search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி அருகே பைக்காரா நீர்வீழ்ச்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்த காட்சி.
    X
    ஊட்டி அருகே பைக்காரா நீர்வீழ்ச்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்த காட்சி.

    ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

    கொரோனா 2-வது அலைக்கு மத்தியிலும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.
    ஊட்டி:

    தமிழகத்தில் பொழுதுபோக்கு பூங்காக்களில் 50 சதவீதம் பேரை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் ஒரு மணி நேரம் மட்டுமே சுற்றி பார்க்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் பூங்காவில் நிற்காமலும், புல்வெளிகளில் அமராமலும் இருப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஒரு வழியாக நடந்து சென்று கண்ணாடி மாளிகையை கண்டு ரசித்து விட்டு வேறு வழியாக திரும்பி செல்ல ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    பூங்காவில் செல்பி மற்றும் புகைப்படம் எடுக்கும்போது சுற்றுலா பயணிகள் முககவசத்தை அகற்றி கொள்ளலாம். அதன் பின்னர் உடனடியாக முககவசத்தை மீண்டும் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் சரியாக முககவசம் அணிந்து உள்ளார்களா? என்று ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். இதற்காக ஊழியர்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு, முககவசம் அணிந்து இருக்கிறார்களா?, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா? என்று கண்காணிக்கப்படுகிறது.

    முககவசம் அணியாமல் தொற்றை பரப்பும் வகையில் வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஊட்டியில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. கடந்த 10-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 4,612 பேர், நேற்று முன்தினம் 6,342 பேர் வருகை தந்து உள்ளனர். இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் உள்ளூர் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    வழக்கமாக சுற்றுலா பயணிகள் ஊட்டியில் தங்கியிருந்து சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பார்கள். தற்போது கொரோனா அச்சத்தால் ஒரே நாளில் சுற்றி பார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்புகின்றனர். அவர்கள் இ-பதிவு நடைமுறையில் நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
    Next Story
    ×