என் மலர்tooltip icon

    நீலகிரி

    கூடலூர் பகுதியில் ஆற்று வாய்க்கால்கள் முறையாக தூர்வாரியதால் மழை வெள்ள பாதிப்புகள் குறைந்தது. இதனால் அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இக்காலகட்டத்தில் ஆற்றுவாய்க்கால்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மழை தீவிரமாக பெய்யும் சமயத்தில் வாய்க்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் வீடுகள், விவசாய பயிர்கள் சேதம் அடைந்து வருகிறது.

    ஆற்று வாய்க்கால்களை முறையாக தூர்வாராததாலும், ஆக்கிரமிப்புகள் இருப்பதாலும் ஊருக்கு தண்ணீர் வருவதாக கூறப்பட்டது. இதனால் கூடலூர் பகுதியில் உள்ள பாடந்தொரை, புத்தூர்வயல் தேன்வயல், இருவயல், குற்றிமுற்றி உள்பட பல இடங்களில் மழைக்காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழு கூடலூர் பகுதியில் ஆய்வு நடத்தியது. அப்போது அனைத்து இடங்களிலும் உள்ள ஆற்று வாய்க்கால்களை உடனடியாக தூர்வார உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் கடந்த மாதம் முறையாக தூர்வாரும் பணி நடைபெற்றது. மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வாய்க்கால்கள் விரிவுப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கூடலூர் பகுதியில் சமீபத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பாதிப்புகள் அதிகமாக நடைபெறும் பாடந்தொரை, புத்தூர்வயல், இருவயல் உள்பட பெரும்பாலான இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படவில்லை. வாய்க்கால்கள் முறையாக தூர்வாரியதால் பாதிப்பு குறைந்து உள்ளது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    கூடலூர் அருகே நடமாடும் புலியை கூண்டுவைத்து பிடிக்கக்கோரி பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
    கூடலூர்:

    கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சி தேவன்-1 கிராமத்தில் கடந்த 2 வாரங்களாக புலி ஒன்று ஊருக்குள் பதுங்கி கால்நடைகளை கடித்து கொன்று வருகிறது. இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் புலியை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதனை வலியுறுத்தி நேற்று முன்தினம் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தேவர்சோலை போலீசார் மற்றும் வனத்துறையினர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இதற்கிடையே புலி கடித்து உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் 3 பேருக்கு கூடலூர் வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் இழப்பீட்டு தொகையை வழங்கினர்.

    தொடர்ந்து ஊருக்குள் புலி வராதவாறு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர். இருப்பினும் கூண்டு வைத்து புலியை பிடித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர். அதன்படி நேற்று 2-வது நாளாக கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தோட்டத்தொழிலாளர்களும் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    ஊருக்குள் முகாமிட்டுள்ள புலிக்கு சுமார் 12 வயது இருக்கும். வயதாகிவிட்டதால் இரையை வேட்டையாட முடியாமல் ஊருக்குள் முகாமிட்டு கால்நடைகளை தொடர்ந்து கொன்று வருகிறது. இந்த சமயத்தில் தேயிலைத்தோட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களையும் தாக்க வாய்ப்புள்ளது. இதனால் மனித உயிர் இழப்புகளும் ஏற்படும் நிலை உள்ளது. எந்தப் பாதுகாப்பும் இல்லாததால், புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அப்போது போலீசார், வனத்துறையினர் பல கட்டமாக கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் உடன்பாடு ஏற்படவில்லை. புலியை பிடிக்க கூண்டு வைக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கொரோனா பாதிப்பால் கோடை சீசனில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், சாக்லேட் விற்பனை பாதிக்கப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தயாரிக்கப்படும் ஹோம்மேட் சாக்லேட் பிரபலமானது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வருகிறவர்கள் வர்க்கி, சாக்லேட் போன்றவற்றை விரும்பி வாங்கி செல்கின்றனர். 100 கிராம் கொண்ட சாக்லேட் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    ஊட்டியில் இருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பால் கோடை சீசனில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், சாக்லேட் விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால் உற்பத்தி செய்த சாக்லேட்டுகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    ஊரடங்கு தளர்வுக்கு பின் சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி இல்லையென்றாலும், சுற்றுலா பயணிகள் வர தடை இல்லை. அதனால் பிற இடங்களில் இருந்து பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் தங்களுக்கு பிடித்தவற்றை வாங்கி செல்வதால் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இருப்பினும் சாக்லேட்டுகளை ரெடிமேடாக வாங்கி விற்பதால் ஊட்டி சாக்லேட் மவுசு குறையும் நிலை காணப்படுகிறது.

    இதுகுறித்து சாக்லேட் உற்பத்தியாளர் பட்டாபிராமன் கூறியதாவது:- ஊட்டியில் ஹோம்மேட் சாக்லேட் கடந்த 26 ஆண்டுகளாக உற்பத்தி செய்து வருகிறேன். கொரோனா பாதிப்பால் விற்பனை செய்ய முடியாமல் நஷ்டம் ஏற்பட்டதால் பலர் இந்த தொழிலை விட்டு சென்றனர்.

