என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நீலகிரியில் தற்போது தினமும் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று உறுதியாகிறது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் நடமாடும் வாகனம் மூலம் ஆரம்ப சுகாதார நிலையத்தினர் சென்று அங்கு வசிப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவார்கள். நீலகிரியில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) ஒரே நாளில் 3,700 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
கேரளா, கர்நாடகா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வாரவிடுமுறை நாட்களில் அதிகம் பேர் வருகின்றனர். அவர்கள் இ-பாஸ் நடைமுறை மூலம் அனுமதிக்கப்படுகின்றனர்.
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களை கண்காணித்து அபராதம் விதிக்க மாவட்டம் முழுவதும் 70 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் உள்ள பகுதிகளில் வீடு, வீடாக கிருமிநாசினி தெளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் நகராட்சி சார்பில் அரசு அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊட்டி ஒன்றியம் கக்குச்சி ஊராட்சி பில்லிக்கம்பையில் உள்ள சக்தி நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது.
குறிப்பாக மின் அழுத்த பிரச்சினை காரணமாக அடிக்கடி மின்வெட்டு நிகழ்வதால், இரவில் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் அந்த கிராமத்தின் நுழைவு பகுதியில் கையில் கருப்பு கொடியுடன் மக்கள் திரண்டனர். பின்னர் அடிப்படை வசதி கேட்டு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கக்குச்சி ஊராட்சி துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலர் பரிமளா ஆகியோர் விரைந்து வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பேசினால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறினர்.
இதையடுத்து அங்கு ஊட்டி தாசில்தார் குப்புராஜ் வந்தார். பின்னர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 6 மணி நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து முககவசம், சமூக இடை வெளியை கடைபிடிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
குன்னூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தி.மு.க சார்பில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
1000- க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் சமூக இடைவெளி இல்லாமல் நடைபெறுவதாகவும், சிலர் முககவசம் அணியாமல் பங்கேற்று இருப்பதாகவும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் வந்ததது.
உடனடியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விரைந்து மண்டபத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு முககவசம், சமூக இடைவெளியை இல்லாதது உறுதியானது.
இதையடுத்து பறக்கும்படை அதிகாரிகள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதிகளை கொண்டது. இங்கு காட்டுயானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது, வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதும், விவசாய பயிர்களை நாசப்படுத்துவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில நேரங்களில் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேங்கோரேஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் 2 வயது பெண் சிறுத்தை குட்டி உடலில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது.
இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் தேவாலா வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேயிலை செடிகளுக்கு இடையில் மேலும் 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. அடுத்தடுத்த நாட்களில் 3 சிறுத்தை குட்டிகள் இறந்து கிடந்ததால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அங்கு கூடலூர் வன அலுவலர் ஓம்கார், வனச்சரகர் கலைவேந்தன் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் முதுமலையில் இருந்து கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு, சிறுத்தை குட்டிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
பின்னர் வனத்துறையினர் கூறியதாவது:-
அடுத்தடுத்த நாட்களில் 3 சிறுத்தை குட்டிகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆண் சிறுத்தையும், பெண் சிறுத்தையும் இணையும் நேரத்தில் இடையூறாக இருந்ததால் குட்டிகளை அவை கடித்து விரட்டியிருக்கலாம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மேற்கொண்டு தகவல் தெரியும். அந்த சிறுத்தைகள் அருகில் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
சமூக வலைதளத்தில் கடந்த சில நாட்களாக ஒரு பள்ளி மாணவிக்கு வாலிபர் ஒருவர் கோவில் பின்புறம் வைத்து தாலிகட்டும் வீடியோ வைரலானது.
இந்த காட்சி நீலகிரி மாவட்டம் குன்னூரில் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வீடியோவில் உள்ள கோவில் எங்கள் பகுதியை சேர்ந்தது என்றும், மாணவி அணிந்திருந்த சீருடை இங்குள்ள ஒரு பள்ளி சீருடை என்றும் குன்னூர் போலீசில் புகார் செய்தனர்.
வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். சீருடைக்கு உரிய பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள ஆசிரியர்களிடம் மாணவியின் வீடியோவை காட்டி கேட்டபோது ஒரு வருடத்துக்கு முன்பு தங்கள் பள்ளியில் இந்த மாணவி 10-ம் வகுப்பு படித்ததாகவும், அதன்பின்னர் அவர் பள்ளிக்கு வருவதில்லை என்றும் கூறினர். மேற்கொண்டு மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து தாலிகட்டிய வாலிபர் குறித்து விசாரித்தபோது அவர் குன்னூர் கொலக்கம்பை சட்டன் பகுதியில் உள்ள கிளிஞ்சடா பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 23) என்பது தெரியவந்தது.
அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது:-
நானும், பள்ளி மாணவியும் காதலித்து வந்தோம். காதலுக்கு மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் காதலை பிரித்து விடுவார்களோ என்று அச்சம் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவியிடம் இது குறித்து கூறி திருமணம் செய்து கொள்ளலாம். அதன்பின்னர் நம்மை பிரிக்க முடியாது என்று கூறினேன். இதற்கு மாணவி சம்மதித்தார். மகிழ்ச்சியடைந்த நான் இது குறித்து எனது நண்பர்களிடம் கூறினேன். அவர்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறினர்.
இதனையடுத்து ஒரு நல்ல நாளில் கோவிலில் மங்கள இசை முழங்கியது. அப்போது மாணவி பள்ளி செல்வதாக கூறிவிட்டு சீருடையுடன் கோவிலுக்கு வந்தார். கோவில் பின்புறம் மாணவியை நிற்க வைத்து மஞ்சள் கயிறை கட்டினேன்.
