என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தனிமைப்படுத்தப்பட்ட 7 இடங்களில் வசிக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இது தவிர ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூரில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் என 43 மையங்களில் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் 45 வயதுக்கு மேல் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் 30 சதவீதம் பேர்(அதாவது 54 ஆயிரம் பேர்) தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மீதமுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியில் யாரும் செல்லாதவாறு கண்காணிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கண்காணிக்க குழுக்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் கோவிட் கேர் சென்டர் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
ஊட்டி நகராட்சி சார்பில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் காந்தல் பென்னட் மார்க்கெட் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாங்களாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அவர்கள் 28 நாட்களுக்கு பின்னர் 2-வது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும். தொற்று அறிகுறி உள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஊட்டி-குன்னூர் இடையே தினமும் 3 முறை மலைரெயில் இயக்கப்படுகிறது. இதில் வெளி மாநிலங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே ஊட்டி ரெயில் நிலைய அதிகாரிக்கு( ஸ்டேஷன் மாஸ்டர்) உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு தொற்று உறுதியானது.
தொடர்ந்து அவர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்லும் இடம் என்பதால் ரெயில் நிலையத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டி நகராட்சி ஊழியர் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து சுற்றுலா பயணிகள் அமரும் இருக்கைகள், மாஸ்டர் அறை, வளாகங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தார். மேலும் ரெயில் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் பொழுதுபோக்கு பூங்காக்களில் 50 சதவீதம் பேரை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் ஒரு மணி நேரம் மட்டுமே சுற்றி பார்க்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் பூங்காவில் நிற்காமலும், புல்வெளிகளில் அமராமலும் இருப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஒரு வழியாக நடந்து சென்று கண்ணாடி மாளிகையை கண்டு ரசித்து விட்டு வேறு வழியாக திரும்பி செல்ல ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பூங்காவில் செல்பி மற்றும் புகைப்படம் எடுக்கும்போது சுற்றுலா பயணிகள் முககவசத்தை அகற்றி கொள்ளலாம். அதன் பின்னர் உடனடியாக முககவசத்தை மீண்டும் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் சரியாக முககவசம் அணிந்து உள்ளார்களா? என்று ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். இதற்காக ஊழியர்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு, முககவசம் அணிந்து இருக்கிறார்களா?, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா? என்று கண்காணிக்கப்படுகிறது.
முககவசம் அணியாமல் தொற்றை பரப்பும் வகையில் வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஊட்டியில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. கடந்த 10-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 4,612 பேர், நேற்று முன்தினம் 6,342 பேர் வருகை தந்து உள்ளனர். இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் உள்ளூர் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
வழக்கமாக சுற்றுலா பயணிகள் ஊட்டியில் தங்கியிருந்து சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பார்கள். தற்போது கொரோனா அச்சத்தால் ஒரே நாளில் சுற்றி பார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்புகின்றனர். அவர்கள் இ-பதிவு நடைமுறையில் நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 1905-ம் ஆண்டு முதல் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக குதிரை பந்தயம் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி குதிரை பந்தயம் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
இதையொட்டி பெங்களூரு, மும்பை, ஐதராபாத், சென்னை, புனே போன்ற இடங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட குதிரைகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு உள்ளன. தினமும் காலை, மாலையில் குதிரைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நாளை முதல் வருகிற ஜூன் மாதம் 11-ந் தேதி வரை 18 நாட்கள் குதிரை பந்தயம் நடக்கிறது. ஓடுதள ஓரத்தில் 4 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, நவீன கேமராக்கள் பொருத்தப்படுகிறது. குறிப்பாக அடுத்த மாதம்(மே) 13, 14, 21, 22-ந் தேதிகளில் நீலகிரி கின்னீஸ் கோப்பை மற்றும் 27, 28, ஜூன் மாதம் 4, 5-ந் தேதிகளில் நீலகிரி தங்க கோப்பைக்கான பந்தயம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் குதிரை பந்தயத்தை நேரில் பார்க்க பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.
இதுகுறித்து குதிரை பந்தய நிர்வாகத்தினர் கூறும்போது, இந்த ஆண்டில் ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் குதிரை பந்தயம் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறுகிறது. குதிரை பந்தயம் நடைபெறும் நாட்களில் பார்வையாளர்கள் கட்டாயம் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தமிழக அரசு தெரிவித்த கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுவதால், மைதானத்தில் உள்ள கவுண்ட்டர்கள் செயல்படாது. குதிரைகளை பராமரிப்பவர்கள், ஜாக்கிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றனர்.
ஊட்டியில் குதிரை பந்தயம் தொடங்கியதும், கோடை சீசன் களை கட்ட ஆரம்பிக்கும். இந்த பந்தயத்தை சுற்றுலா பயணிகள் நுழைவு சீட்டு எடுத்து கேலரியில் அமர்ந்து கண்டு ரசிப்பார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தற்போது கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
தஞ்சை மாவட்டம் உமையாள்புரத்தில் உள்ள தச்சர் தெருவை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகள் புவனேஸ்வரி(வயது 23). இவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து, அங்குள்ள ஒரு தனியார் தேயிலை எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையில் புவனேஸ்வரி தனது சொந்த ஊரில் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் அவர்கள் 2 பேரும், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த நிலையில் கோத்தகிரியில் தங்கியிருந்து வேலை பார்த்து வரும் புவனேஸ்வரியிடம் பேசுவதை அந்த வாலிபர் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரை செல்போனில் ‘பிளாக்’ செய்துவிட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தற்கொலை செய்வதை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து இருக்கிறார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோத்தகிரி போலீசார் பிணத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான நீலகிரிக்கு கோடைகாலத்தையொட்டி சமவெளி பகுதி, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் ஆண்டுதோறும் குவிவது வழக்கம்.
கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் முதல் இ-பாஸ், இ-பதிவு என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த் தப்பட்டன. இதனையடுத்து சினிமா தியேட்டர், பூங்காக்கள் திறக்கப்பட்டன. நாள் ஒன்றுக்கு 5-க்கும் கீழ் பாதிப்பு எண்ணிகை குறைந்தது.
இந்நிலையில் கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வீச தொடங்கியுள்ளது. நீலகிரி மாவடத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. நேற்று 30 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,869 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை 50-ஆக உள்ளதுள்ளது.
இது குறித்து நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நீலகிரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரே பகுதியில் 3 பேருக்கு மேல் தொற்று உறுதியானால் அந்த பகுதியை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கட்டுப்பாட்டு பகுதிகளில் போலீஸ், உள்ளாட்சி ஊழியர் மற்றும் தன்னார்வலர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழக அரசு தெரிவித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் கூட்டம் கூடாமலும், அதிக நேரம் நிற்காமலும் ஒரே வழியில் சென்று திரும்ப வழிவகை செய்யப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
கட்டுப்பாட்டு பகுதிகளில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருக்கிறது.
2-வது அலைக்கு முன்பு கேரளா மற்றும் புதுச்சேரியில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் இ-பாஸ் கட்டாயம் என நடைமுறையில் இருந்தது.
தற்போது நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் பிறபகுதிகளில் இருந்து வருவர்களுக்கு இ-பதிவு முறை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா அட்டி பாண்டியார் அரசு தேயிலைத்தோட்டம், தேவாலா வாளவயல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக 2 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
யானை, மனித மோதல் ஏற்பட்டு உயிர்சேதம் ஏதேனும் ஏற்படுவதற்குள் யானைகளை அடந்த வனப் பகுதிக்கு விரட்டுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பை சேதம் செய்தது அதனை தொடர்ந்து நேற்று பாண்டியார் அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ சரகம் எண் 4 பகுதியில் வசித்து வரும் டேன்டீ தொழிலாளி சதீஸ்குமார் என்பவரது வீட்டை உடைத்து சூறையாடியது. அதேபோல் அப்பகுதியில் மேலும் 2 வீடுகளின் கதவை உடைத்து சேதம் செய்துள்ளது. அப்பகுதிக்கு வந்த தேவாலா வனச்சரக வேட்டைத்தடுப்பு காவலர்கள் யானையை வனப்பகுதிக்கு விரட்டினர்.
யானைகள் மீண்டும் குடியிருப்பை தாக்குவதற்கு முயற்சித்ததோடு வனத்துறை வாகனத்தையும் ஆக் ரோசத்துடன் தாக்குவதற்கு முயற்சித்தது. அதனால் பரபரப்பு ஏற்பட்டது. யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான நீலகிரிக்கு கோடைகாலத்தையொட்டி சமவெளி பகுதி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் ஆண்டுதோறும் குவிவது வழக்கம். கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. பின்னர் அரசு தளர்வுகள் அளித்தாலும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு நீலகிரிக்கு வருவதற்கு இ-பாஸ், இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டு மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் இருந்து வரும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இ-பாஸ் வைத்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இ-பாஸ் வாங்கி வருபவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் கட்டுப்பாட்டு பகுதிகளில் போலீஸ், உள்ளாட்சி ஊழியர் மற்றும் தன்னார்வலர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தமிழக அரசு தெரிவித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் கூட்டம் கூடாமலும், அதிக நேரம் நிற்காமலும் ஒரே வழியில் சென்று திரும்ப வழிவகை செய்யப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. அப்போது தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோவிட் கேர் சென்டர்கள் அதிகரிக்கப்பட்டது. பின்னர் பாதிப்பு குறைந்ததால் அந்த மையங்கள் செயல்படவில்லை. இதற்கிடையே நீலகிரியில் கடந்த சில நாட்களாக தினமும் 25 முதல் 30 பேருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கும் உறுதியாகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை, குன்னூர் அரசு லாலி மருத்துவமனை, கூடலூர் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு போதுமான படுக்கை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
தற்போது நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊட்டி இளைஞர் விடுதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்குள்ள அறைகள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் படுக்கைகள், கம்பளிகள் போடப்பட்டு, 70 படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டு உள்ளது.
அறிகுறி இல்லாமல் கொரோனா உறுதியான நபர்கள் இந்த மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-
நீலகிரியில் கொரோனா அதிகரித்து வருவதால் கோவிட் கேர் சென்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக செயல்பட்டு வந்த மையங்களை மீண்டும் மையமாக மாற்ற ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் கோரப்படுகிறது.
கொரோனா உறுதியானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 300 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தொற்று பரவலை தடுக்க பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை 3 லட்சத்து 96 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 82 ஆயிரத்து 188 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்றனர்.






