என் மலர்tooltip icon

    நீலகிரி

    நீலகிரியில் இதுவரை ரூ.2 கோடியே 6 லட்சத்து 15 ஆயிரத்து 390 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை செய்தனர். ஊட்டி சட்டமன்ற தொகுதியில் ரூ.54 ஆயிரம், கூடலூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.57 ஆயிரம், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.3 லட்சத்து 99 ஆயிரத்து 900 என மொத்தம் ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்து 900 உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

    உடனடியாக இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நீலகிரியில் இதுவரை ரூ.2 கோடியே 6 லட்சத்து 15 ஆயிரத்து 390 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
    எனது பேச்சு, தனி மனித விமர்சனம் அல்ல. பொது வாழ்வில் உள்ள 2 ஆளுமைகளின் மதிப்பீடு என்று ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.
    ஊட்டி:

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, சென்னையில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் பற்றி சர்ச்சை அளிக்கும் வகையில் பேசினார்.

    ஆ.ராசாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ராசாவின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ராசாவை கண்டித்து நேற்று சென்னை, சேலம் உள்பட தமிழகத்தின் பல இடங்களில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எடப்பாடி பழனிசாமி

    இந்தநிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமி, ராசாவின் பேச்சு குறித்து வருத்தப்பட்டு மிகவும் கண் கலங்கினார். எடப்பாடி பழனிசாமி கண்கலங்கியது பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி தாயார் பற்றி தெரிவித்த கருத்துக்காக ஆ.ராசா இன்று மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக ஊட்டியில் இன்று அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    முதல்வர் பழனிசாமி குறித்த விமர்சனத்திற்காக நான் மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன். என் பேச்சை சுட்டி காட்டி முதல்-அமைச்சர் கண் கலங்கியதால் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் கலங்கினார் என்பதை கேட்டு நான் மிகவும் மனவேதனை அடைந்தேன்.

    சித்தரிக்கப்பட்ட, தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக என் அடிமனதின் ஆழத்தில் இருந்து மன்னிப்பு கேட்கிறேன். இன்னும் ஒருபடி மேலே போய் சொல்ல போனால் முதல்-அமைச்சர் அரசியலுக்காக அல்லாமல் உண்மையிலேயே அவர் காயப்பட்டிருந்தால் எனது மனம் திறந்த மன்னிப்பை கோருவதில் எனக்கு சிறிதளவும் தயக்கம் இல்லை. முதல்வர் மற்றும் கட்சிக்காரர்களுக்கு நான் குறிப்பிட விரும்புவது எனது பேச்சு 2 தலைவர்கள் பற்றிய தனிமனித விமர்சனம் அல்ல. பொதுவாழ்வில் உள்ள 2 அரசியல் ஆளுமை குறித்த மதிப்பீடும், ஒப்பீடும்தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    நீலகிரியில் ரூ.250 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்று குன்னூர் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
    குன்னூர்:

    தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர்(தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, குன்னூர் வி.பி. தெருவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அமைச்சருக்கு நகர அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

    குன்னூரில் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம், அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு இழந்தவர்களுக்கு, புதிய வீடு கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.

    படுகர் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது, அ.தி.மு.க. அரசு. ஈழுவா, தீயா மக்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக உள்ளது. நீலகிரியில் மட்டும் கூட்டுறவு வங்கியில் பெற்ற ரூ.250 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் சாலை வசதி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,500, ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர், வாஷிங் மெஷின் வழங்கப்படும். கொரோனா காலத்திலும் பொங்கல் பண்டிகையின்போது குடும்பத்துக்கு ரூ.2,500 வழங்கினார், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மேலும் மாவட்டந்தோறும் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக்கல்லூரி, அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு, நகர செயலாளர் சரவணகுமார், முன்னாள் மாவட்ட செயலாளர் பாலநந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து கோத்தகிரியிலும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
    ஸ்ரீமதுரை ஊராட்சியில் வீடு, வாழைகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
    கூடலூர்:

    கூடலூர், முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் வெளியேறி ஊருக்குள் வருகின்றன. இதனால் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பக கரையோரத்தில் ஸ்ரீமதுரை ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் காட்டுயானைகள் இரவில் புகுந்து வீடுகள், விவசாய பயிர்களை தினமும் சேதப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஓடக்கொல்லி பகுதியை சேர்ந்த பெண் தொழிலாளியின் வீட்டை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியது.

