search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    கூடலூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    சிறுபான்மை மக்களை அதிமுக எப்போதும் பாதுகாக்கும்- கூடலூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

    கூடலூர் தொகுதி சுற்றுலா தலமாக மாற்றப்படும் என தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூரில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரித்தார்.

    நீலகிரி மாவட்டம் ஜெயலலிதாவுக்கு பிடித்த மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை செய்து கொடுத்துள்ளார்.

    நீலகிரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான மருத்துவ கல்லூரியை ஊட்டியில் கொண்டு வந்தது அ.தி.மு.க அரசு. உங்கள் ஊரிலேயே உலக தரம் வாய்ந்த மருத்துவமனை அமைய உள்ளது. எனவே நீங்கள் இனி கோவைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. மருத்துவ கல்லூரி கட்டி முடிக்கப்பட்டதும் உங்களின் ஆதரவோடு வெற்றி பெற்று நான் வந்து இந்த கல்லூரியை திறந்து வைப்பேன் என நம்புகிறேன்.

    மேலும் கூடலூரில் பல ஆண்டுகளாக நில பிரச்சனை நிலவி வருகிறது. இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

    பட்டா மற்றும் இலவச மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இந்த தொகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 800 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் வீடுகள் இல்லாதவர்களுக்கு சொந்தமாக நிலம் வாங்கி கான்கிரிட் வீடுகள் கட்டிதரப்படும். இந்த தொகுதிக்கு 8 அம்மா மினி கிளினிக் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்களும் மிகவும் பயனடைந்து வருகிறார்கள். இதுதவிர விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன்கனையும் தள்ளுபடி செய்துள்ளோம்.

    இந்த தொகுதியில் உள்ள தெப்பக்காடு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதுதவிர எண்ணற்ற பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. நமது வேட்பாளர் வெற்றி பெற்று வந்ததும் இந்த தொகுதி நீலகிரி மாவட்டத்திலேயே முதன்மை தொகுதியாக மாறும்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எனது தலைமையிலான அரசு சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறது. பல துறைகளில் சாதனை படைத்து அதற்காக ஏராளமான விருதுகளை வாங்கியதும் தமிழக அரசு தான். ஒரு நாடு வளம் பெற வேண்டுமானால், செழிக்க வேண்டுமானால் அமைதி, சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும்.

    தற்போது நாட்டிலேயே சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. நீர்மேலாண்மை திட்டம் மூலம் ஏரி, குளங்களை தூர்வாரி, நீர்களை பெருக்கியுள்ளோம். இது ஒரு வரலாற்று சாதனை.

    பிரசாரத்தில் கலந்து கொண்டவர்கள்

    தமிழ்நாடு முழுவதும் இடம் வாங்கி ஏழைகள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும். கூடலூர் தொகுதி சுற்றுலா தலமாக மாற்றப்படும். குறிப்பாக ஊசிமலை காட்சி முனை மேம்படுத்தப்படும். நீங்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மக்களாகிய நீங்கள் எங்களை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். இன்றைக்கு வேண்டும் என்றே தவறான தகவல்களை எதிர்கட்சியினர் பரப்பி வருகிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு இந்த அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என அவதூறு பிரசாரத்தை பரப்பி வருகின்றனர். சிறுபான்மை மக்களை எப்போதும் பாதுகாத்து வருவது அ.தி.மு.க அரசு தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் குன்னூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கப்பச்சி வினோத் மற்றும் ஊட்டி தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளரை ஆதரித்து குன்னூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

    பின்னர் அங்கிருந்து கோவை வரும் எடப்பாடி பழனிசாமி பிற்பகல் 3 மணிக்கு கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

    அதனை தொடர்ந்து ஈரோடு, நாமக்கல் மாவட் டங்களுக்கு சென்று பிரசாரம் செய்கிறார்.
    Next Story
    ×