என் மலர்tooltip icon

    நீலகிரி

    தடுப்பூசி ஒதுக்கும் அளவை பொறுத்து அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 900-க்கு மேல் இருந்தது. தற்போது 750-க்கும் கீழ் உள்ளது. இருப்பினும் தொடர்ந்து 2-வது அலை பரவல் இருந்துதான் வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    சிறிய மாவட்டம் என்பதால் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முதன்மையான மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டது. அதன்படி செயல் திட்டம் வகுக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    பழங்குடியின மக்கள், தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது மாற்றுத்திறனாளிகள் மருத்துவமனைகளுக்கு வந்து தடுப்பூசி செலுத்த முடியாது என்பதால், அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக கர்ப்பிணிகள் இறக்கும் அபாயம் உள்ளது. இதனால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

    இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    நீலகிரியில் மொத்தம் 7 லட்சத்து 21 ஆயிரத்து 949 மக்கள் தொகை உள்ளது. இதில் 18 வயதுக்கு மேல் 6 லட்சத்து 42 ஆயிரத்து 132 பேர் உள்ளனர். இதுவரை 3 லட்சத்து 88 ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

    முதல் டோஸ் 3 லட்சத்து 13 ஆயிரத்து 925 பேருக்கும், 2-வது டோஸ் 74 ஆயிரத்து 916 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. மொத்த மக்கள்தொகையில் பாதி பேருக்குமேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இன்னும் 2½ லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டி இருக்கிறது.

    தடுப்பூசி ஒதுக்கும் அளவை பொறுத்து அனைத்து பகுதிகளிலும் மக்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    நூலகத்தில் உட்கார்ந்து படிக்க அனுமதி இல்லை. போட்டி தேர்வுக்கு தயாராகிறவர்கள், ஆராய்ச்சி படிப்புக்காக புத்தகங்கள் எடுத்து படிப்பவர்களுக்கு அனுமதி உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பொது நூலகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மைய நூலகம் மற்றும் பிற இடங்களில் உள்ள பகுதி நேர நூலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நூலகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நீலகிரியில் நேற்று முதல் முழு ஊரடங்குக்கு பின்னர் நூலகங்கள் திறக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் மாவட்ட மைய நூலகத்தில் உட்கார்ந்து படிக்க அனுமதி இல்லை. போட்டி தேர்வுக்கு தயாராகிறவர்கள், ஆராய்ச்சி படிப்புக்காக புத்தகங்கள் எடுத்து படிப்பவர்களுக்கு அனுமதி உள்ளது. மேலும் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை தேர்வு செய்து வீட்டிற்கு எடுத்து சென்று படிக்கலாம். அங்கு சமூக இடைவெளியை கடைபிடிப்பது உடன், கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    12 வயதுக்குள், 60 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு அனுமதி இல்லை. அங்கு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது.
    குன்னூர் பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஊட்டி:

    குன்னூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தனியார் நிலத்தில் ஈட்டி, தேக்கு, அயின், நாவல், சந்தனம் உள்பட பல்வேறு மரங்கள் உள்ளன. இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தக்கடை பகுதியில் வனத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான சந்தன மரங்கள் முள்வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே அந்த சந்தன மரங்களை மர்ம ஆசாமிகள் வெட்டி கடத்தி உள்ளனர்.

    இதில் தனியாருக்கு சொந்தமான 4 மரங்களும், வனத்துறைக்கு சொந்தமான 2 மரங்கள் என்று 6 மரங்கள் வெட்டப்பட்டு உள்ளது. வெட்டப்பட்ட மரங்களின் அடிப்பகுதியில் வனத்துறை சார்பில் குறியீடும் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் சந்தன மரங்களை வெட்டி கடத்திய மர்ம ஆசாமிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் தனியார் தோட்ட உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் கொலக்கொம்பை போலீசாரும் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.

    எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 58 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்து 131 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 93 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 29 ஆயிரத்து 177 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் இதுவரை 174 பேர் இறந்து இருக்கின்றனர். தற்போது 780 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கோத்தகிரி கட்டபெட்டு பாக்கியா நகரில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கோத்தகிரி, கட்டபெட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    கோத்தகிரி:

    கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் 2 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகிறார்கள்.

    நீலகிரி மாவட்டத்திலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவே கல்வி கற்பிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் போதிய தொலை தொடர்பு வசதிகள் இல்லாததால் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஒரு சில இடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தி வருகின்றனர்.

    கோத்தகிரி கட்டபெட்டு பாக்கியா நகரில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கோத்தகிரி, கட்டபெட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு கல்வி தொலைக் காட்சி வாயிலாகவும், ஆன்லைன் மூலமாகவும் ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வந்தனர். ஆன்லைன் மூலம் சொல்லி கொடுப்பதை விட அவர்களுக்கு நேரில் சென்று பாடம் நடத்த இந்த பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

    இதையடுத்து அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும், கடந்த சில நாட்களாக மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் வசந்தா கூறியதாவது:-

    பாக்கியா நகர் பள்ளியில் எல்.கே.ஜி.முதல் 8-ம் வகுப்பு வரை 100 மாணவர்கள் படிக்கின்றனர். 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறோம். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருமே தோட்ட தொழிலாளர்கள் தான். இவர்களின் பிள்ளைகளுக்கு படிப்பை தங்கு தடையின்றி கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் வகுப்பு, கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடம் நடத்தி வருகிறோம்.

    மேலும் நாங்களே அவர்களின் வீடுகளுக்கு சென்றும் பாடம் கற்பித்து வருகிறோம். வீட்டு பாடங்கள் கொடுத்து, மாணவர்கள் எழுதுவதை உறுதி படுத்துகிறோம். மாணவர்கள் பாடங்களை மறக்காமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஆண்டு ஒரு கிலோ பூண்டு ரூ.200 வரை விற்பனையானது. தற்போது ரூ.100 முதல் ரூ.150 வரை விலை கிடைக்கிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விளைநிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த பூண்டு செடிகள் கீழே சாய்ந்தன. இதையடுத்து விவசாயிகள் பூண்டு செடிகள் அழுகாமல் இருக்க முன்கூட்டியே அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாய்ந்து கிடக்கும் செடிகளை தொழிலாளர்கள் பிடுங்கி வைக்கின்றனர். பின்னர் நிலத்தின் ஓரிடத்தில் பூண்டு பிரிக்கப்படாமல் செடிகளோடு வரிசையாக அடுக்கி வைக்கப்படுகிறது.

    மேலும் மழையில் நனையாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு உள்ளது. இதற்காக சுற்றிலும் கம்புகள் வைத்து அதன்மேல் தார்பாய் போட்டு பாதுகாக்கப்படுகிறது. வழக்கமாக பூண்டு விதைத்து அறுவடைக்கு தயாராக 120 நாட்கள் ஆகும். தொடர் மழையால் முன்கூட்டியே அறுவடை செய்யப்படுவதால் அதன் தரம் எதிர்பார்த்த அளவு இருக்காது என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து பூண்டு பயிரிட்ட விவசாயிகள் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு ஒரு கிலோ பூண்டு ரூ.200 வரை விற்பனையானது. தற்போது ரூ.100 முதல் ரூ.150 வரை விலை கிடைக்கிறது. இதற்கிடையே அறுவடைக்கு தயாராகி வந்த பூண்டு செடிகள் மழையால் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    பூண்டு மற்றும் அதன் செடிகள் அழுகி வருவதால் விரைவாக அறுவடை செய்து வருகிறோம். இருப்பினும் செடிகளை தனியாகவும், பூண்டுகளை தனியாகவும் பிரிப்பதற்கு காய்ந்தால் மட்டுமே முடியும். தொடர்ந்து மழை பெய்வதால் தார்ப்பாய் கொண்டு மூடி வைத்து பாதுகாத்து வருகிறோம். அவை அழுகி வருவதால் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    சிறுமியை காணவில்லை என்று ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
    ஊட்டி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(வயது 30). கூலி தொழிலாளி. இவர் வேலைக்காக ஊட்டிக்கு வந்து செல்வது வழக்கம். அங்கு கேரட் அறுவடை செய்து, அதன் மூட்டைகளை லாரியில் ஏற்றி, இறக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.