    இந்த சமயத்தில் வீட்டில் தனியாக இருந்த அந்த பெண், பின்பக்க வாசல் வழியாக வெளியே தப்பி ஓடி உயிர் பிழைத்தார். பின்னர் கிராம மக்கள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டி அடித்தனர். இருப்பினும் காட்டுயானை தொடர்ந்து அப்பகுதிக்கு வருகிறது. மேலும் அப்பகுதியில் பயிரிட்டுள்ள வாழைகளை தினமும் தின்று சேதப்படுத்தி அட்டகாசம்செய்து வருகிறது. இதுவரை 400-க்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு யானை நாசம் செய்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதேபோன்று கூடலூர் அருகே முன்டக்குன்னு பகுதியில் காட்டுயானைகள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த ஆதிவாசி ஒருவரது வீட்டை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தின. இதனால் ஆதிவாசி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது:-

    கூடலூர் பகுதியில் கோடைகாலத்தையொட்டி வறட்சி காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் போதிய பசுந்தீவனம் கிடைப்பதில்லை. நீர்நிலைகளும் வறண்டு விட்டதால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் அதிகளவு வருகிறது. இதை தடுக்க வரும் நாட்களில் வனப்பகுதியில் பசுந்தீவனத்தை பெருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அகழிகளை ஆழப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் மூலம் வாக்களித்தனர்.
    ஊட்டி:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்கள் என தபால் ஓட்டு கோரிய நபர்களிடம் இருந்து தபால் ஓட்டு சேகரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்களிடம் தபால் ஓட்டு பெறும் பணி நேற்று முதல் தொடங்கியது.

    ஊட்டி ரெக்ஸ் பள்ளி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, பெத்தலகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அங்கு 3 தொகுதிகளுக்கும் தனித்தனியாக மேஜைகள் போடப்பட்டு, ஊழியர்கள் தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவத்தை தேர்தல் பணியாளர்களுக்கு வழங்கினர். அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்று சரி பார்க்கப்பட்டு வாக்குச்சீட்டு, உறுதிமொழி படிவம் வழங்கப்பட்டது.

    விண்ணப்ப படிவம் மற்றும் உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து தபால் ஓட்டு போடுவதற்காக மறைவு அட்டை வைக்கப்பட்டு இருந்தது. ஓட்டு போட்ட வாக்குச்சீட்டை தபாலில் மடித்து வைத்து அந்தந்த தொகுதிகளுக்கு என்று சீலுடன் வைக்கப்பட்ட பெட்டிகளில் செலுத்தினர்.

    நேற்று முதல் நாள் என்பதால் தபால் வாக்கு செலுத்த தேர்தல் பணியாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தபால் வாக்கு நடைபெறுவது வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.

    இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, நீலகிரியில் 3 தொகுதிகளில் 4,168 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்கள் இன்று (அதாவது நேற்று) மட்டுமல்லாமல் வருகிற நாட்களில் தொடர்ந்து தபால் வாக்கு செலுத்தலாம். தேர்தல் பணி ஆணை பெறும் நாளில் தபால் ஓட்டு செலுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் ஊட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தபால் வாக்கு செலுத்தலாம். அதன் பின்னர் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றனர்.
    நீலகிரி மாவட்டத்தில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு தினமும் 1,200 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. தினமும் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் தொற்று ஏற்பட்ட நபருடன் தொடர்பில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொற்று பரவுவதை தடுக்க சுகாதார குழுவினர் முகாமிட்டு காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. நீலகிரியில் தினமும் 1,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதால், பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு தினமும் 1,200 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கோத்தகிரி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் குன்னூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
    கோத்தகிரி:

