என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள செவிடிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜன். இவருடைய மனைவி பவானி(வயது 28). கூடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். மேலும் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் பவானி கடந்த மாதம் 30-ந் தேதி கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கூடலூர் போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் நேற்று மாலை 5 மணியளவில் கூடலூர் கிளை நூலகத்தின் கழிப்பறையில் ஒரு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்குவதாக கூடலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அது காணாமல் போன பவானி என்பது தெரியவந்தது. பின்னர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும் அவருக்கு திருமணம் ஆகி 6 மாதங்களே ஆவதால், ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. நூலக கழிப்பறையில் ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரித்தார்.
நீலகிரி மாவட்டம் ஜெயலலிதாவுக்கு பிடித்த மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை செய்து கொடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான மருத்துவ கல்லூரியை ஊட்டியில் கொண்டு வந்தது அ.தி.மு.க அரசு. உங்கள் ஊரிலேயே உலக தரம் வாய்ந்த மருத்துவமனை அமைய உள்ளது. எனவே நீங்கள் இனி கோவைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. மருத்துவ கல்லூரி கட்டி முடிக்கப்பட்டதும் உங்களின் ஆதரவோடு வெற்றி பெற்று நான் வந்து இந்த கல்லூரியை திறந்து வைப்பேன் என நம்புகிறேன்.
மேலும் கூடலூரில் பல ஆண்டுகளாக நில பிரச்சனை நிலவி வருகிறது. இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
பட்டா மற்றும் இலவச மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த தொகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 800 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் வீடுகள் இல்லாதவர்களுக்கு சொந்தமாக நிலம் வாங்கி கான்கிரிட் வீடுகள் கட்டிதரப்படும். இந்த தொகுதிக்கு 8 அம்மா மினி கிளினிக் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்களும் மிகவும் பயனடைந்து வருகிறார்கள். இதுதவிர விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன்கனையும் தள்ளுபடி செய்துள்ளோம்.
இந்த தொகுதியில் உள்ள தெப்பக்காடு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதுதவிர எண்ணற்ற பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. நமது வேட்பாளர் வெற்றி பெற்று வந்ததும் இந்த தொகுதி நீலகிரி மாவட்டத்திலேயே முதன்மை தொகுதியாக மாறும்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எனது தலைமையிலான அரசு சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறது. பல துறைகளில் சாதனை படைத்து அதற்காக ஏராளமான விருதுகளை வாங்கியதும் தமிழக அரசு தான். ஒரு நாடு வளம் பெற வேண்டுமானால், செழிக்க வேண்டுமானால் அமைதி, சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் குன்னூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கப்பச்சி வினோத் மற்றும் ஊட்டி தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளரை ஆதரித்து குன்னூரில் பிரசாரம் மேற்கொண்டார்.
பின்னர் அங்கிருந்து கோவை வரும் எடப்பாடி பழனிசாமி பிற்பகல் 3 மணிக்கு கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அதனை தொடர்ந்து ஈரோடு, நாமக்கல் மாவட் டங்களுக்கு சென்று பிரசாரம் செய்கிறார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடிகள், குன்னூர் தொகுதியில் 280, கூடலூர் தொகுதியில் 280 என மொத்தம் 868 வாக்குச்சாவடிகள் உள்ளது. நீலகிரி மலைப்பிரதேசமாக உள்ளதால் சில வாக்குச்சாவடிகள் அதிக தொலைவில் இருக்கிறது. அங்கு வனப்பகுதி வழியாகதான் செல்ல வேண்டும்.
அந்த பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வர முடியாத நிலை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு அடர்ந்த வனப்பகுதிகளில் இருக்கும் மக்கள் வாக்களிக்க பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-
அதிக தொலைவில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் இருந்து வாக்காளர்களை வாக்களிக்க அழைத்து வர மாவட்ட நிர்வாகம் சார்பில் போலீசார், வனத்துறையினர் ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்காக 5 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள், அடர்ந்த வனப்பகுதிகளில் வசிப்பவர்களை போலீசார், வனத்துறையினர் இணைந்து வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து வாக்களிக்க செய்யும் பணியில் ஈடுபடுவார்கள்.