    அப்போது ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், சந்தோஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

    இதுகுறித்து ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த சிறுமியின் தாயார் புகார் அளித்தார். அதன்பேரில் சந்தோஷ்குமாரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பதும், சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. உடனே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோன்று குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ(20). இவருக்கும், 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. பின்னர் அந்த சிறுமியை கோவைக்கு கடத்தி சென்று, அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து அவர் திருமணம் செய்தார்.

    இதற்கிடையில் சிறுமியை காணவில்லை என்று ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீ, அந்த சிறுமியை கோவைக்கு கடத்தி சென்றது உறுதியானது. உடனே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஸ்ரீயை போலீசார் கைது செய்தனர்.
    நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த மசினகுடி அருகே மொபட்டில் சென்ற முதியவர் யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த மசினகுடி அருகே உள்ளது மாவனல்லா கிராமம்.

    இந்த கிராமத்தை சேர்ந்தவர் இருதயராஜ்(வயது63). இவர் அந்த பகுதியில் தனியாக தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    இவர் தினமும் காலையில் தனது மொபட்டில் மசினகுடியில் உள்ள தேவாலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு தனது வேலைகளை தொடங்குவது வழக்கம்.

    மசினகுடி பகுதியில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து கொண்டே இருப்பதால் கடும் மேகமூட்டம் நிலவுகிறது. இதனால் எதிரே வரும் எந்த வாகனங்களோ, ஆட்களோ கண்ணுக்கு தெரிவதில்லை. மழையும் பொருட்படுத்தாமல் இன்று அதிகாலை இருதயராஜ் தனது வீட்டில் இருந்து மசினகுடியில் உள்ள தேவலாயத்திற்கு மொபட்டில் புறப்பட்டார்.

    இருதயராஜின் மொபட் மசினகுடி- மாவனல்லா மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள புதர் மறைவில் மறைந்திருந்த காட்டு யானை திடீரென சாலைக்கு வந்து, இருதயராஜை துரத்தியது. இதனால் அச்சம் அடைந்த இருதயராஜ் வேகமாக மொபட்டை இயக்க முயற்சித்தார்.

    ஆனால் அதற்குள்ளாகவே யானை அவரை மொபட்டில் இருந்து தூக்கி சாலையில் வீசியது. பின்னர் அவரை காலால் மிதித்து தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த இருதயராஜ் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சத்தம் போட்டனர். இதனால் யானை அங்கிருந்து ஓடியது. இதையடுத்து உயிருக்கு போராடிய இருதய ராஜை மீட்டு சிகிச்சைக்காக மசினகுடியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே இருதயராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    கல்லூர் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் பாலனுடன் தகராறில் ஈடுபட்டனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி ஜக்கனாரை அருகே உள்ள ஆடுபெட்டு கல்லூரைச் சேர்ந்தவர் பாலன் (வயது 38), கூலித்தொழிலாளி. இவர் கல்லூர் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்துக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் பாலனுடன் தகராறில் ஈடுபட்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் அங்கு கிடந்த கட்டையை எடுத்து பாலனை தாக்கினார்கள். இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோத்தகிரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலனை தாக்கிய அரவேனு பகுதியை சேர்ந்த மதன் (24), குஞ்சப்பனையை சேர்ந்த மூர்த்தி (33) ஆகியோரை கைது செய்தனர்.
    பள்ளியில் இதுவரை 65 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
    பந்தலூர்:

