search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கூடலூர், குன்னூரில் விடிய, விடிய பலத்த காற்றுடன் கனமழை

    ஊட்டி, மஞ்சூர், கிண்ணக்கொரை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. மழையுடன் கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழைக்கு ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

    கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் பெய்து வந்த மழை நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை சற்று ஓய்ந்து லேசான வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    கூடலூர் தாலுகாவில் உள்ள ஓவேலி, மண்வயல், மசினகுடி, தேவர் சோலை, நெலாக்கோட்டை பகுதிகளிலும், பந்தலூர் தாலுகாவில் சேரம்பாடி, உப்பட்டி, நெல்லியாளம், எருமாடு, பிதர்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    விடிய, விடிய கொட்டி தீர்த்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதுடன், சாலைகளிலும் தண்ணீர் ஆறாக ஓடியது. இன்று காலையும் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மழை காரணமாக தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர் பணிக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து மழை பெய்வதுடன், கடுமையான குளிரும் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாமல் உள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கூடலூர் நகர் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. காலை 10 மணிக்கு பிறகே மக்கள் நடமாட்டம் இருந்தது.

    குன்னூர், கோத்தகிரி சுற்றுப்புற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. குன்னூர், ஓட்டுப்பட்டறை, பர்லியார், வண்டிச்சோலை, ரேலி காம்பவுண்ட், வண்ணாரப்பேட்டை, குன்னூர் பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் நேற்று இரவில் தொடங்கி அதிகாலை வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக குன்னூர் பஸ் நிலையம் சாலை, கோத்தகிரி சாலை, ஊட்டி சாலைகளில் தண்ணீர் அதிகளவில் ஓடியது. சாலையின் அருகே ஆங்காங்கே தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.

    ஊட்டி, மஞ்சூர், கிண்ணக்கொரை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. மழையுடன் கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×