என் மலர்tooltip icon

    நீலகிரி

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால் நீலகிரியில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இதனால் பூங்காக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
    ஊட்டி:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா தலங்கள் நேற்று முதல் மூடப்பட்டன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், தேயிலை பூங்கா, சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் நுழைவுவாயில்கள் அடைக்கப்பட்டது.

    அதேபோல் குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. பூங்காவின் நுழைவாயில் மூடப்பட்டு, முன்பகுதியில் மறு உத்தரவு வரும்வரை உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் உள்ளே அனுமதி இல்லை என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருக்கிறது. தாவரவியல் பூங்கா பெரிய புல்வெளி மைதானம், நுழைவுவாயில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடின.

    ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகுகள், துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் இல்லாமல் படகுகள் ஓய்வு எடுத்து வருகிறது. நுழைவு டிக்கெட் வழங்குமிடம், படகு சவாரிக்கு கட்டணம் செலுத்தும் இடம் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. ஊட்டி ரோஜா பூங்காவில் நுழைவுவாயில் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது. சுற்றுலா தலங்கள் அருகே கடைகளை வைத்து நடத்தி வரும் வியாபாரிகள், நேற்று கடைகளை திறந்து வைத்தும் வியாபாரம் இல்லாததால் அவதி அடைந்தனர். இதனால் கடைகளை மூடினர்.

    ஊட்டி படகு இல்ல வளாகத்தில் கடைகளில் உள்ள பொருட்களை வியாபாரிகள் வெளியே எடுத்து கடைகளை காலி செய்து சென்றனர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டிக்கு வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால், கடந்த ஆண்டை போல் மீண்டும் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் நடப்பாண்டில் அடுத்த மாதம் நடைபெறும் கோடை சீசன் நடத்துவது கேள்விக்குறியாகி உள்ளது. ஊட்டி அரசு அருங்காட்சியகம் மூடப்பட்டது.

    கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஊட்டியில் சுற்றுலா தலங்கள் மார்ச் 17-ந் தேதி முதல் செப்டம்பர் 8-ந் தேதி வரை மூடப்பட்டன. பின்னர் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தகவல் தெரிவித்துள்ளார்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள கட்டப்பெட்டு அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் இன்கோ சர்வ் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் முதன்மை செயலாளரும், இன்கோ நிர்வாக தலைமை செயலாளருமான சுப்ரியா சாகு, நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து கலெக்டர்இன்னசென்ட் திவ்யா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தி உள்ளார். இதற்காக கூடுதலாக கொரோனா பரிசோதனை எந்திரங்கள் தேவைப்படுவதால் தமிழக சுகாதாரத்துறையிடம் கேட்டுள்ளோம். இந்த வார இறுதிக்குள் புதிய எந்திரங்கள் வரும் என நம்புகிறோம்.

    மேலும் சோதனைகள் மேற்கொள்ளவும், தடுப்பூசி முகாம்களில் பணியாற்றவும் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், கூடுதல் பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்பதால் தான் கொரோனா தொற்று அதிக அளவு பரவுகிறது என்பதால் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம். இந்த கண்காணிப்பு பணியில் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது அந்தந்த கிராம பகுதிகளுக்கே சென்று முகாமிட்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் மொத்தம் 1,054 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில் சுமார் 420 பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து தொழிற்சாலைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

    கோவிஷீல்டு தடுப்பூசி தற்போது இருப்பு இல்லை. விரைவாக சுகாதாரத்துறை மூலமாக நீலகிரி மாவட்டத்திற்கு கோவிஷீல்டு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். நீலகிரி மாவட்ட எல்லைகள் இன்னும் மூடப்படவில்லை. ஆனால் சுற்றுலா பயணிகள், நீலகிரி மாவட்டதிற்கு சுற்றுலா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்திற்கு வர இ-பாஸ் தேவை இல்லை. ஆனால் இ-பதிவு கட்டாயம் தேவை. கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கூட்டுறவு தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் சங்கர நாராயணன் பிள்ளை, தலைவர் சுமதி சிவராஜ், சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலுசாமி, துணை இயக்குனர் பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், நந்தகுமார், தாசில்தார் கிருஷ்ண மூர்த்தி, அரசு மருத்துவர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    பழங்குடியின மாணவர்களுக்கு உணவு மற்றும் உதவித்தொகை என மொத்தம் ரூ.7 ஆயிரத்து 300 வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் குஞ்சப்பனை, தேவாலா, பொன்னானி, கரிக்கையூர் உள்ளிட்ட 22 இடங்களில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகள் மற்றும் விடுதிகள் உள்ளன.

    கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அந்த சமயத்தில் பழங்குடியின மாணவர்களுக்கு உணவு மற்றும் உதவித்தொகை என மொத்தம் ரூ.7 ஆயிரத்து 300 வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.

    இந்த தொகையை சம்பந்தப்பட்ட உண்டு உறைவிட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பழங்குடியின மாணவர்கள் அல்லது சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோர், பாதுகாவலர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். செலுத்திய பின்னர் அதனை அவர்கள் பெற்று கொண்டதனை உறுதிப்படுத்தும் பொருட்டு பணம் பெற்றவர்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    இந்த திட்டத்தில் மாணவர்களுக்கு முறையாக நிதி உதவி சென்று சேரவில்லை எனவும், இதில் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவிதொகை பணத்தில் முறைகேடு செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தேவாலா மற்றும் பொன்னானி பள்ளிகளில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் பாக்கியநேசன், சேகர் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது தினமும் 1,200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரவுவதை தடுக்க பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கிராமப்புறங்கள், வெளியிடங்களுக்கு சென்று திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நடமாடும் மருத்துவ குழுவினர் கிராமப்புறங்களுக்கு சென்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தி வருகின்றனர்.

    இதில் உடலில் அதிக வெப்பநிலை இருப்பது தெரிய வந்தால், சம்பந்தப் பட்ட நபர்களை கொரோனா பரிசோதனைக்காக பரிந்துரைக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 94 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    தற்போது தினமும் 1,200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    காலநிலை மாற்றத்தால் தேயிலை செடிகளை சிவப்பு சிலந்தி நோய் தாக்கி வருகிறது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    மலை மாவட்டமான நீலகிரியில் சிறு, குறு விவசாயிகள் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். அவர்கள் பச்சை தேயிலையை பறித்து தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்து வருகிறார்கள்.

    தேயிலை வாரியம் மற்றும் இன்கோசர்வ் நிர்ணயம் செய்யும் மாத சராசரி விலை கிலோ அடிப்படையில் வழங்கப்படுகிறது. இருப்பினும் கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஒரு கிலோ பச்சை தேயிலை ரூ.26, ரூ.28 விலை உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கனமழையால் அசாமில் தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டது. அதனால் உள்நாட்டில் தேயிலை தூளின் தேவை அதிகரித்ததால், தொடர்ந்து 4 மாதங்கள் பச்சை தேயிலை விலை குறையாமல் இருந்தது. பின்னர் அசாமில் இயல்பு நிலை திரும்பியதால் நீலகிரியில் பச்சை தேயிலை விலை குறைய ஆரம்பித்தது.

    நடப்பு மாதம் ஒரு கிலோ ரூ.19 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை குறைந்து வருவதால் தேயிலை செடிகள் பராமரிப்பு, தொழிலாளர்களுக்கு கூலி வழங்குவது, உரமிடுவது, தண்ணீர் பாய்ச்சுவது போன்ற செலவுகளை கவனிக்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, சரிவர மழை பெய்யாமல் காலநிலை மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் தேயிலை செடிகளை நோய் பாதித்து வருகிறது.

    பச்சை நிறத்தில் காணப்படும் இலைகள் காய்ந்த நிலையில் சிவப்பு நிறமாக காட்சி அளிக்கிறது. மஞ்சூர், எமரால்டு, இத்தலார் போன்ற பகுதிகளில் தேயிலை செடிகளை சிவப்பு சிலந்தி நோய் தாக்கி உள்ளது. அதனால் விவசாயிகள் வழக்கமாக பச்சை தேயிலை பறித்து தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்கும் அளவு குறைந்து உள்ளது.