    தமிழக சட்டமன்றத்துக்கு வருகிற 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் பறக்கும் படை அலுவலர் நேரு மகேந்திரன் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்களின்றி ஊட்டி கீழ் கோடப்பமந்துவை சேர்ந்த ஜெயராம் என்பவர் ரூ.52 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வழியாக வந்த குன்னூர் எடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சந்தீப் மேனன் என்பவர் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.50 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு பகுதியில் நேற்று முன் தினம் இரவு, பறக்கும் படை அலுவலர் முபாரக் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி அரவேனு கேசலாடாவை சேர்ந்த பிரவீன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.68 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

    கோத்தகிரி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் குன்னூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
    கூடலூரில் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நகர பகுதியில் 5 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் தற்போது இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கூடலூரில் உள்ள முக்கிய ஆறுகளில் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்து விட்டது. மேலும் கூடலூர் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஓவேலி பல்மாடி, ஆத்தூர், ஹெலன் உள்பட பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளில் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. இதனால் கூடலூர் நகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து கோக்கால், ஹெல்த் கேம்ப், ராஜகோபாலபுரம், கே.கே. நகர், அத்திப்பாளி, இரும்பு பாலம் ஆகிய 5 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க தடை அமலில் உள்ளதால், இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து உரிய அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் 5 இடங்களில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் குடிநீர் வழங்கல் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து நிலத்தடி நீரோட்டம் கண்டறியும் பணி நடைபெற்றது.

    பின்னர் அடையாளம் காணப்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். தொடர்ந்து விரைவாக பணிகளை முடிக்க உத்தரவிட்டனர்.

    இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    கூடலூர் நகர மக்களுக்கு தடுப்பணைகள் மற்றும் பாண்டியாற்றில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. வறட்சியின் தாக்கம் அதிகமாகி வருவதால் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை காணப்படுகிறது. இதனால் நகரப் பகுதியில் 5 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது.

    தொடர்ந்து மின் மோட்டார்கள் மூலம் நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும். மேலும் பொதுமக்களும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு குடிநீரை வீணாக்க கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ஊட்டியில் குதிரை பந்தயம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது, ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பொழுதுபோக்கும் வகையில் ஊட்டியில் கடந்த 1905-ம் ஆண்டு முதல் குதிரை பந்தயத்தை தொடங்கினர். ஊட்டி நகரின் மத்திய பகுதியில் குதிரை பந்தய மைதானம் உள்ளது. ஊட்டியில் நடைபெறும் பந்தயம் புகழ்பெற்றது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் குதிரை பந்தயம் ரத்து செய்யப்பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    நடப்பாண்டில் குதிரை பந்தயம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக குதிரை பந்தய மைதானத்தை பராமரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. ஓடுதள புல்வெளியில் தண்ணீர் பாய்ச்சியும், மணல் கொட்டியும் சரி செய்யப்படுகிறது. ஓடுதள ஓரத்தில் உள்ள கம்பிகளுக்கு வர்ணம் பூசப்பட்டு உள்ளது. குதிரை பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத், புனே போன்ற இடங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குதிரைகள் பிரத்யேக வாகனங்களில் ஊட்டி குதிரை பந்தய மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

    குதிரைகள் பாதுகாப்பாக இருப்பதற்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. குதிரை பந்தய ஓடுதளத்தை சுற்றி 4 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நவீன கேமராக்கள் மூலம் பந்தயம் பதிவு செய்யப்பட்டு மற்ற இடங்களில் உள்ள குதிரை பந்தய மைதானங்களில் இருந்தவாறு பார்ப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது. வருகிற ஏப்ரல் 14-ந் தேதி முதல் குதிரை பந்தயம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவி வருவதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி இடங்களில் இருந்து குதிரைகளை பந்தயத்துக்கு கொண்டு வருகிறவர்கள், ஜாக்கிகள் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தொற்று பரவலை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
    சமீபத்தில் பிறந்த குட்டியுடன் யானைக் கூட்டம் கடந்த 3 நாட்களாக நடமாடுவதை தெரிவித்தும் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், பந்தலூர் ஏலமண்ணா ஆதிவாசி காலனியைச் சேர்ந்த சடையன் (வயது52), பெருங்கரையை பகுதியைச் சேர்ந்த முத்துசாமி( 63) ஆகியோர் வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியபோது காட்டு யானைகள் அவர்களை தாக்கி கொன்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் அங்கு சென்றனர்.