    பந்தலூர் அருகே பொன்னானி அரசு உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது. இதனால் ஆதிவாசி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், இடைநிற்றல் மாணவ-மாணவிகளை மீண்டும் சேர்க்கவும் பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன் தலைமையில் ஆசிரியர்கள் தீவிர மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்காக அவர்கள் வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து குழந்தைகளுக்கு மாலை அணிவித்து அவர்களை பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தி வருகிறார்கள். இந்த செயல் பெற்றோரை மகிழ்வடைய செய்து உள்ளது. இதனால் பலர் தங்கள் குழந்தைகளை அங்கு சேர்த்து வருகிறார்கள். இந்த பள்ளியில் இதுவரை 65 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
    ஊட்டி, மஞ்சூர், கிண்ணக்கொரை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. மழையுடன் கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழைக்கு ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

    கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் பெய்து வந்த மழை நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை சற்று ஓய்ந்து லேசான வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    கூடலூர் தாலுகாவில் உள்ள ஓவேலி, மண்வயல், மசினகுடி, தேவர் சோலை, நெலாக்கோட்டை பகுதிகளிலும், பந்தலூர் தாலுகாவில் சேரம்பாடி, உப்பட்டி, நெல்லியாளம், எருமாடு, பிதர்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    விடிய, விடிய கொட்டி தீர்த்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதுடன், சாலைகளிலும் தண்ணீர் ஆறாக ஓடியது. இன்று காலையும் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மழை காரணமாக தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர் பணிக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து மழை பெய்வதுடன், கடுமையான குளிரும் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாமல் உள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கூடலூர் நகர் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. காலை 10 மணிக்கு பிறகே மக்கள் நடமாட்டம் இருந்தது.

    குன்னூர், கோத்தகிரி சுற்றுப்புற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. குன்னூர், ஓட்டுப்பட்டறை, பர்லியார், வண்டிச்சோலை, ரேலி காம்பவுண்ட், வண்ணாரப்பேட்டை, குன்னூர் பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் நேற்று இரவில் தொடங்கி அதிகாலை வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக குன்னூர் பஸ் நிலையம் சாலை, கோத்தகிரி சாலை, ஊட்டி சாலைகளில் தண்ணீர் அதிகளவில் ஓடியது. சாலையின் அருகே ஆங்காங்கே தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.

    ஊட்டி, மஞ்சூர், கிண்ணக்கொரை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. மழையுடன் கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    நீலகிரி மாவட்டத்தில் ஒரு வார காலமாக பெய்து வரும் காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு பூண்டு பயிர்கள் அனைத்தும் அடியோடு சாய்ந்து விட்டன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக் காய்கறி விவசாயம் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

    கேரட், பட்டாணி, பீட்ரூட், உருளை கிழங்கு, பூண்டு ஆகிய பயிர்கள் அதிகளவில் விவசாயிகளால் பயிரிடப்படுகிறது.

    ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கல்லட்டி, கொல்லிமலை, எம்.பாலாடா, கேத்தி பாலாடா, தேனாடுகம்பை ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் பூண்டு பயிரிட்டுள்ளனர்.

    இந்த பூண்டுகள் அனைத்தும் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. இங்கு விளையும் மலைப்பூண்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஒரு வார காலமாக பெய்து வரும் காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு பூண்டு பயிர்கள் அனைத்தும் அடியோடு சாய்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையில் உள்ளனர். இதுகுறித்து பூண்டு பயிரிட்டிருந்த விவசாயிகள் கூறும்போது, பூண்டு விவசாயத்தில் முதலீடு செலவு அதிகம். காற்று, மழையால் பயிர்கள் சாய்ந்து விட்டன. பாதிக்கு பாதி கூட கைக்கு கிடைக்காது. கடந்தாண்டும் மழையால் பாதிக்கப்பட்டோம். அதே போன்று இந்த ஆண்டும் இப்படி ஆகிவிட்டது. இதனால் என்ன செய்வது என்றே தெரியவில்லை என்றனர்.

    ×