என் மலர்tooltip icon

    நீலகிரி

    குன்னூரில் கடமான் வேட்டையாடிய 3 பேரை வன அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் வனச் சரகத்தில் சிறுத்தை, புலி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    வனத்தையொட்டியுள்ள விவசாயத்தோட்டங்களில் வனவிலங்குகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் தேயிலை மற்றும் மலைக்காய்கறி விவசாயிகள் தோட்டங்களுக்கு வேலி அமைத்துள்ளனர். இதில் வனவிலங்குகள் சிக்கி உயிரிழந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த பகுதியில் கடமான் வேட்டையாடப்பட்டதாக குன்னூர் வனச்சரகர் சசிகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இது குறித்து விசாரணை மேற்கொண்ட வன அதிகாரிகள் மூப்பர்காடு பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த மருதன் என்பவரின் மகன் மணிகண்டன் (28), கிருஷ்ணன் என்பரின் மகன் விக்னேஷ் (22), சுப்பிரமணி என்பவரின் மகன் ராஜூ (48) ஆகியோரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து வேட்டையாடிய கடமானை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் 3 பேருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்தனார்.

    குன்னூரில் 50 அடி பள்ளத்தில் மலைரெயில் பாதையில் சரக்கு லாரி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
    குன்னூர்:

    கோவையில் உள்ள தனியார் பார்சல் அலுவலகத்தில் இருந்து தினமும் சரக்கு லாரி ஒன்று பார்சல்களை ஏற்றி கொண்டு நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு செல்வது வழக்கம்.

    வழக்கம் போல் நேற்று நள்ளிரவும் கோவையில் உள்ள தனியார் பார்சல் அலுவலகத்தில் பார்சல்களை ஏற்றி கொண்டு குன்னூருக்கு சரக்கு லாரி புறப்பட்டது. இந்த லாரியை குன்னூரை சேர்ந்த சரவணன்(40) என்பவர் ஓட்டி வந்தார்.

    இன்று அதிகாலை அந்த லாரி குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையில் உள்ள தடுப்பு சுவரை இடித்து கொண்டு 50 அடி ஆழ பள்ளத்தில் உள்ள மலைரெயில் பாதையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில் லாரியில் இருந்த டிரைவர் சரவணன் வெளியில் வரமுடியாமல் தவித்தார். தகவல் அறிந்த குன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணனை மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி அரசு விடுதியில் மாணவர்களின் கல்வி சான்றிதழ்கள் திருட்டு போனது. இதுகுறித்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தேவையான படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊட்டி சேரிங்கிராசில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற சுத்தம் செய்யும் பணி நடந்தது. ஆனால் அந்த விடுதி மையமாக மாற்றப்படவில்லை.

    இதற்கிடையே விடுதியில் பிற மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்கி, ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகின்றனர். மாணவர்கள் சிலரின் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அசல் சான்றிதழ்கள், மடிக்கணினிகள் திருட்டு போனதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று முதுநிலை மாணவர்கள் 2 பேர், ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறோம். கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவால் உடனடியாக விடுதியில் இருந்து வெளியேற விடுதி காப்பாளர் அறிவுறுத்தினார். இதனால் வெளி மாவட்டங்களை சேர்ந்த நாங்கள் அவசர அவசரமாக எங்களது உடைமைகள், பொருட்கள், மடிக்கணினிகளை இரும்பு பெட்டியில் வைத்து பூட்டி விட்டு சென்றோம். கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு தொடர்வதால் நாங்கள் வீடுகளிலேயே முடங்கினோம். தற்போது ஆன்லைன் வகுப்புக்காகவும், ஆய்வு கட்டுரையை சமர்ப்பிக்கவும் எங்களது உடைமைகள் மற்றும் மடிக்கணினிகளை எடுத்து செல்ல அரசு பஸ்கள் மூலம் ஊட்டிக்கு வந்தோம். விடுதியில் உள்ள நாங்கள் தங்கிய அறைக்கு சென்று பார்க்கும்போது இரும்பு பெட்டிகளின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையிலேயும், மடிக்கணினிகள் இல்லாமலும் இருந்தது. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பி.எஸ்.சி. அசல் சான்றிதழ்கள் திருட்டு போனது.

    இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் கேட்டபோது, இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றார். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இது சம்பந்தமாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. திருப்பூர், தேனி மாவட்டத்தில் இருந்து வந்த நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். தற்போது இறுதியாண்டு செல்வதால் ஆன்லைன் வகுப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு மடிக்கணினி அவசியம். எங்களது குடும்பம் பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளதால் இந்த சூழலில் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறோம். எனவே திருட்டு போன மடிக்கணினிகள் மற்றும் அசல் சான்றிதழ்களை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    அவர்களிடம் இருந்து மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.  நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், கரூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    குன்னூரில் வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குறிப்பிட்ட சமூக மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். தற்போது இவர்கள் அனைத்து பகுதிகளிலும் பரந்து விரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

    குன்னூர் பகுதியை சேர்ந்தவர் உமாசங்கர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட சமுதாயம் பற்றியும், அந்த மக்களின் வாழ்வியலை பற்றியும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வந்துள்ளார்.

    தற்போது இந்த பதிவேற்றம் நீலகிரி மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்த அந்த சமூக மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த நிலையில் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சமூகம் குறித்து வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் புகார் கொடுத்து வருகின்றனர்.

    இதற்கிடையே அந்த சமூகத்தை சேர்ந்த 5 அமைப்புகள், வக்கீல் சுப்பிரமணி ஆகியோர் குன்னூர் போலீஸ் நிலையத்தில் சாதி பிரச்சனையை தூண்டும் வகையில் செயல்பட்ட அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

    அதன்பேரில் குன்னூர் போலீசார் உமா சங்கர் மீது அவதூறு பரப்புதல், பொதுமக்களிடையே கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உமாசங்கரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    முதுமலை வனப்பகுதியில் 4 செந்நாய்கள் இறந்து கிடந்தன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், புலிகள், கரடிகள், செந்நாய்கள், காட்டெருமைகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் என பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பகுதியான மசினகுடி அருகே உள்ள விபூதிமலை பகுதியில் 4 செந்நாய்கள் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் சீனிவாச ரெட்டி உத்தரவின்பேரில் வெளி மண்டல துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் மேற்பார்வையில் சிங்காரா வனச்சரகர் காந்தன் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    பின்னர் மசினகுடி கால்நடை டாக்டர் கோசலன் தலைமையிலான மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் இறந்து கிடந்த செந்நாய்களின் உடல் களை பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது செந்நாய்களின் வயிற்றுக்குள் அதிகமான இறைச்சிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து செந்நாய்களின் முக்கிய உடற்பாகங்களை மருத்துவ குழுவினர் சேகரித்து, சென்னை மற்றும் கோவையில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சிங்காரா வனத்துறையினர் கூறும்போது, செந்நாய்கள் இறந்து கிடக்கும் விலங்குகளின் இறைச்சிகளை சாப்பிடாது. உயிருடன் இருக்கும் விலங்குகளை கூட்டமாக சென்று வேட்டையாடி சாப்பிடும். ஆனால் எப்படி ஒரே நேரத்தில் 4 செந்நாய்கள் இறந்தன என தெரியவில்லை. மானை வேட்டையாடி சாப்பிட்டு இருக்கலாம். இறப்புக்கான காரணத்தை அறிய செந்நாய்களின் முக்கிய உடற்பாகங்களை சேகரித்து ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்து உள்ளோம்.

    அதன் அறிக்கை வந்த பின்னரே செந்நாய்கள் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். முதுமலை வனப்பகுதியில் ஒரே நேரத்தில் 4 செந்நாய்கள் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறைகேடு செய்த வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 2 பேரை சஸ்பெண்டு செய்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் கீழ் 13 கிராம ஊராட்சிகள் உள்ளது.

    இந்த நிலையில் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிலர், கிராம ஊராட்சி பணிகளை குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே ஒதுக்கி வந்துள்ளனர்.

