search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதுமலை வனப்பகுதியில் இறந்து கிடந்த 4 செந்நாய்களை காணலாம்
    X
    முதுமலை வனப்பகுதியில் இறந்து கிடந்த 4 செந்நாய்களை காணலாம்

    முதுமலை வனப்பகுதியில் இறந்து கிடந்த 4 செந்நாய்கள்- வனத்துறையினர் விசாரணை

    முதுமலை வனப்பகுதியில் 4 செந்நாய்கள் இறந்து கிடந்தன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், புலிகள், கரடிகள், செந்நாய்கள், காட்டெருமைகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் என பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பகுதியான மசினகுடி அருகே உள்ள விபூதிமலை பகுதியில் 4 செந்நாய்கள் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் சீனிவாச ரெட்டி உத்தரவின்பேரில் வெளி மண்டல துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் மேற்பார்வையில் சிங்காரா வனச்சரகர் காந்தன் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    பின்னர் மசினகுடி கால்நடை டாக்டர் கோசலன் தலைமையிலான மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் இறந்து கிடந்த செந்நாய்களின் உடல் களை பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது செந்நாய்களின் வயிற்றுக்குள் அதிகமான இறைச்சிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து செந்நாய்களின் முக்கிய உடற்பாகங்களை மருத்துவ குழுவினர் சேகரித்து, சென்னை மற்றும் கோவையில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சிங்காரா வனத்துறையினர் கூறும்போது, செந்நாய்கள் இறந்து கிடக்கும் விலங்குகளின் இறைச்சிகளை சாப்பிடாது. உயிருடன் இருக்கும் விலங்குகளை கூட்டமாக சென்று வேட்டையாடி சாப்பிடும். ஆனால் எப்படி ஒரே நேரத்தில் 4 செந்நாய்கள் இறந்தன என தெரியவில்லை. மானை வேட்டையாடி சாப்பிட்டு இருக்கலாம். இறப்புக்கான காரணத்தை அறிய செந்நாய்களின் முக்கிய உடற்பாகங்களை சேகரித்து ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்து உள்ளோம்.

    அதன் அறிக்கை வந்த பின்னரே செந்நாய்கள் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். முதுமலை வனப்பகுதியில் ஒரே நேரத்தில் 4 செந்நாய்கள் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×