search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா
    X
    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா

    சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகும் ஊட்டி சுற்றுலா தலங்கள்

    சுற்றுலா பயணிகளை வரவேற்க ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகியவை திறக்கப்பட உள்ளது. இதற்காக பூங்காக்கள் தற்போது தயாராகி வருகிறது.
    ஊட்டி:

    உலக சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படும்.

    நீலகிரி மாவட்டம் சுற்றுலா தொழிலை நம்பியே உள்ளதால் இங்கு ஏராளமான காட்டேஜ், தங்கும் விடுதி, ஓட்டல், வணிக வளாகங்கள் உள்ளன. இது தவிர டாக்சி, சுற்றுலா வழிகாட்டி என்று பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில் கொரோனா வால் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    இதனால் கடந்த மே மாதம் நடக்க இருந்த கோடை விழா மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பூந்தொட்டிகளில் பூத்து குலுங்கிய லட்சக்கணக்கான மலர்களை யாரும் காண முடியவில்லை.

    இதனால் ஆன்லைன் மூலம் தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    தொடர்ந்து 5 மாதங்களாக நீடித்த கட்டுப்பாடுகளால் சுற்றுலா தலங்களை நம்பியிருந்த குடும்பங்கள் பெரும் பாதிப்படைந்தன. மேலும் சமவெளிப்பகுதியில் கொரோனாவால் முடங்கி கிடக்கும் பொதுமக்கள் மன அழுத்ததை போக்க ஊட்டிக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

    இந்நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் தமிழகத்தில் இ-பாஸ் ரத்து செய்யப்பட்டது. ஆனாலும் சுற்றுலா தளமான ஊட்டிக்கு இ-பாஸ் பெற்று வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி வியாபாரத் துக்கு இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் நாளை (9-ந்தேதி) முதல் சுற்றுலாவுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    வெளி இடங்களில் இருந்து இ-பாஸ் பெற்று சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளை மட்டுமே அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக சுற்றுலா பயணிகளை வரவேற்க ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, தேயிலைதோட்ட பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா ஆகியவை திறக்கப்பட உள்ளது. இதற்காக பூங்காக்கள் தற்போது தயாராகி வருகிறது. சுற்றுலா பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுவார்கள். கிருமி நாசினி மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    5 மாதங்களுக்கு பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளதால் அதனை நம்பியிருந்த ஓட்டல், வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் புத்துயிர் பெற்றுள்ளது. சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் இ-பாஸ் பெற விண்ணப்பம் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×