இதற்காக அந்த குழுவினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் அதிக தொலைவில் இருப்பதால் அல்லிமாயார், கொலக்கம்பை, குந்தா ஆகிய பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று 7 இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் பஸ்கள் கூடுதலாக இயக்க வேண்டுமா என்று கணக்கிடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தேர்தல் பார்வையாளர்களும் ஆய்வு செய்து வருகின்றனர். கொரோனா தொற்று பாதித்தவர்கள் தேர்தல் நாளன்று மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது. ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கான சின்னம் பொருத்தும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர் சப்-கலெக்டர் மோனிகா தலைமையில் நடந்தது.
அங்கு பாதுகாப்பு கிடங்கின் சீல் அகற்றப்பட்டு, எந்திரங்கள் வெளியே எடுக்கப் பட்டன. தொடர்ந்து ஊட்டி தொகுதிக்கு என்று நியமிக்கப்பட்ட 31 மண்டல குழுவினர் வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்துவதற்காக மேஜைகள் போடப்பட்டு இருந்தது. பின்னர் குழு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் வழங்கப்பட்டது.
அவர்கள் வாக்காளர்களின் பெயர், சின்னம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை எந்திரத்தில் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். எந்திரங்களுக்கு பேட்டரி பொருத்தி இணைப்பு உள்ளதா என்று சரிபார்த்து, வாக்குப்பதிவு எந்திர எண் மற்றும் வாக்கு சீட்டு எண்ணை குறித்து கொண்டு சீல் வைத்தனர்.
ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குப்பதிவு எந்திரங்கள், 308 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 308 வாக்கினை உறுதி செய்யும் எந்திரங்கள் என மொத்தம் 924 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
ஊட்டி, குன்னூரில் நடந்த பணியை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் 83 மண்டல அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 868 வாக்குச்சாவடிகளில் 50 சதவீத வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக் கள் பொருத்தியதோடு மத்திய பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 4,168 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பணி முடிந்த பின்னர் மண்டலம் வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் தயாராக வைக்கப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 4-ந் தேதி அன்று காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 6-ந் தேதி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ந் தேதி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் விதிகளின்படி டாஸ்மாக் கடைகள், பார்கள், தமிழ்நாடு ஓட்டல் யூனிட் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மூடப்படுகிறது.
இந்த தினங்களில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யவோ, பிற இடங்களுக்கு எடுத்து செல்லவோ கூடாது. டாஸ்மாக் கடைகள் கட்டாயம் மூடி இருக்க வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்ட நாட்களில் டாஸ்மாக் கடைகள் திறந்து இருப்பது குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் அரசு தேயிலை தோட்டங்கள் மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளன. ஆண்டுதோறும் 6 மாதங்கள் பருவமழை பெய்து வருவதால், இங்கு தேயிலை உள்பட அனைத்து விவசாயமும் நடைபெற்று வருகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் பகலில் கடும் வெயில் காணப்படுகிறது. வழக்கத்தைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே சிரமப்படுகின்றனர். இதேபோல் நீர் நிலைகளும் வறண்டு விட்டதால், விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. வனப்பகுதியிலும் வறட்சி நிலவுகிறது.
இந்த நிலையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக அந்த வறட்சியின் தாக்கம் தேயிலை தோட்டங்களிலும் காணப்படுகிறது. கடும் வெயிலால் தேயிலை செடிகள் கருகி வருகிறது. இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதேபோன்று தொழிற்சாலைகளுக்கும் பச்சை தேயிலை வரத்தும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் அங்கு தேயிலைத்தூள் உற்பத்தி பாதிக்கும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து கூடலூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
தற்போது பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.22 என விலை கிடைக்கிறது. கூடலூர் பகுதியில் கடும் வெயிலாக இருப்பதால் நிலத்தின் ஈரத்தன்மை குறைந்து விட்டது. இதன் காரணமாக தேயிலை செடிகளில் பச்சை தேயிலை மகசூல் இல்லை. மேலும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் செடிகள் கருகி வருகிறது. தினமும் 100 கிலோ அறுவடை செய்யப்படும் இடங்களில் பாதி அளவாக மகசூல் குறைந்துள்ளது.
