என் மலர்
நீலகிரி
கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தொற்றை பரப்பும் வகையில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா நகரமான ஊட்டியில் வெளியிடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால், நகராட்சி சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள் சோதனையில் ஈடுபட்டு முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
புதிய கட்டுப்பாடுகள் கடந்த 10-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன் பின்னர் ஊட்டி நகராட்சியில் இதுவரை முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.10 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத ஒரு கடைக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங் அறிவுரையின் பேரில் வருவாய் துறையினர் குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவு விடுதிகள், டீக்கடைகளில் முகக்கவசம் அணியாமல் சுற்றிய சுற்றுலா பயணிகள் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
மேலும் குன்னூர் தாசில்தார் சீனிவாசன், உதவி தாசில்தார் முனீஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர்கள் துரைசாமி, சுரேஷ் ஆகியோர் தலைமையில் தனி குழுக்களாக பிரிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மற்றும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் 50 சதவீத சுற்றுலா பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பூங்காவில் சுற்றுலா பயணிகள் புல்வெளி மைதானத்துக்குள் நுழைய தடை செய்யப்பட்டு உள்ளது. புல்வெளிகளில் அமரக்கூடாது, உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும், முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற தவறினால் அபராதம் விதிக்கப்படும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரிக்குள் வர இ-பதிவு முறையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேற்கண்ட கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா பீதியால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
மேலும் ரம்ஜான் நோன்பு தொடங்கியதால் கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து உள்ளது. இதனால் ஊட்டி தாவரவியல் பூங்கா நடைபாதை, நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குறைந்த எண்ணிக்கையில் வந்து இருந்தனர்.
இதனால் நுழைவு டிக்கெட் வழங்குமிடம் வெறிச்சோடி காணப்பட்டது. புல்வெளிக்குள் நுழைய தடை உள்ளதால், அங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த 12-ந் தேதி 2,583 பேர், 13-ந் தேதி 2,139 பேர், 14-ந் தேதி 1,924 பேர், நேற்று முன்தினம் 1,175 பேர் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்து உள்ளனர்.
கொரோனா அச்சத்தால் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பூங்காவை சுற்றி பார்க்க ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அவர்கள் வாங்கும் டிக்கெட்டில் பூங்காவில் இருந்து வெளியேறும் நேரம் குறிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
மேலும் பூங்காவில் சுற்றுலா பயணிகள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா என்று பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.
நீலகிரி மாவட்டத்தில் 33 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏதேனும் ஒரு ஆவணத்தை காண்பித்து தடுப்பூசி போட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. சிலருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பின்னர் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை. அவர்களிடம் செவிலியர்கள் கொரோனா தடுப்பு மருந்து இருப்பு இல்லாததால் நாளை (அதாவது இன்று) வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தெரிவித்தனர். இதனால் வெகுநேரம் வரிசையில் நின்ற பொதுமக்கள் திரும்பி சென்றனர்.
அதேபோல் ஊட்டி அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பு மருந்து இல்லாததால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. தடுப்பூசி திருவிழா தொடங்கி சில நாட்களிலேயே தடுப்பு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதால் தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் உள்ளது. இங்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி இருந்தால் தான் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
வெளியிடங்களுக்கு சென்று வந்ததால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் பரிசோதனை செய்ய வந்தவர்கள் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான மாத்திரைகள் மட்டும் வழங்கப்பட்டது. பலர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பப் பட்டனர். இதற்கு பரிசோதனைக்கான போதுமான கருவிகள் இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, நீலகிரியில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வந்தது. போதுமான அளவு இருப்பு இல்லாததால் சென்னையில் இருந்து தடுப்பு மருந்து வரவழைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் மீண்டும் தடுப்பூசி செலுத்தப்படும். கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான கருவிகள் கூடுதலாக கேட்கப்பட்டு உள்ளது என்றனர்.
ஊட்டி:
சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் கடந்த ஆண்டு மார்ச் 25-ந்தேதி முதல் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது.