    இந்த நோய் தாக்குதல் காரணமாக தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பச்சை தேயிலையின் விலை குறைந்து வரும் நிலையில், நோய் தாக்கியதால் பச்சை தேயிலை மகசூல் வெகுவாக குறைந்து வருகிறது.

    நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் பூச்சி மருந்து தெளித்தும், நோய் தாக்கிய செடிகளை வெட்டியும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க பலாக்காய்களை வனத்துறையினர் அகற்றி வருகிறார்கள். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் தொரப்பள்ளி, நாடுகாணி, தேவாலா, பாண்டியாறு ரேஞ்ச் எண்.4 காட்டு யானைகள் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து வருகிறது. வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை தினமும் சேதப்படுத்தி வருகிறது. இதேபோல் பந்தலூர் தாலுகா பகுதியிலும் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    வனப்பகுதியில் போதிய பசுந்தீவனம் கிடைக்காததால் காட்டு யானைகள் அதிகளவு ஊருக்குள் வருவதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் இரவு பகலாக காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அந்தந்த பகுதி மக்களை உஷார் படுத்தி வருகின்றனர். இதேபோல் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கூடலூர் பகுதியில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதற்கு ஒரு காரணமாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால் கூடலூர் பகுதியில் மரங்களில் விளைந்த பலாக்காய்களை வனத்துறையினர் கடந்த ஒரு வாரமாக வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் பலாக்காய்களும் எந்த பயனும் இன்றி வீணாகி வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடந்து செல்லும் பாதைகளில் விதிமுறைகளை மீறி மின்வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் யானைகள் வழிமாறி ஊருக்குள் வருகிறது. இதுதவிர காட்டு யானைகள் ஊருக்குள் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

    ஆனால் வனத்துறையினர் விவசாய நிலங்களில் வளர்ந்து உள்ள பல காய்களை வெட்டினால் காட்டு யானைகள் வராது என கூறியவாறு மரங்களில் உள்ள காய்களை அகற்றி வருகின்றனர். காட்டுயானைகளுக்கு பலாப்பழ சீசன் குறித்து நன்கு அறியும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மரங்கள் உள்ள இடங்களுக்கு காட்டு யானைகள் வந்து செல்கிறது.

    தற்போது வனத்துறையினர் பலாக்காய்களை வெட்டி அப்புறப்படுத்துவதால் ஏமாற்றம் அடையும் காட்டு யானைகள் பொதுமக்களின் வீடுகளை சேதப்படுத்தி உணவு பொருட்களை தின்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    இதனால் காட்டு யானைகளால் பிரச்சினை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் பலா காய்களை வெட்டுவதால் விவசாயிகளுக்கும் இழப்பு ஏற்படுகிறது. எனவே வனத்துறையினர் பலாக்காய்களை வெட்டக்கூடாது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    கோடைசீசன் துவங்குவதையொட்டி, கடந்த பிப்ரவரி மாதம் பூங்காவில் 40 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் உள்ள நேரு பூங்கா சிறந்த சுற்றுலா மையமாக உள்ளது. இந்தப் பூங்காவில் அழகிய புல் தரைகள், ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவை உள்ளன. இந்த பூங்காவில் ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

    கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பூங்கா மூடப்பட்டதால் காய்கறி கண்காட்சி நடத்தப்படவில்லை. தற்போது மீண்டும் பூங்கா திறக்கப்பட்டு 50 சதவீத சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோடைசீசன் துவங்குவதையொட்டி, கடந்த பிப்ரவரி மாதம் பூங்காவில் 40 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று பூங்காவில் உள்ள செடிகளை தயார்படுத்தும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

    தற்போது அங்கு புல் தரைகளில் அதிகமாக வளர்ந்து உள்ள புற்களை சமன்படுத்தும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பூங்காவில் உள்ள பிற செடிகளை வெட்டி அழகுபடுத்தும் பணியும் நடந்து வருகிறது.