    மேலும் இவர்களாகவே புதிய திட்டங்களை செயல்படுத்தியதாக கூறி தீர்மான புத்தகத்திலும் வரவு, செலவு கணக்குகளை ஏற்றி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபற்றிய புகார் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு வரவே, அவர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதில் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு வேலை பார்க்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், மேலாளர் ராஜ்குமார் ஆகியோரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். அவர்களிடம் தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஊட்டி, கொடைக்கானலில் 6 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா தலம் திறக்கப்பட்டுள்ளதால் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ஊட்டி:

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை, வனத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் மூடப்பட்டன. வெளியூர் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால் கடந்த 6 மாதங்களாக சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதற்கிடையே தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பொது பூங்காக்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை பூங்காக்கள் இன்று முதல் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்கப்பட்டது.

    சுமார் 6 மாதங்களுக்கு பின் சுற்றுலா தலம் திறக்கப்பட்டதால் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வெளிமாவட்ட பயணிகள் இ-பாஸ் பெற்று வர வேண்டும். உள்மாவட்ட பயணிகளுக்கு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.

    நீலகிரியில் தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, ரோஸ் பூங்கா, காட்டேரிப் பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது.
    சுற்றுலா பயணிகளை வரவேற்க ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகியவை திறக்கப்பட உள்ளது. இதற்காக பூங்காக்கள் தற்போது தயாராகி வருகிறது.
    ஊட்டி:

    உலக சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படும்.

    நீலகிரி மாவட்டம் சுற்றுலா தொழிலை நம்பியே உள்ளதால் இங்கு ஏராளமான காட்டேஜ், தங்கும் விடுதி, ஓட்டல், வணிக வளாகங்கள் உள்ளன. இது தவிர டாக்சி, சுற்றுலா வழிகாட்டி என்று பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில் கொரோனா வால் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    இதனால் கடந்த மே மாதம் நடக்க இருந்த கோடை விழா மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பூந்தொட்டிகளில் பூத்து குலுங்கிய லட்சக்கணக்கான மலர்களை யாரும் காண முடியவில்லை.

    இதனால் ஆன்லைன் மூலம் தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    தொடர்ந்து 5 மாதங்களாக நீடித்த கட்டுப்பாடுகளால் சுற்றுலா தலங்களை நம்பியிருந்த குடும்பங்கள் பெரும் பாதிப்படைந்தன. மேலும் சமவெளிப்பகுதியில் கொரோனாவால் முடங்கி கிடக்கும் பொதுமக்கள் மன அழுத்ததை போக்க ஊட்டிக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

    இந்நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் தமிழகத்தில் இ-பாஸ் ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் சுற்றுலா தளமான ஊட்டிக்கு இ-பாஸ் பெற்று வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி வியாபாரத் துக்கு இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் நாளை (9-ந்தேதி) முதல் சுற்றுலாவுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    வெளி இடங்களில் இருந்து இ-பாஸ் பெற்று சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளை மட்டுமே அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக சுற்றுலா பயணிகளை வரவேற்க ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, தேயிலைதோட்ட பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா ஆகியவை திறக்கப்பட உள்ளது. இதற்காக பூங்காக்கள் தற்போது தயாராகி வருகிறது. சுற்றுலா பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுவார்கள். கிருமி நாசினி மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    5 மாதங்களுக்கு பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளதால் அதனை நம்பியிருந்த ஓட்டல், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் புத்துயிர் பெற்றுள்ளது. சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் இ-பாஸ் பெற விண்ணப்பம் செய்து வருகிறார்கள்.
    நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் நாளை முதல் திறக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வரலாம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்து உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதை கட்டுப்படுத்த அவசிய, அவசர காரணங்களுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு குறித்து தலைமை செயலாளரிடம் எடுத்து கூறப்பட்டது. இதையடுத்து இ-பாசில் சுற்றுலா என்ற பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா வருகிறவர்கள் இ-பாஸ் பெற்று வரலாம். ஒரு நாளைக்கு எத்தனை பேர் வர அனுமதிக்கப்படுவார்கள் என்று முடிவு செய்யப்படும். அவர்கள் வருவதால் நீலகிரியில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏற்கனவே வேலை, தொழில் சம்பந்தமாக வருபவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதே நடைமுறை தொடர்ந்து இருக்கும். ஏற்கனவே காட்டேஜ், தங்கும் விடுதிகள் திறக்கப்பட்டு உள்ளன. சுற்றுலா சம்பந்தமாக வருகிறவர்கள் இ-பாசை காண்பித்து தங்கி கொள்ளலாம்.