சில தளர்வுக்கு பின்னர் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயன்றபோது கொரோனா 2-வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. நீலகிரியில் நேற்று ஒரே நாளில் 48 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 51 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 9 ஆயிரத்து 113-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தடுப்பூகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் முதலில் தயக்கம் காட்டினர். விழிப்புணர்வு மற்றும் காட்டு தீ போல் பரவும் கொரோனா அச்சம் உள்ளிட்ட காரணங்களால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமானோர் முன்வந்துள்ளனர்.
நீலகிரியில் கொரோனா தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 36 இடங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. இது தவிர 10 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று காலை மக்கள் தடுப்பூசி செலுத்த சென்ற போது தட்டுப்பாடு என கூறினர். இதனால் ஊசிபோட வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஏமாற்றத்தை தடுத்து நம்பிக்கை ஏற்படுத்தும்விதமாக தனியார் ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு டோக்கன்’ வழங்கினர்.
இது குறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறும்போது, நேற்று காலை சிறிது நேரம் தட்டுப்பாடு இருந்தது. பின்னர் 5 ஆயிரம் தடுப்பூசிகள் கொண்டுவந்து அனைத்து இடங்களுக்கும் வழங்கப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்ட 67 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஊசி செலுத்தாத இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார். தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
குன்னூரில் தொடர் மழை காரணமாக சாலை ஓரத்தில் திடீர் அருவிகள் உருவாகி உள்ளன. இதனை பார்க்க ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் ஆங்காங்கே அருவிகள் உள்ளன. மழை பெய்யும்போது இந்த அருவிகளில் தண்ணீர் கொட்டும். அதை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். கடந்த ஒரு மாதமாக மழை இல்லாததால் இந்த அருவிகள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வறண்டுபோனது. இந்த நிலையில் தற்போது குன்னூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது. அத்துடன் திடீர் அருவிகளும் உருவாகி உள்ளது.இதனை பார்க்க ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, அருவியின் அருகே சென்று புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள். அத்துடன் சிலர் அருவியின் ஆபத்தான பகுதிக்கு சென்று செல்பி எடுத்து விளையாடுகிறார்கள்.
இதனால் ஆபத்தான இடங்களுக்கு செல்லக்கூடாது என்று வனத்துறை அறிவித்து உள்ளனர். இருந்தபோதிலும் தடையை மீறி சிலர் அங்கு செல்வதால் வனத்துறையினர் ரோந்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சீசன் நீலகிரி மாவட்டத்தில் களைகட்டி உள்ளது. கூடலூர் பகுதியில் தேயிலை உள்ளிட்ட விவசாய தோட்டங்கள் மற்றும் வீட்டு தோட்டங்களில் பலா மரங்கள் அதிகமாக உள்ளன. இங்கு தற்போது பலாப்பழ விளைச்சல் அமோகமாக உள்ளது.
விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த பலாப்பழங்களை அறுவடை செய்து கேரளா, கர்நாடகா செல்லும் சாலையோரங்களில் விற்பனைக்காக குவித்து வைத்து உள்ளனர். ஆனால் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், நீலகிரிக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் பலாப்பழங்களின் விற்பனை பாதிக்கப் பட்டு உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் பலாப்பழம் சீசன் களைகட்டி விடும். கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் தொல்லையால் பலாப்பழங்களை பாதுகாக்க தனி கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும் விளைச்சலுக்கு ஏற்ப போதிய விலை கிடைப்பதில்லை. கோடை சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையை பொறுத்து பலாப்பழங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துவிட்டது. இதனால் பலாப்பழங்கள் மரங்களிலேயே பழுத்து வீணாகி விடுகிறது. மேலும் பழங்களின் வாசனையை நுகரும் காட்டுயானைகள் ஊருக்குள் நுழைந்து விடுகின்றன.