    இது குறித்து பூங்கா ஊழியர்கள் கூறும்போது, அடுத்த மாதத்துக்குள் பூங்காவில் உள்ள அனைத்து மலர்களும் பூத்து குலுங்கி சீசனுக்கு தயாராகிவிடும். தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், காய்கறி கண்காட்சி நடத்தப்படுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் பூங்காவில் உள்ள அனைத்து செடிகளையும், பராமரித்து வருகிறோம் என்றனர்.
    கூடலூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி அந்தப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் டியூசன் படித்து வருகிறார். டியூசனுக்கு சென்ற இடத்தில் புளியம்பாராவை சேர்ந்த கலைவாணன் (வயது 35) என்பவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த மாணவி பந்தலூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். அதை அறிந்து கொண்ட கலைவாணன், பந்தலூர் சென்று அந்த மாணவியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இது குறித்து கூடலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் கலைவாணனை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

    அதில் அவர், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கலைவாணனை கைது செய்தனர்.
    நாளை முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் மூடவும், சுற்றுலா பயணிகள் வரவும் அரசு தடை விதித்துள்ளது.
    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தாவரவியல் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், ரோஜா பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி உள்பட மாவட்டம் முழுவதும் சுற்றுலா தலங்கள் நிரம்பி கிடக்கின்றன. இந்த சுற்றுலா தலங்களுக்கு ஆண்டு தோறும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    கடந்த ஆண்டு மார்ச் மாத மத்தியில் பரவிய கொரோனா காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. பின்னர் தொற்று குறைவு மற்றும் அரசு விதித்த தளர்வுகள் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன.

    இருப்பினும் சுற்றுலா பயணிகள் இ-பதிவு முறையிலேயே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதும் இ-பதிவு செய்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மாவட்டத்திற்கு படையெடுத்து வந்தனர். இதனால் சுற்றுலாவை நம்பி கடை நடத்தி வந்த தொழிலாளர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவ தொடங்கியதை அடுத்து கடந்த 8-ந் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஆனால் அதில் சுற்றுலாவுக்கு எந்த தடையும் இல்லாமல் இருந்தது.

    இருப்பினும் அதிகரிக்கும் கொரோனா தொற்று, இ-பதிவு போன்ற காரணங்களால் கடந்த சில நாட்களாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட அனைத்து சுற்றுலா தலங்களிலும் ஒரு சிலரை மட்டுமே பார்க்க முடிந்தது. அனைத்து சுற்றுலா தலங்களும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த நிலையில் நாளை முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் மூடவும், சுற்றுலா பயணிகள் வரவும் அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து நீலகிரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் அனைத்தும் நாளை மூடப்பட உள்ளது.

    கோடை வெயிலில் இருந்து தப்பித்து சீதோஷ்ண நிலையை அனுபவிப்பதற்காக பலர் குடும்பம், குடும்பமாக நீலகிரிக்கு படையெடுத்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள காட்டேஜ்கள், விடுதிகளில் அறை எடுத்து தங்கி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வந்தனர்.

    தற்போது சுற்றுலா தலங்களை மூட அரசு அறிவித்துள்ளதை அடுத்து நீலகிரியில் அறை எடுத்து தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் இன்று தங்களது ஊர்களுக்கு புறப்பட்டனர். அவர்கள் கார்கள், பஸ்கள், வேன்களில் இன்று காலை முதலே புறப்பட்ட வண்ணம் உள்ளனர். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகள், காட்டேஜூகளும் வெறிச்சோடின. இதனால் அவர்களது வருவாய் வெகுவாக பாதிப்படைய வாய்ப்புள்ளது.

    சுற்றுலாவை நம்பி வாக்கி, சாக்லெட் வேலை செய்பவர்கள், நீலகிரி தைல விற்பனையாளர்கள் என 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வாழ்க்கையை ஓட்டி வந்தனர். தற்போது சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்படுவதால் அதனை நம்பி தொழில் செய்து வந்த அனைத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.



    நடிகர் விவேக் மறைவை தொடர்ந்து அவருடன் பங்கேற்ற நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

    ஊட்டி:

    சின்னக்கலைவாணர் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகர் விவேக் நேற்று மரணம் அடைந்தார்.

    இவரது மறைவுக்கு தமிழகம் முழுவதும் சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் மரக்கன்றுகள் நட்டு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

    கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி உலக வன நாளையொட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதை தொடங்கி வைத்து பேசினார்.

