search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி மலைரெயிலில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே பயணம் செய்த காட்சி.
    X
    ஊட்டி மலைரெயிலில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே பயணம் செய்த காட்சி.

    கொரோனா பரவல் எதிரொலி- வெறிச்சோடிய ஊட்டி மலை ரெயில்

    தற்போது பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
    குன்னூர்:

    சுற்றுலா தலமான நீலகிரியில் வருடந்தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசனை முன்னிட்டு மலர் கண்காட்சி நடத்தப்படும்.

    இதனை பார்ப்பதற்காகவும், ஊட்டியின் அழகை ரசிப்பதற்காகவும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    அவ்வாறு வருபவர்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரெயிலில் பயணம் செய்து மகிழ்வார்கள். மலை ரெயில் காடுகளுக்கு நடுவே செல்லும்போது அங்குள்ள இயற்கை மற்றும் வன விலங்குகளை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் பயணிப்பார்கள்.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் கொரோனா குறைய தொடங்கியதும் செப்டம்பர் முதல் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து வெளி மாவட்டங்கள், வெளி மாநில ங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர்.

    கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட மலைரெயிலும் டிசம்பர் 31-ந் தேதியில் இருந்து இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். அதன்பின்னர் தினந்தோறும் மலைரெயிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இந்த நிலையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றின் 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பதிவு முறை தொடர்கிறது.

    தற்போது பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

    அதேபோல் மலைரெயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் முற்றிலும் குறைந்து விட்டது. கோடை சீசனில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் குன்னூர் ரெயில் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர். இதனால் மலைரெயிலில் உள்ள ரெயில் பெட்டிகளின் இருக்கை காலியாக கிடக்கின்றன. நேற்று குன்னூரில் இருந்து ஊட்டிக்கு சென்ற மலைரெயில் வெறும் 17 பேர் மட்டுமே பயணித்துள்ளனர். மற்ற இருக்கைகளில் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது.




    Next Story
    ×