பெரிய தேயிலை தோட்டங்களில் கிணறுகளில் இருந்து தண்ணீர் இறைத்து ஸ்பிரிங்ளர் மூலம் செடிகளுக்கு தெளித்து வருகின்றனர். ஆனால் சிறிய தோட்டங்களில் பாசனத்துக்கு வழியில்லை. கோடை மழை நன்கு பெய்தால் மட்டுமே தேயிலை மகசூல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளரை ஆதரித்து மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து விமானத்தில் வரும் அவர் கோவை விமான நிலையம் வந்திறங்குகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் ஊட்டி சென்றடைகிறார்.
ஊட்டி கேசினோ சந்திப்பில் இருந்து ரோடு ஷோவாக சென்று வாக்கு சேகரிக்கும் ராஜ்நாத் சிங், கமர்சியல் சாலை, மணிக்கூண்டு வழியாக ஏ.டி.சி. திடலுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாரதிய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.
ராஜ்நாத் சிங் வருகையை முன்னிட்டு ஊட்டியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் வருகையையொட்டி நிகழ்ச்சி நடக்கும் ஏ.டி.சி. மைதானம் பகுதி மற்றும் நகரில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் போட்டியிடுகிறார். இதையொட்டி நேற்று அவர் கோத்தகிரி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையுமான விந்தியா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் படுகர் இன மக்களை போல உடை அணிந்து இருந்தார். பிரசாரத்தின்போது நடிகை விந்தியா பொதுமக்களிடையே பேசியதாவது:-
கடந்த முறை தி.மு.க. தோல்விக்கு ஆ.ராசா மீதான ஊழல் வழக்கு காரணமானது. தற்போது தி.மு.க. டெபாசிட் இழக்க போகிறது. இதற்கு அவரது வாய் காரணமாக இருக்கும். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இல்லாததால் கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இல்லை.
தேர்தல் நெருங்கிவிட்டால், மு.க.ஸ்டாலின் பல வேஷங்கள் போட்டு வாக்கு சேகரிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மின்மிகை மாநிலமாக தமிழகம் மாறும் என்று சொன்னதை செய்து காட்டியது, அ.தி.மு.க. அரசு. மேலும் விலையில்லா மடிக்கணினி, தாலிக்கு தங்கம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. கொரோனா காலத்தில் மக்கள் பசியில் தவிக்கக்கூடாது என்பதற்காக உதவி கேட்பதற்கு முன்னதாகவே ரேஷன் கடைகளில் விலையில்லா உணவு பொருட்கள் வழங்கியவர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பயிர்க்கடனை தள்ளுபடி செய்தார்.
நீலகிரி மாவட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘மக்களாட்சியை விதைப்போம், 100 சதவீதம் வாக்களிப்போம்’ என்ற மைய கருத்தில் ஊட்டி அருகே குருத்துக்குளியில் உள்ள கின்னஸ் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கண்காணிப்பு அதிகாரி சுப்ரியா சாஹூ பேசும்போது கூறியதாவது:-
20 ஆண்டுகளுக்கு முன்பு குருத்துக்குளி கின்னஸ் பூங்காவில் அதிக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. தற்போது சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று(அதாவது நேற்று) நெடுஞ்சாலைத்துறை சார்பில் 400 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளர்களின் கடமை ஆகும். தேர்தல் நாளன்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தபடி அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்து வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக விடுமுறை அளிக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்ட தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள் குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு கடந்த 25, 26-ந் தேதிகளில் நடந்த ஏலத்துக்கு(விற்பனை எண்-12) 12 லட்சத்து 36 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. அதில் 9 லட்சத்து 21 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் இலை ரகமாகவும், 3 லட்சத்து 15 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 9 லட்சத்து 76 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.12 கோடியே 9 லட்சம் ஆகும். இது 80 சதவீத விற்பனை. ஆனால் விலையில் மாற்றம் இல்லை. கடந்த வார விலையிலேயே ஏலம் போனது.
சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.329, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.350 என இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.103 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.162 முதல் ரூ.202 வரை ஏலம் போனது.
டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.110 முதல் ரூ.115 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.160 முதல் ரூ.276 வரையும் விற்பனையானது. அடுத்த ஏலம்(விற்பனை எண்-13) வருகிற 1, 2-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 14 லட்சத்து 89 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.