    அதில், நீலகிரி பசுமையான மாவட்டம். இதை பாதுகாப்பது நமது கடமை, மலைகளின் அரசியை மலைகளின் கிழவியாக மாற்ற வேண்டாம். நீலகிரியை பாதுகாக்க அனைவரும் மரம் நட வேண்டும் என்று தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நடிகர் விவேக் மறைவை தொடர்ந்து அவருடன் பங்கேற்ற நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் பசுமையை காக்கும் வகையில் விழிப்புணர்வை பரப்புவதற்காக தனது பிரபல அந்தஸ்தை கொடுக்க எப்போது தயாராக இருக்கும் ஒர் இணக்கமான ஆளுமை.

    இவரது ஆதரவுடன் நீலகிரி மாவட்டத்தில் 4 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய முடிந்தது. நீலகிரி மக்கள் எப்போதும் விவேக்கை தங்கள் அன்பாக நினைவு கொண்டிருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

    ஊட்டி அடுத்துள்ளது பகல்கோடு என்ற பகுதி. இங்கு தோடர் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். விவேக் இறந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தங்கள் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல் ஊட்டி முத்தோரையில் உள்ள அப்துல் கலாம் ஆதரவற்றோர் காப்பகத்திலும் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி மரக்கன்றுகள் நடப்பட்து.

    பழங்குடியின மக்கள் மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தினர்

    நடிகர் விவேக் நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுபட்டறையில் உள்ள சாந்தி விஜய் ஆரம்ப பள்ளியில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை படித்தார். சமீபத்தில் குன்னூர் சென்றிருந்த விவேக் அங்கு பணியாற்றிய ஆசியர்கள், மாணவர்களுடன் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். விவேக் பள்ளிக்கு வந்து கலகலப்பாக பேசிச் சென்றதை இப்போது நினைவு கூறும் அங்குள்ள ஆசிரியர்களும், மாணவர்களும் கண் கலங்கினர்.

    கோவை மாவட்டத்தில் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவை ரேஸ்கோர்ஸ், சாய்பாபா காலனி, குனியமுத்தூர் பகுதிகளில் தேவைப்படுவோருக்கு 100 மரக்கன்றுகளை வழங்கிய தோடு, பல்வேறு இடங்களில் 100 மரக்கன்றுகளையும் நட்டு வைத்தனர். இதேபோல் கீரணத்தம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடவு செய்து அஞ்சலியை செலுத்தினர்.

    ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு தனது டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டின் மாபெரும் மரங்கள் நடும் திட்டத்தை தொடங்கிய விவேக் என்றும் நம் நினைவில் நிற்பார். அவர் இதயம் இந்த மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் துடித்தது என கூறியுள்ளார்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் புறநகர் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் உள்ளதாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி:

    காந்தல் பகுதியில் சாண்டி நள்ளா நீர்த்தேக்கத்தை ஒட்டியுள்ள அரசு கால்நடைப் பண்ணைக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. அங்கு பயிரிடப்பட்ட கேரட் தோட்டத்தை தின்றும், மிதித்தும் முற்றிலும் சேதப்படுத்தியது. இதுகுறித்து தோட்ட உரிமையாளர்கள் அளித்த தகவலின்பேரில் வனத் துறையினர் அப்பகுதியை ஆய்வு செய்தபோது ஒற்றை பெண் யானையாக இருக்கலாம் என்று தெரியவந்தது.

    இந்த யானை மசினகுடி பகுதியில் இருந்து சோலூர் பகுதி வழியாக முத்தநாடு பகுதிக்கு வந்து அங்கிருந்து சாண்டிநள்ளா நீர்த்தேக்கத்தின் மறு கரைக்கு வந்து காந்தல் பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

    இதுதொடர்பாக வனத் துறையினர் இப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

    கோத்தகிரியில் கடைகளில் அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்தனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்படி கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர்கள் பாலசுப்ரமணியம், மோகன் மற்றும் கிராம உதவியாளர்கள் நேற்று கோத்தகிரி மற்றும் அரவேனு பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளதா? என ஆய்வு செய்தனர். அப்போது சில வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மொத்தத்தில் விதிமுறைகளை மீறிய வியாபாரிகளிடம் இருந்து ரூ.11 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    ×