மாணவியும் அலைபாயுதே பாணியிலேயே தாலியை மறைத்து வீட்டில் சமாளித்து வந்தார். ஒரு கட்டத்தில் மாணவியின் நடவடிக்கையை கண்ட பெற்றோர் அவரை கண்காணிக்க தொடங்கினர். ஒரு நாள் மாணவியின் கழுத்தில் தாலி கிடப்பதை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் அவர்களது குடும்பத்தில் பெரும் பிரச்சனை எழுந்தது. இதனையடுத்து நான் கட்டிய தாலியை பெற்றோர் கழற்றி எறிந்து விட்டு மாணவியை திருச்செங்கோட்டுக்கு அழைத்துச்சென்று விட்டனர். அவர்கள் சென்று ஒரு வருடம் ஆகிறது. மாணவி குறித்து வேறு எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. ஒரு வருடத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோவை எனது நண்பர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி தான் சிக்கிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்டோபரை போலீசார் கைது செய்தனர். மாணவியை கண்டு பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்வது வழக்கம். இக்காலகட்டங்களில் பாண்டியாறு, மாயாறு, பொன்னானி, ஓவேலி, சுண்ணாம்பு பாலம் உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதேபோன்று கூடலூர் மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் தடுப்பணைகளிலும் தண்ணீர் இருப்பு அதிக அளவு காணப்படும். இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை மழைக்காலங்களில் ஏற்படுவதில்லை.
ஆனால் அதன்பின் வரும் மாதங்கள் கோடைகாலம் என்பதால் கடும் வறட்சியால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்து காணப்படும். அதன்படி இந்த ஆண்டும் கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் வெளியில் நடமாடவே மிகவும் சிரமப்படுகின்றனர். இது தவிர பாண்டியாறு, மாயாறு உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. குறிப்பாக ஓவேலி பகுதியில் உள்ள தடுப்பணைகளிலும் நீர் வரத்து அடியோடு குறைந்து விட்டது.
வறட்சியான காலநிலை நிலவுவதால் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கும் பசுந்தீவனம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பணைகளில் இருந்து கூடலூருக்கு வரும் குடிநீர் குழாய்களை காட்டுயானைகள் உடைத்து தாகத்தை தணித்து வருகிறது. மேலும் தடுப்பணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் கூடலூர் நகர மக்களுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் கூடலூர் நகர பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கிணறுகளை சீரமைக்கும் பணிகளில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் மக்களுக்கு நகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கும் பணியும் தொடங்கப்பட்டு உள்ளது. மேல் மற்றும் நடு கூடலூர், ஊட்டி சாலை உள்பட பல்வேறு பகுதி மக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
கோடைகாலத்தில் தடுப்பணையில் தண்ணீர் போதிய அளவு இருப்பதில்லை. இதனால் நகராட்சிக்கு சொந்தமான கிணறுகள் தூர்வாரப்பட்டு அந்தந்த பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ஹெல்த் கேம்ப், ராஜகோபாலபுரம் உள்பட சில இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க கலெக்டர் அனுமதி வழங்கி உள்ளார்.
இதைத்தொடர்ந்து ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மின் மோட்டார்கள் மூலம் நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் நகராட்சி லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குஞ்சப்பனையில் உள்ள மந்தரை கிராமத்தை சேர்ந்தவர் மணி(வயது 66). பழங்குடியின இசை கலைஞர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் மணி நேற்று முன்தினம் காலையில் அதே பகுதியை சேர்ந்த குழுவினருடன் அரவேனு பகுதியில் இசை நிகழ்ச்சி நடத்த சென்றார். பின்னர் அங்கிருந்து மாலையில் அவர்கள் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். மேலும் மது குடித்து இருந்தனர்.
இதற்கிடையில் இசை நிகழ்ச்சியில் கிடைத்த பணத்தை பிரித்து கொள்வதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன்பின்னர் அவர்கள் சமாதானம் அடைந்து, தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
ஆனால் மணி அவரது வீட்டுக்கு வரவில்லை. அவரை உறவினர்கள் தேடி வந்தனர். அப்போது வீட்டின் அருகில் உள்ள காபி தோட்டத்தில் உடலில் பலத்த காயங்களுடன் மணி இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது சம்பள பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் மணி அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து 2 தனிப்படை அமைத்து, தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று அவரது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென அவரது பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து அக்கட்சி நிர்வாகிகள் கூறும்போது, குன்னூர் மற்றும் கூடலூர் தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததன் காரணமாக பிரசாரத்தில் அதிகம் பேர் பங்குபெற முடியாது என்ற காரணத்தால் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய உள்ள நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றனர். ஆனால் நீலகிரிக்கு கமல்ஹாசன் ஹெலிகாப்டரில் வர அனுமதி வழங்கவில்லை என்றும், அதன் காரணமாகவே தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொற்றை பரப்பும் வகையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் ஊட்டி நகராட்சியில் சுகாதார அதிகாரிகள் தனிக்குழு அமைத்து சோதனை செய்து வருகின்றனர். அவர்கள் ஊட்டி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, நகராட்சி மார்க்கெட், மத்திய பஸ் நிலையம், சுற்றுலா தலங்கள் உள்ள பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரிபவர்கள் முகக்கவசம் அணிந்து உள்ளார்களா, வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சரியான விதத்தில் முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா என்று கண்காணித்து அபராதம் விதித்தனர். கடந்த 5 நாட்களில் முகக்கவசம் அணியாத நபர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் கடைகள், வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் நின்று இருந்தால் சம்பந்தப்பட்ட கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.






