search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pulikutty"

    • மகாராஷ்டிராவில் உள்ள தடோபா புலிகள் காப்பகத்திற்கு சச்சின் சென்றுள்ளார்.
    • இயற்கை அதிசயத்தை கண்டதில் எனக்கு மிக பெரிய பிரமிப்பு ஏற்பட்டது.

    கிரிக்கெட் ஜாம்பவன் சச்சின் தெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேசிய சுற்றுலாத்தினத்தை கொண்டாடும் வகையில் சச்சின் வெளியிட்ட அந்த வீடியோவில், மராட்டியத்தில் உள்ள தடோபா புலிகள் காப்பகத்திற்கு சச்சின் சென்றுள்ளார்.

    அங்கு 3 தலைமுறை புலிகள் நடந்து வரும் காட்சியை பார்த்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், இந்த இயற்கை அதிசயத்தை கண்டதில் எனக்கு மிக பெரிய பிரமிப்பு ஏற்பட்டது. தேசிய சுற்றுலாத்தினத்தை ஆரவாரத்துடன் கொண்டாடுகிறோம்! தடோபாவில் நான் 3 தலைமுறை புலிகளை பார்த்தேன். ஜூனோபாய் என்ற புலியின் குட்டி வீரா, வீராவின் குட்டிகள் என அனைவரையும் பார்த்தேன். இந்தியாவில் ஆராய்வதற்கு பல இடங்கள் உள்ளன என்று பதிவிட்டு இருந்தார். அவரது இந்த வீடியோ வைரலாகி வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி வனக்கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 10 புலிகள் இறந்துள்ளது.
    • புலிக்குட்டிகள் இறந்து கிடந்த இடத்துக்கு சற்று தொலைவில் ஒரு கடமானின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி வனக்கோட்டத்தில் ஊட்டி வனசரகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள சின்னகுன்னூரில் தாய்புலி ஒன்று 4 குட்டிகளுடன் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

    வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 குட்டிபுலிகள் சடலமாகவும், ஒரு குட்டிப்புலி உயிருக்கு போராடிய நிலையிலும் மீட்கப்பட்டது. ஆனால் அந்த புலியும் சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.

    மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நீலகிரி வனக்கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 10 புலிகள் இறந்துள்ளது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே இறந்த குட்டி புலிகளின் தாய் புலியின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அதனை தொடர்ந்து தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 நாளில் 4 வயதான புலிகள், 6 குட்டிப்புலிகள் என 10 புலிகள் இறந்துள்ளன. ஆகஸ்டு 16-ந் தேதி சீகூர் வனப்பகுதியில் நீரோடை அருகே 2 புலிகள் இறந்து கிடந்தன. அதனை ஆய்வு செய்தபோது அவை தாய்புலியால் கைவிடப்பட்டது தெரியவந்தது.

    ஆகஸ்டு 17-ந் தேதி நடுவட்டத்தில் ஒரு புலி இறந்து கிடந்தது. அந்த புலியின் உடலில் உள்ள காயங்களை ஆய்வு செய்த போது வேறு ஒரு புலியுடன் ஏற்பட்ட சண்டையில் இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது..

    இதேபோல் புலிகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஆகஸ்டு 31-ல் ஒரு புலி இறந்தது.

    தொடர்ந்து கடந்த 9-ந் தேதி அவலாஞ்சி உபரி நீர் ஓடை அருகே 2 புலிகள் இறந்து கிடந்தன.

    மாட்டு மாமிசத்தில் விஷம் வைத்து இந்த புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் உடல் உறுப்புகள் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தி சேகர் என்பவரை கைது செய்துள்ளோம்.

    கடந்த 14-ந் தேதி சின்னக்குன்னூரில் புலிக்குட்டிகள் சுற்றுவதாக வந்த தகவலின் பேரில் புலிகளை கண்டுபிடிக்கும் வல்லுநர்களை அனுப்பி தேடும் பணி நடந்தது.

    அடர்ந்த வனப்பகுதியில் 3 புலிக்குட்டிகள் இறந்த நிலையிலும், ஒரு புலிக்குட்டி உயிருக்கு போராடிய நிலையிலும் மீட்கப்பட்டது.

    அதனை மீட்டு சிகிச்சை அளித்த போது அந்த குட்டிபுலியும் இறந்துவிட்டது.

    இறந்த குட்டிகளை ஆய்வு செய்த போது, 4 குட்டிகளும் உணவின்றி இறந்தது தெரியவந்தது. இவற்றின் உடல் உறுப்பின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    புலிக்குட்டிகள் இறந்து கிடந்த இடத்துக்கு சற்று தொலைவில் ஒரு கடமானின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. அதன் மாதிரியும் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். மேலும் குட்டிகளின் தாய்புலியை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    பொதுவாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடைபெறும்.

    மேலும் கோரகுந்தா, குந்தா, நடுவட்டம் உள்ளிட்ட 6 சரகங்களில் முகாம்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படும். அத்துடன் அங்கு தொடர் கண்காணிப்புக்காக வேட்டை தடுப்பு காவலர்களும் நியமிக்கப்படுவர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×