என் மலர்
நீலகிரி
கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு, அபயாரண்யம் ஆகிய முகாம்களில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வனத்துறையின் கால்நடை மருத்துவ குழுவினர் பணியாற்றி வருகின்றனர். தினமும் காலை, மாலை வேளைகளில் வளர்ப்பு யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து 3 மாதங்களுக்கு ஒரு முறை வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தொரப்பள்ளியில் வனத்துறைக்கு சொந்தமான எடை மையம் செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யானைகளின் உடல் எடை கணக்கிடப்பட்டது.
இந்த நிலையில் முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகளின் உடல் எடையை கணக்கிடும் பணி, தொரப்பள்ளியில் நேற்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. வனச்சரகர் தயானந்தன் முன்னிலையில் இந்தர், காமாட்சி, மூர்த்தி, கணேஷ், சுஜெய் உள்பட 18 வளர்ப்பு யானைகளின் உடல் எடையை வனவர் சந்தனராஜ் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் கணக்கிட்டனர்.
இதில் 7 யானைகளின் உடல் எடை சராசரியாக 100 கிலோ வரை உயர்ந்துள்ளது தெரியவந்தது. ஆனால் மீதமுள்ள யானைகளின் உடல் எடை குறைந்திருந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள குழாயில் இருந்து வரும் தண்ணீரை வளர்ப்பு யானைகள் துதிக்கையால் உறிஞ்சி உடல் முழுவதும் தெளித்து வெப்பத்தின் தாக்கத்தை தணித்தன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
முதுமலையில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது 18 யானைகளுக்கு மட்டும் உடல் எடை கணக்கிடப்பட்டுள்ளது. 1½ வயது பொம்மி என்ற குட்டி யானைக்கு தெப்பக்காடு முகாமில் உடல் எடை கணக்கெடுக்கப்பட்டுவிடும். மஸ்து காரணமாக மீதமுள்ள வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை கணக்கிடப்படவில்லை.
இது தவிர வறட்சியான காலநிலை நிலவுவதால் பசுந்தீவன பற்றாக்குறையால் வளர்ப்பு யானைகளின் உடல் எடை குறைந்துள்ளது. மழை பெய்து வனம் பசுமைக்கு திரும்பியதும் வளர்ப்பு யானைகளின் உடல் எடை மீண்டும் அதிகரித்துவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, காலிபிளவர், முட்டைகோஸ், பீன்ஸ் போன்ற மலை காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. ஊட்டியில் விளையும் கேரட்டுக்கு தனி மவுசு உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ கேரட் ரூ.80-க்கு விற்பனையானது. தற்போது கேரட் விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். ஒரு கிலோ கேரட் ரூ.25 முதல் ரூ.30 வரை விலை போகிறது.
கடந்த ஆண்டு ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கேரட் விலை ரூ.100-ஐ தாண்டியது. பின்னர் படிப்படியாக விலை குறைந்தது. இதை போல் ஊட்டியில் பூண்டு, உருளைக்கிழங்கு போன்ற காய்கறி விலையும் வெகுவாக குறைந்து உள்ளது. ஒரு கிலோ பூண்டு ரூ.60 முதல் ரூ.100 வரை, உருளைக்கிழங்கு ரூ.50, சின்ன வெங்காயம் ரூ50, பெரிய வெங்காயம் ரூ.24, தக்காளி ரூ.15, கத்தரிக்காய் ரூ.32, வெண்டைக்காய் ரூ.32, பீன்ஸ் ரூ.60 என விற்பனை ஆகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கர்நாடகா, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரட், பூண்டு நீலகிரிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனால் ஊட்டி கேரட்டுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. மேலும் வெளியிடங்களில் இருந்து வரும் கேரட் கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஊட்டி கேரட்டுக்கு போதிய விலை கிடைப்பது இல்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விலை வீழ்ச்சி காரணமாக சில விவசாயிகள் கேரட்டுகளை அறுவடை செய்யாமல் அப்படியே நிலத்தில் விட்டு உள்ளனர். சிலர் விலை இல்லாவிட்டாலும் அறுவடை செய்து வேறு காய்கறி பயிரிட நிலத்தை தயார் செய்து வருகின்றனர் என்று கூறினார்.
கோவை:
கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு விறு, விறுப்பாக நடந்தது.
வெயில் காரணமாக பொதுமக்கள் வாக்களிக்க காலையிலேயே குவிந்தனர். பல வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று உற்சாகமாக வாக்களித்தனர். சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கி நடந்தது.
அன்னூர் அடுத்துள்ளது எல்லப்பாளையம். இங்குள்ள ஊராட்சி பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக வாக்கு சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
காலையிலேயே ஏராளமான மக்கள் வாக்களிப்பதற்காக அங்கு வந்தனர். ஆனால் வாக்கு சாவடியில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. பின்னர் மாற்று எந்திரம் மூலம் வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் அங்கு காத்து நின்று வாக்களித்துச் சென்றனர்.
