் கால்நடை மருத்துவர்கள் புலிக்குட்டி உடலை பிரேத பரிசோதனை செய்து, ஆய்வுக்காக உடல் உறுப்புகளை கோவைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், தாய்ப்பால் கிடைக்காததால் புலிக்குட்டி இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து மற்ற 3 புலிக்குட்டிகள் மற்றும் தாய்ப்புலியை வனத்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் சின்ன குன்னூர் வனப்பகுதியில் ஏற்கனவே புலிக்குட்டி இறந்து கிடந்த பகுதியில், மேலும் 2 பெண் புலிக்குட்டிகள் இறந்து கிடந்ததை நேற்று வனத்துறையினர் கண்டறிந்தனர். அங்கு சற்று தொலைவில் ஒரு பெண் புலிக்குட்டி சோர்வான நிலையில் உயிருடன் மீட்கப்பட்டது.

    இறந்து கிடந்த 2 புலிக்குட்டிகளின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பகுதியில் எரிக்கப்பட்டது. தொடர்ந்து புலிக்குட்டிகளின் உடல் உறுப்புகள் ஆய்வுக்காக கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட புலிக்குட்டிக்கு சிகிச்சை அளித்து, கூண்டில் வைத்து வனத்துறையினர் பராமரித்து வந்தனர். அதுவும் சிகிச்சை பலனின்றி இறந்தது.

    இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி கவுதம் கூறியதாவது:-

    புலிக்குட்டிகள் தனியாக இருந்ததால் தாய் புலியின் நிலையை அறிவதற்காக, 40 பேர் அடங்கிய 4 குழு அமைக்கப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் புலிக்குட்டிகள் இறந்து கிடந்த பகுதியில் கடந்த 18-ந் தேதி ஒரு மானின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. எனவே, மான் கிடந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி புலி நடமாட்டம் உள்ளதா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 4 குட்டிகளுடன் தாய் புலி சுற்றித்திரிந்ததை சின்ன குன்னூர் பகுதி பொதுமக்கள் பார்த்து உள்ளனர். ஆனால், சில நாட்களாக தாய் புலியின் நடமாட்டம் இல்லாததால், அதன் நிலை என்ன என்று தெரியவில்லை.

    நீலகிரி வனப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 புலிகள் இறந்து உள்ளன. கடந்த ஆகஸ்டு 16-ந் தேதி சீகூர் வனப்பகுதியில் 2 புலிக்குட்டிகள், ஆகஸ்டு 17-ந் தேதி நடுவட்டம் பகுதியில் ஒரு புலி, ஆகஸ்டு 31-ந் தேதி முதுமலை வனப்பகுதியில் ஒரு புலி, கடந்த 9-ந் தேதி அவலாஞ்சி வனப்பகுதியில் 2 புலிகள் இறந்து கிடந்தன. தற்போது சின்ன குன்னூர் வனப்பகுதியில் 4 புலிக்குட்டிகள் இறந்து உள்ளன. தொடர்ந்து புலிகள் இறக்கும் சம்பவத்தால் வன ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    • பள்ளி நிறுவனர் ஓ.வி.அழகேசன் பிறந்தநாள், 55-வது ஆண்டு விழா ஆகியவை நடந்தது
    • 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் 97 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்

    அருவங்காடு,

    குன்னூர் அருகே பிருந்தாவன் பள்ளி நிறுவனர் ஓ.வி.அழகேசன் பிறந்தநாள், 55-வது ஆண்டு விழா ஆகியவை நடந்தது. அப்போது மாணவர்கள் சார்பில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    பள்ளி தலைவர் வாமனன், துணைத்தலைவர் மயூர்வாமனன் மற்றும் சசிகலா வாமனன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் அஸ்மா ஆண்டறிக்கை வாசித்தார். அறிவியல்அறிஞர் டேனியல் செல்லப்பா கலந்து கொண்டு பேசினார்.

    கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் 97 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி மாணவிகள் பூக்கூடையுடன் ஜப்பானிய நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

    • கோத்தகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்
    • அதிகாலை முதல் மாலை 4 மணி வரை விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடைபெற்றது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிக்டன் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் கோத்தகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.

    முன்னதாக கோவிலில் அதிகாலை முதல் மாலை 4 மணி வரை விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் அன்னதான நிகழ்வுகளும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு விநாயகர் தேர் பவனி நடந்தது. இது கேர்பட்டா, காமராஜர்சதுக்கம், ராம்சண்ட் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

    நிகழ்ச்சியில் இடக்கல் போஜராஜ் அன்பரசு ராமச்சந்திராரெட்டி, ஜெயக்குமார், தங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.செயலாளர் முகமதுசலீம், பொருளாளர் மரியம்மா, துணை தலைவர்கள்செல்வராஜ், ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக நிலவேம்பு கஷாயம் பவுடர் வழங்கவேண்டும், ஊட்டச்சத்துமிக்க கேழ்வரகு மாவு பாக்கெட் தர வேண்டும்,

    கோத்தகிரி மின் வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வையில் படும்படி மின்கட்டணம் அடங்கிய போர்டு வைக்க வேண்டும், ஊட்டியில் சுற்றிதிரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும், நகர்பகுதியில் தொல்லைகள் கொடுக்கும் குரங்குகளை அடர்வனத்தில் விட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஆலோசகர் பிரவின், இணைசெயலாளர், வினோபாபாப், முகமதுஇஸ்மாயில், செயற்குழு உறுப்பினர்கள் திரசா, லலிதா, விக்டோரியா, சங்கீதா, ரோஸ்லின், விபின்குமார், சுரேஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் கண்மணி நன்றி கூறினார்.