இதை தவிர்க்க வனத்துறையினர் விவசாயிகளிடம் இருந்து பலாப்பழங்களை நேரடியாக கொள்முதல் செய்து வனப்பகுதியில் வீசினால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது குறையும். மேலும் விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் நியாயமான விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதை அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கர்க்கப்பாலி பகுதியில் நேற்று காலை 7 மணியளவில் காட்டுயானை புகுந்தது. அங்குள்ள சாலையில் உலா வந்த அந்த காட்டுயானையை பார்த்த மக்கள் பீதி அடைந்து தங்களது வீடுகளுக்குள் ஓட்டம் பிடித்தனர். மேலும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் காட்டுயானை அங்கிருந்து அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. அதன்பின்னரே மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
இந்த காட்டுயானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதை கண்காணித்து தடுக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இருப்பினும் வேறு வழியில் காட்டுயானை இடம்பெயர்ந்து செல்கிறது. அந்த காட்டுயானையின் காலில் காயம் உள்ளதாக தகவல் பரப்பப்படுகிறது. அதில் எந்தவித உண்மையும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோன்று பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே தட்டாம்பாறை, மூலக்கடை ஆகிய பகுதிகளில் வீடுகளை 4 காட்டுயானைகள் முற்றுகையிட்டன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து பிதிர்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
சுற்றுலா தலமான நீலகிரியில் வருடந்தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசனை முன்னிட்டு மலர் கண்காட்சி நடத்தப்படும்.
இதனை பார்ப்பதற்காகவும், ஊட்டியின் அழகை ரசிப்பதற்காகவும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
அவ்வாறு வருபவர்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரெயிலில் பயணம் செய்து மகிழ்வார்கள். மலை ரெயில் காடுகளுக்கு நடுவே செல்லும்போது அங்குள்ள இயற்கை மற்றும் வன விலங்குகளை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் பயணிப்பார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் கொரோனா குறைய தொடங்கியதும் செப்டம்பர் முதல் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து வெளி மாவட்டங்கள், வெளி மாநில ங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர்.
கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட மலைரெயிலும் டிசம்பர் 31-ந் தேதியில் இருந்து இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். அதன்பின்னர் தினந்தோறும் மலைரெயிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றின் 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பதிவு முறை தொடர்கிறது.
தற்போது பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
அதேபோல் மலைரெயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் முற்றிலும் குறைந்து விட்டது. கோடை சீசனில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் குன்னூர் ரெயில் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர். இதனால் மலைரெயிலில் உள்ள ரெயில் பெட்டிகளின் இருக்கை காலியாக கிடக்கின்றன. நேற்று குன்னூரில் இருந்து ஊட்டிக்கு சென்ற மலைரெயில் வெறும் 17 பேர் மட்டுமே பயணித்துள்ளனர். மற்ற இருக்கைகளில் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 27). தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணேசனுக்கும், ரேணுகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணேசன் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து திடீரென விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் கணேசனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கணேசன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குதிரை பந்தயம் நடத்தப்படும். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் நடத்தப்படவில்லை.
இந்த ஆண்டு கொரோனா வழிமுறைகளை கடைபிடித்து குதிரை பந்தயத்தை நடத்த அரசு அனுமதி கொடுத்தது. இதையடுத்து குதிரை பந்தயம் நடத்துவதற்காக ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானம் தீவிரமாக தயார் செய்யப்பட்டு வந்தது.
இந்த ஆண்டுக்கான புகழ்பெற்ற குதிரை பந்தய நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் புத்தாண்டு கோப்பைக்கான பந்தயம் உள்பட 7 போட்டிகள் நடைபெற்றது. பந்தயத்தில் பங்கேற்ற குதிரைகள் அனைத்தும் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்து சென்றன. வெற்றி பெற்ற குதிரைகள் மற்றும் ஜாக்கிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்து கொண்டன. இதில் பங்கேற்ற பயிற்சியாளர்கள், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.
தற்போது பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக குதிரை பந்தயத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பூட்டிய மைதானத்திலேயே பந்தயம் நடைபெற்றது.