    நீலகிரி மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) முதல் தோட்டக்கலை பூங்காக்கள் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்கப்படுகிறது. அதன்படி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் திறக்கப்படுகின்றன. ஆனால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் வனத்துறையின் கீழ் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்படாது. ஏற்கனவே அரசு அறிவித்தபடி பொது பூங்காக்கள் மட்டும் திறக்கப்படுகிறது. பூங்காக்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு ஏற்ப உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

    தற்போது மாவட்டங்களுக்கு இடையே அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளியிடங்களில் இருந்து வரும் நீலகிரி மக்கள் உள்ளூர் முகவரி ஆதார் அட்டையை காண்பித்து வரலாம். பிற மாவட்டங்களில் இருந்து வருகிறவர்கள் நீலகிரிக்கு வர இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். சுற்றுலா சம்பந்தமாக நீலகிரிக்கு வருகிறவர்கள் எத்தனை நாள் தங்கி இருக்க விண்ணப்பிக்கிறார்களோ, அதற்கு ஏற்ப இ-பாஸ் வழங்கப்படும். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், தொற்று உறுதியானால் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். தளர்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது. அறிகுறி தென்பட்டால் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்த முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி உடனிருந்தார்.
    பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து நீலகிரியில் 44 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.
    ஊட்டி:

    பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார வருமானமாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் 3 தவணைகளாக நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வேளாண்மை துறை மூலம் செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் அல்லாத பலர் போலி ஆவணங்கள் மூலம் நிதி உதவி பெற்று மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் முறைகேடாக திட்டத்தில் சேர்ந்தவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    தொடர்ந்து பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் பயன் பெறுபவர்கள் சிறு, குறு விவசாயிகளா? என்று உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தோட்டக்கலைத்துறைக்கு வேளாண்மை துறை உத்தரவிட்டது. அதன்பேரில் நீலகிரி மாவட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரியில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 48 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த ஆண்டு ரூ.2 ஆயிரம் 3 தவணைகளாக என மொத்தம் ரூ.6 ஆயிரம் அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது.

    இத்திட்டத்தில் சேர நிலத்துக்கான கணினி பட்டா அல்லது சிட்டா, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். நீலகிரியில் பிரதமர் நிதி உதவி திட்டத்தில் 44 பேர் விவசாயிகள் அல்லாதவர் பயன் பெற்று வருவது தெரியவந்தது. இவர்களது விவரங்கள் வேளாண்மை துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரியில் உள்ள வங்கிகளில் கணக்கு தொடங்கி திட்டத்தில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து 44 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. தொடர்ந்து 44 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. விரைவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசுக்கு செலுத்தப்படும். மற்ற கணக்குகளும் சரியாக உள்ளதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
    நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 9-ம் தேதி முதல் பூங்காக்கள் திறக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
    நீலகிரி:

    நாடு முழுவதும் தற்போது கொரோனா அச்சுறுத்தலால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.சுற்றுலா நடவடிக்கைள் முழுவதுமாக முடக்கப்பட்டன. இதனால், சுற்றுலாவை நம்பியிருந்த கடை வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மிகவும் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறைக்குத் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என அத்துறையை சார்ந்தவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

    இந்நிலையில், நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்களுக்கு இ-பாஸ் மூலமாக சுற்றுலாப் பயணிகள் வரலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று கூறுகையில், "சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வந்து செல்ல இ-பாஸ் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்காக இ-பாஸ் விண்ணப்பத்தில் 'சுற்றுலாப் பயணிகள்' என்று விண்ணப்பிக்கலாம்.

    சுற்றுலாப் பயணிகளுக்காக மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள பூங்காக்கள் மட்டும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி முதல் திறக்கப்படும். அவற்றில் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் இ-பாஸ் பெற்று லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கலாம்.

    ஆனால், தினமும் குறிப்பிட்ட அளவிலேயே சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கப்படும். மாவட்டத்துக்குள் வருபவர்கள் அனைருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்" என்றார்.

    நீலகிரி மாவட்டத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு சுற்றுலா தலங்கள் திறக்கப்படுவதால், சுற்றுலாவை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கள் வாழ்வாதாரத்துக்கு வழி பிறந்துள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    ×