இதேபோல் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட கரும்புக்கடையில் உள்ள 286, 287, 288 வாக்கு சாவடிகளில் வாக்குபதிவு எந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து வாக்குப்பதிவு திடீரென நிறுத்தப்பட்டதால் வாக்காளர்கள் வெளியில் காத்திருந்தனர்.
பீளமேட்டில் 2 வாக்குச்சாவடியில் எந்திரம் பழுதானது. உடனடியாக தேர்தல் அலுவலர்கள் எந்திரத்தின் பழுதை நீக்கி வாக்குப்பதிவை தொடர்ந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் 12 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. கூடலூர் தொகுதியில் 10 தொகுதியிலும், ஊட்டியில் 2 தொகுதியிலும் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அந்த எந்திரங்கள் மாற்றப்பட்டு புதிய எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடந்தது. இதனால் அந்த இடங்களில் வாக்குப்பதிவு தாமதம் ஆனது.
கோவை:
கோவை மாவட்டத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குகிறார்களா? என பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை காமராஜர்புரம் பகுதியில் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது. உடனடியாக அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது 2 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி கொண்டிருந்தனர்.
அவர்களை பிடித்து விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த விஜீஸ், அரவிந்த என்பதும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.2.36 லட்சம் பணம் மற்றும் வாக்காளர் பட்டியலை பறிமுதல் செய்தனர்.
ஆர்.எஸ்.புரம் பகுதியிலும் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று அ.தி.மு.கவினர் பணம் வினியோகித்து வருவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்றனர்.
அப்போது அங்கு 6 பேர் ஓட்டுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்தனர். இதை பார்த்தும் அதிகாரிகள் 6 பேரையும் பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஹரிகிஷோர், ஹரிஹரன், சக்திவேல், அசோக், மெல்வின், சேதுராமன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.39 ஆயிரம் பணம் மற்றும் வாக்காளர் பட்டியலையும் பறிமுதல் செய்தனர். சிறிது நேரம் கழித்து அவர்களை அனைவரையும் ஜாமீனில் விடுவித்தனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஜார் பகுதியில் அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று பணம் பட்டுவாடா செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பணம் பட்டுவாடா கொடுப்பது உறுதியானது. இதையடுத்து பணம் கொடுத்ததாக சுப்பிரமணி(35), சிவராஜ்(30), எம்.சுப்பிரமணி(40), முருகன்(52) ஆகியோரை பிடித்து கோத்தகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.59 ஆயிரத்து 500-யை பறிமுதல் செய்தனர்.
ஊட்டியில் உள்ள கமர்சியல் சாலையோரத்தில் கடந்த 17-ந் தேதி 2 சுற்றுலா பயணிகளின் கார் கண்ணாடியை உடைத்து 2 செல்போன்கள், 5 பவுன் தங்க நகை, ரூ.37 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஊட்டி நகர மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஊட்டி கமர்சியல் சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு காரின் கண்ணாடியை உடைத்து கைப்பை திருடப்பட்டது. அதை திருடிய ஒருவரை பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் ஏற்கனவே அங்கு நடந்த மேற்கண்ட 2 திருட்டு சம்பவங்களை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
விசாரணையில் அவர் திருச்சியை சேர்ந்த மூர்த்தி (வயது 39) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் சேர்ந்து மேலும் 2 பேர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மலை மாவட்டமான நீலகிரி 60 சதவீதம் அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாகும். இங்குள்ள காடுகளில் சிறுத்தை, புலி, யானை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசித்து வருகின்றன.
வனவிலங்குகள் குடிநீர், உணவு தேடி அவ்வப்போதும் ஊருக்குள் நுழைந்து விடுகிறது. இதனால் சில சமயங்களில் மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்து வருகிறது.
தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் உள்ள சிற்றாறு, குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் குடிநீர் தேடி ஊருக்குள் படையெடுத்து வருகின்றன. குறிப்பாக வனத்தின் மிகப்பெரிய விலங்கான யானைக்கு அதிக குடிநீர் மற்றும் உணவு தேவைப்படுகிறது.
இதனால் யானைகள் நீண்ட தூரம் குடிநீர் தேடி அலைகின்றன.
இந்நிலையில நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மாயாறு காப்புக்காடு, மொட்டத்துறை வனச்சரகப் பகுதியில் மசினகுடி வனச்சரகத்தினர் நேற்று ரோந்து சென்றபோது ஒரு யானை இறந்து கிடந்தது. இதைப்பார்த்த வனஊழியர்கள் இது குறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஸ்ரீகாந்துக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலையடுத்து புலிகள் காப்பகத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த யானையின் உடலை பார்த்தனர்.
இறந்து கிடந்தது இளம் வயது ஆண் யானை என்பது தெரியவந்தது. தந்தங்கள் வெட்டி எடுக்கப்படவில்லை. கடும் வறட்சியால் குடிநீர் கிடைக்காமல் இறந்திருக்கலாம் என்று தெரியவருகிறது. இருந்தாலும் யானையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னரே யானையின் இறப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.