இருப்பினும் உள்ளூர் பொதுமக்கள் எட்டின்ஸ் சாலை உள்பட பல்வேறு உயரமான இடங்களில் இருந்து குதிரை பந்தயத்தை கண்டு ரசித்தனர். 2-வது நாளாக இன்றும் ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் குதிரை பந்தயம் நடந்தது. நேற்று தொடங்கிய குதிரை பந்தயம் வருகிற ஜூன் மாதம் 11-ந் தேதி வரை நடக்க உள்ளது. தி நீல்கிரிஸ் 1000 கீனிஸ், 2000 கீனிஸ், டெர்பி ஸ்டேக்ஸ், நீலகிரி தங்க கோப்பை போட்டி உள்ளிட்ட முக்கிய போட்டிகள் வரும் நாட்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பந்தயம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து குதிரை பந்தயம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.
அதன்படி ஊட்டியில் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நேற்று தொடங்கியது. தமிழ் புத்தாண்டு கோப்பைக்கான பந்தயம் உள்பட 7 பந்தயங்கள் நடைபெற்றன. பந்தயங்களில் பங்கேற்ற குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. இன்றும்(வியாழக்கிழமை) குதிரை பந்தயம் நடக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக குதிரை பந்தயத்தை நேரில் பார்க்க பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மைதானத்தின் நுழைவாயில் மூடப்பட்டு இருந்தது. அங்கு காவலாளிகள் தடுப்புகள் வைத்து இருந்தனர். தமிழக அரசு உத்தரவின்படி குதிரை பந்தயம் நடைபெறும் நாட்களில் யாரும் உள்ளே வர அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மைதானத்துக்கு வெளியே ஆங்காங்கே உயரமான இடங்களில் நின்றவாறு பந்தயத்தை கண்டு ரசித்தனர்.
மைதானத்துக்குள் கவுன்ட்டர்கள், புக்கிங் சென்டர் செயல்படவில்லை. 5 உயர் கோபுரங்களில் நவீன கேமராக்கள் மூலம் குதிரை பந்தயம் படம் பிடிக்கப்படுகிறது. இதனை சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட மைதானங்களில் இருந்து நிர்வாகத்தினர் ஆன்லைன் மூலம் நேரடியாக பார்க்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
பந்தயத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட குதிரைகள் வந்து உள்ளன. குதிரை பந்தயம் நடக்கும் மைதானத்துக்குள் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் வெயிலும், மாலை நேரங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது.
அதிகாலை 3 மணி வரை நீடித்த மழையால் குன்னூர் நகரம், வெலிங்டன், அருவங்காடு, ஓட்டுப்பட்டறை, வண்ணாரபேட்டை, வண்டிசோலை, காட்டேரி, கரன்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் ஊர்ந்தபடியே சென்றன. பொதுமக்களும் நடந்து செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர்.
அதிகாலை வரை இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி இருளில் தவித்தனர்.
ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா பகுதி, தொட்டபெட்டா மலை சிகரம், காந்தல் உள்பட ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் மிதமான மழை பெய்தது. 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் கோத்தகிரி, கட்டபெட்டு, கோடநாடு, மஞ்சூர் உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சாரல் மழை முதல் மிதமாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கோவையில் கடந்த சில வாரங்களாகவே கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் இளநீர், ஜூஸ், தர்பூசணி, நுங்கு, பதநீர் உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை வாங்கி சாப்பிட்டு உஷ்ணத்தை தணித்து வந்தனர். இந்த வெயில் காரணமாக இரவு நேரங்களிலும் கடும் வெப்பம் இருந்ததால் மக்கள் மிகவும் அவதியடைந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் முதல் சற்று வெயில் குறைந்து வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. தொடர்ந்து இரவு 8.45 மணியளவில் மாநகர் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.
இன்று அதிகாலை மாநகர் பகுதிகளான பாப்பநாயக்கன் பாளையம், ரெயில் நிலைய பகுதி, டவுன்ஹால், காந்திபுரம், அவினாசி சாலை ராமநாதபுரம் உள்பட அனைத்து இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதிகாலையில் கொட்டி தீர்த்த இந்த திடீர் மழையால் கோவையில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து இதமான கால நிலை நிலவுகிறது. இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