    • ரோடுகளில் மெதுவாக செல்லும்படி போலீசார் அறிவுரை
    • நிலச்சரிவு அபாய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் உள் ளூர்வாசிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பெரும்சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று கனமழை ெகாட்டி தீர்த்தது. இது மழைமானியில் 32.5 மி.மீ. ஆக பதிவாகி உள்ளது. பர்லியார் பகுதியில் 24 மி.மீ மழை கொட்டி தீர்த்து உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி வரையிலான நிலவரப்படி, பதிவான மழைஅளவு விவரம் (மில்லி மீட்டரில்): ஊட்டி-2.3, கல்லட்டி-1.0 மி.மீ, அப்பர்பவானி-2 மி.மீ, குன்னூர்-32.5 மி.மீ. பர்லியார்-24 மி.மீ, கேத்தி-5 மி.மீ, குன்னூர் ரூரல்-2 மி.மீ, உலிக்கல்-18 மி.மீ, எடப்பள்ளி-2 மி.மீ, கோத்த கிரி-4 மி.மீ, கீழ்கோத்தகிரி-2 மி.மீ, கோடநாடு-4 மி.மீ.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று மட்டும் 98.8 மி.மீ மழை பெய்து உள்ளது. இது சராசரியாக 3.41 மி.மீ என்ற அளவில் பதிவாகி உள்ளது. நீலகிரியில் கனமழை காரணமாக அங்கு மேக மூட்டத்துடன் கடும் குளிர் நிலவி வருகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் விடுதிகளுக்குள் முடங்கி கிடந்தனர். விநாயகர் சதுர்த்தியான நேற்று உள்ளூர்வாசிகளும் பெரியளவில் வெளியே நடமாடவில்லை.

    இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கெ னவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக மலைப்பாதை யில் இருந்து சமவெளிக்கு செல்லும் வாகனங்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் மற்றும் மண் சரிவு ஏற்படும் இடங்களில் எக்காரணம் கொண்டும் வாகனங்களை நிறுத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை மாவட்ட பேரிடர் மீட்பு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் மழையின் தாக்கம் அதிகரித்து வரு வதால், நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்து வருகிறது. மழை நின்றவுடன் வெயிலும் திடீரென சுட்டெரிப்பதால், நிலத்தில் ஈரம் காய்ந்து லேசாக பிளவு ஏற்படுகிறது. இது மண் சரிவுக்கு அறிகுறி என்பதால் அந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுரை கூறி வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் பாதிப்புகள் மற்றும் பேரிடரை சமாளிப்பது எப்படி என்பது தொடர்பாக வருவாய்த்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் பாராட்டு
    • மேலூர் விவசாயி சாந்திக்கு ரூ.23,572 மானியத்தில் களையெடுப்பான் கருவி

    ஊட்டி,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.

    அதன் அடிப்படையில் வேளாண் துறையை தனித்துறையாக அறிவித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் சூரிய மின்வேலி அமைத்தல், மதிப்பு கூட்டும் எந்திரங்கள், களையெடுப்பான் கருவி, துகளாக்கும் கருவி, மின் மோட்டார் பம்ப் செட்டுகள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களின் வாயிலாக விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ததன் காரணத்தினால் விவசாயிகள் அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறார்கள். மேலும் தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் எந்திர மயமாக்குதல் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் எந்திரங்களை வழங்கி வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில வேளாண்எந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் தாலுகாவை சேர்ந்த 27 விவசாயிகளுக்கு ரூ.19.93 லட்சம் மானியத்தில் 21 பவர் டில்லர்கள், 6 விசைத்தெளிப்பான்கள் ஆகியவை வழங்கப்பட்டு உள்ளன.

    முன்னதாக குன்னூர் இளித்தொரையில் விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 8 விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள், 3 பேருக்கு விளை களையெடுப்பான் கருவிகளை வழங்கினார்.

    தமிழக அரசிடம் மானிய விலையில் பவர் டில்லர் பெற்ற சுள்ளிக்கூடு விவசாயி கோபால் என்பவர் கூறுகையில், எனக்கு தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை சார்பில் 50 சதவீதம் மானியத்தில் பவர்டில்லர் வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 10 நாட்கள் செய்யும் வேலையை 3-4 மணி நேரத்தில் முடித்து விடலாம். இது எனக்கு வேளாண்மையில் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். மேலூர் பகுதியை சேர்ந்த விவசாயி சாந்திக்கு ரூ.23,572 மானியத்தில் களையெடுப்பான் கருவி வழங்கப்பட்டு உள்ளது.

    சாந்தி கூறுகையில் இக்கருவி களையெடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சருக்கு நானும் என்னை போன்ற விவசாயிகளும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். 

    ×