search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா கட்டுப்பாடுகளால் வெறிச்சோடி காணப்படும் ஊட்டி தாவரவியல் பூங்கா.
    X
    கொரோனா கட்டுப்பாடுகளால் வெறிச்சோடி காணப்படும் ஊட்டி தாவரவியல் பூங்கா.

    மூடப்படும் சுற்றுலா தலங்கள்- நீலகிரியை விட்டு வெளியேறும் சுற்றுலா பயணிகள்

    நாளை முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் மூடவும், சுற்றுலா பயணிகள் வரவும் அரசு தடை விதித்துள்ளது.
    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தாவரவியல் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், ரோஜா பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி உள்பட மாவட்டம் முழுவதும் சுற்றுலா தலங்கள் நிரம்பி கிடக்கின்றன. இந்த சுற்றுலா தலங்களுக்கு ஆண்டு தோறும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    கடந்த ஆண்டு மார்ச் மாத மத்தியில் பரவிய கொரோனா காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. பின்னர் தொற்று குறைவு மற்றும் அரசு விதித்த தளர்வுகள் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன.

    இருப்பினும் சுற்றுலா பயணிகள் இ-பதிவு முறையிலேயே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதும் இ-பதிவு செய்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மாவட்டத்திற்கு படையெடுத்து வந்தனர். இதனால் சுற்றுலாவை நம்பி கடை நடத்தி வந்த தொழிலாளர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவ தொடங்கியதை அடுத்து கடந்த 8-ந் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஆனால் அதில் சுற்றுலாவுக்கு எந்த தடையும் இல்லாமல் இருந்தது.

    இருப்பினும் அதிகரிக்கும் கொரோனா தொற்று, இ-பதிவு போன்ற காரணங்களால் கடந்த சில நாட்களாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட அனைத்து சுற்றுலா தலங்களிலும் ஒரு சிலரை மட்டுமே பார்க்க முடிந்தது. அனைத்து சுற்றுலா தலங்களும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்த நிலையில் நாளை முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் மூடவும், சுற்றுலா பயணிகள் வரவும் அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து நீலகிரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் அனைத்தும் நாளை மூடப்பட உள்ளது.

    கோடை வெயிலில் இருந்து தப்பித்து சீதோஷ்ண நிலையை அனுபவிப்பதற்காக பலர் குடும்பம், குடும்பமாக நீலகிரிக்கு படையெடுத்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள காட்டேஜ்கள், விடுதிகளில் அறை எடுத்து தங்கி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வந்தனர்.

    தற்போது சுற்றுலா தலங்களை மூட அரசு அறிவித்துள்ளதை அடுத்து நீலகிரியில் அறை எடுத்து தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் இன்று தங்களது ஊர்களுக்கு புறப்பட்டனர். அவர்கள் கார்கள், பஸ்கள், வேன்களில் இன்று காலை முதலே புறப்பட்ட வண்ணம் உள்ளனர். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகள், காட்டேஜூகளும் வெறிச்சோடின. இதனால் அவர்களது வருவாய் வெகுவாக பாதிப்படைய வாய்ப்புள்ளது.

    சுற்றுலாவை நம்பி வாக்கி, சாக்லெட் வேலை செய்பவர்கள், நீலகிரி தைல விற்பனையாளர்கள் என 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வாழ்க்கையை ஓட்டி வந்தனர். தற்போது சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்படுவதால் அதனை நம்பி தொழில் செய்து வந்த அனைத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.



    Next Story
    ×