    சமீபத்தில் பிறந்த குட்டியுடன் யானைக் கூட்டம் கடந்த 3 நாட்களாக நடமாடுவதை தெரிவித்தும் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்.

    கூடலூர் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், கூடலூர் டி.எஸ்.பி. ஜெய்சிங், பந்தலூர் டி.எஸ்.பி. அமீர் அகமது, அதிகாரிகள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் யானைகளை விரட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    முதுமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
    கூடலூர்:

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், ஊட்டி, குன்னூர் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான இன்னசென்ட் திவ்யா தேர்தல் பணிகளை ஒவ்வொரு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பார்வையிட்டு வருகிறார்.

    இந்த நிலையில் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி ஊராட்சி பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று ஆய்வு செய்தார்.

    இதன்படி மசினகுடி ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளி மற்றும் மாயார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கார்குடி அரசு உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளை அவர் பார்வையிட்டார்.

    பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணத்தினால் ஆயிரத்து 50-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து துணை வாக்குச்சாவடி மையங்களை ஏற்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 868 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் உறுதிசெய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று தற்காலிக கூடாரம் அமைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதேபோல் வாக்குச்சாவடி மையங்களில் சாய்வு தளம் வசதிகள், கழிப்பிடம், தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலின் போது எந்தவொரு சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படாத வகையில் அலுவலர்கள் மற்றும் போலீசார் இணைந்து தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது கூடலூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலரும் ஆர்.டி.ஓ.வுமான ராஜ்குமார் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
    ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு செய்முறை தேர்வு 31-ந் தேதி வரை நடக்கிறது.
    ஊட்டி:

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கடந்த டிசம்பர் 7-ந் தேதி முதல் அரசு கலைக்கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகளுக்கு சுழற்சி முறையில் சமூக இடைவெளியை பின்பற்றி நேரடியாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா 2-வது அலை பரவி வருகிறது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாணவ-மாணவிகள் கல்லூரிகளுக்கு வர வேண்டாம். இணைய வழி வகுப்புகள் மூலம் பாடங்களை படிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதைதொடர்ந்து நேற்று ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் வருகை மிகவும் குறைவாக இருந்தது.

    இளநிலை 3-ம் ஆண்டு, முதுநிலை 2-ம் ஆண்டு மாணவர்கள் செய்முறை தேர்வுகளுக்காக கல்லூரிக்கு வந்து இருந்தனர். உயிரியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வருகிற 31-ந் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறுகிறது. அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், கட்டாயம் முகக்கவசம் அணிந்தும் இருக்கைகளில் அமர வைக்கப்பட்டு இருந்தனர்.

    ஆனால் இளநிலை முதலாமாண்டு, 2-ம் ஆண்டு, முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லை. அவர்களுக்கு சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் கல்லூரிக்கு வருகை தந்து ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் அவர்கள் மீண்டும் வீடுகளில் இருந்தபடியே கல்வி கற்க உள்ளனர்.

    இதுகுறித்து துறை தலைவர்கள், பேராசிரியர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகம் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. நீலகிரியில் ஊட்டி, குன்னூரில் உள்ள தனியார் கல்லூரிகளிலும் செய்முறை தேர்வு மட்டும் நடக்கிறது. மற்ற மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரவில்லை. அதேபோல் 9, 10, 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் கடந்த 22-ந் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×