என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்தல் பிரசாரம்
    X
    அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்தல் பிரசாரம்

    நீலகிரியில் ரூ.250 கோடி பயிர் கடன் தள்ளுபடி- அமைச்சர் எஸ்பி வேலுமணி பேச்சு

    நீலகிரியில் ரூ.250 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்று குன்னூர் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
    குன்னூர்:

    தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர்(தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, குன்னூர் வி.பி. தெருவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அமைச்சருக்கு நகர அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

    குன்னூரில் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம், அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு இழந்தவர்களுக்கு, புதிய வீடு கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது.

    படுகர் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது, அ.தி.மு.க. அரசு. ஈழுவா, தீயா மக்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக உள்ளது. நீலகிரியில் மட்டும் கூட்டுறவு வங்கியில் பெற்ற ரூ.250 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் சாலை வசதி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,500, ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர், வாஷிங் மெஷின் வழங்கப்படும். கொரோனா காலத்திலும் பொங்கல் பண்டிகையின்போது குடும்பத்துக்கு ரூ.2,500 வழங்கினார், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மேலும் மாவட்டந்தோறும் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக்கல்லூரி, அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு, நகர செயலாளர் சரவணகுமார், முன்னாள் மாவட்ட செயலாளர் பாலநந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து கோத்தகிரியிலும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
    Next Story
    ×