என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை குட்டிகளை காணலாம்
    X
    தனியார் தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை குட்டிகளை காணலாம்

    தனியார் தேயிலை தோட்டத்தில் மேலும் 2 சிறுத்தை குட்டிகள் இறந்து கிடந்தன

    பந்தலூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் மேலும் 2 சிறுத்தை குட்டிகள் இறந்து கிடந்தன. இதனால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
    பந்தலூர்:

    நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதிகளை கொண்டது. இங்கு காட்டுயானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது, வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதும், விவசாய பயிர்களை நாசப்படுத்துவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில நேரங்களில் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது.

    இதற்கிடையில் நேற்று முன்தினம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேங்கோரேஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் 2 வயது பெண் சிறுத்தை குட்டி உடலில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது.

    இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் தேவாலா வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேயிலை செடிகளுக்கு இடையில் மேலும் 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. அடுத்தடுத்த நாட்களில் 3 சிறுத்தை குட்டிகள் இறந்து கிடந்ததால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் அங்கு கூடலூர் வன அலுவலர் ஓம்கார், வனச்சரகர் கலைவேந்தன் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் முதுமலையில் இருந்து கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு, சிறுத்தை குட்டிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

    பின்னர் வனத்துறையினர் கூறியதாவது:-

    அடுத்தடுத்த நாட்களில் 3 சிறுத்தை குட்டிகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆண் சிறுத்தையும், பெண் சிறுத்தையும் இணையும் நேரத்தில் இடையூறாக இருந்ததால் குட்டிகளை அவை கடித்து விரட்டியிருக்கலாம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மேற்கொண்டு தகவல் தெரியும். அந்த சிறுத்தைகள் அருகில் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×