    வழக்கமாக கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் விற்பனை சூடுபிடிக்கும். 2 ஆண்டுகளாக கோடை சீசன் நடைபெறவில்லை. தற்போது ரெடிமேட் சாக்லேட் வாங்கி, அதில் முந்திரி போன்றவற்றை சேர்த்து ஊட்டி சாக்லேட் என விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் ஊட்டியில் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே தமிழக அரசு ஊட்டி சாக்லேட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கி, சாக்லேட் உற்பத்தி தொழிலையும், அதை நம்பி உள்ளவர்களையும் பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே கோரிக்கையை அனைத்து உற்பத்தியாளர்களும் வைத்து உள்ளனர். இதனால் அதை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
    நீலகிரியில் அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கூடலூர் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளது. இங்கு அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 414 பள்ளிகள் உள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டை போல் நடப்பாண்டிலும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு, வீட்டில் இருந்தபடி பாடங்களை படிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஊரடங்கால் பலர் வேலையிழந்து வருமானமின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தனியார் பள்ளிகளில் படித்து வந்த மாணவர்களின் பெற்றோர்கள் கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகினர்.

    இதை தொடர்ந்து தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

    நீலகிரியில் சில அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஆங்கில வழிக்கல்வி, யோகா, கராத்தே, போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் மாணவர்கள் வீடுகளுக்கு சென்று பாடங்களை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் கூறியதாவது:-

    மொத்தம் உள்ள 414 அரசு பள்ளிகளில் மாணவர்கள் 33 ஆயிரம் பேர் படித்து வந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் புதிதாக 2 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். இதன் மூலம் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது.

    அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை, காலணி போன்ற நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்புக்கு மத்தியிலும் வீடுகளில் இருந்தபடியே கல்வி தொலைக்காட்சி அல்லது கல்வி வானொலி மூலம் மாணவர்கள் பாடங்களை படிக்கிறார்களா? என்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. வாட்ஸ்-அப் குழு மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஜனாதிபதி வருகையையொட்டி பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் பயிற்சி மையத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மறுநாள் (புதன்கிழமை) ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடி பேசுகிறார். இதற்காக அவர் நாளை(செவ்வாய்க்கிழமை) கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்கு வந்து ராஜ்பவனில் தங்குகிறார். இதையொட்டி நீலகிரியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சேலம், கோவை, ஈரோடு, தேனி உள்ளிட்ட வெளிமாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் என மொத்தம் 1,240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    வெளிமாவட்டங்களில் இருந்து நேற்று பாதுகாப்பு பணிக்காக ஊட்டிக்கு போலீசார் வந்தனர். ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வைத்து, அவர்கள் எந்த இடத்தில் பணிபுரிய வேண்டும் என்று அறிவுரைகள் கூறி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம், படகு இல்ல சாலை, மேரிஸ்ஹில், ஹில்பங்க், கலெக்டர் அலுவலக சந்திப்பு, சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா, ராஜ்பவன், ஊட்டி-குன்னூர் சாலை உள்ளிட்ட இடங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டனர்.

    ஜனாதிபதி வருகையையொட்டி ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 6-ந் தேதி வரை சந்தேக நபர்கள் யாரேனும் தங்கினால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், தங்கும் நபர்களது ஆவணங்களை பெற வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஊட்டியில் இருந்து வெலிங்டனுக்கு சாலை வழியாக காரில் ஜனாதிபதி செல்லும் நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தவிர ஊட்டி, கோத்தகிரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் உள்பட பல்வேறு துறை அரசு ஊழியர்களிடம் சுகாதார குழுவினர் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுமட்டுமின்றி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் அல்லது கோத்தகிரி வழியாக அரசு உயர் அதிகாரிகள் கார் மூலம் ஊட்டிக்கு வர உள்ளனர்.

    அந்த சாலைகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, குன்னூர் உதவி கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன் ஆகியோர் நேற்று மாலை ஆய்வு செய்தனர்.
    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஊட்டியில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஊட்டி:

    ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் நாளை சென்னை வருகிறார். நாளை மாலை சென்னை சட்ட சபையில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்று முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கிறார்.

    பின்னர் ஜனாதிபதி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை சிறப்பு விமானம் மூலம் கோவை வருகிறார். கோவையில் இருந்து ஹெலிகாப்படரில் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு செல்லும் அவர் அன்று முழுவதும் அங்கு ஓய்வெடுக்கிறார்.

    4-ந் தேதி ஊட்டி ராஜ்பவனில் இருந்து புறப்பட்டு குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அப்போது அங்குள்ள ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். அந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு மீண்டும் ஊட்டி ராஜ்பவனுக்கு வந்து ஓய்வெடுக்கிறார். 5-ந் தேதி ஊட்டி ராஜ்பவனில் ஒய்வெடுக்கும் அவர் 6-ந் தேதி கோவை வந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஊட்டியில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி செல்லும் சாலை ஒரங்களில் உள்ள முட்புதர்கள் அகற்றும் பணி, ராஜ்பவன் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    ஊட்டியில் 4 நாட்கள் தங்க உள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடியின கிராமம் மற்றும் தேயிலை தோட்டத்தை பார்வையிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக அதிகாரிகள் ஒரு சில கிராமங்களை தேர்வு செய்து வைத்துள்ளனர்.

    மேலும் ஜனாதிபதி ஹெலிகாப்படரில் வந்திறங்கும் ஊட்டி தீட்டுக்கல் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. அங்கு ஹெலிகாப்டர் இறங்கும் இடத்தில் வர்ணம் தீட்டப்பட்டு உள்ளது. அதை சுற்றிலும் புதர்கள் அகற்றப்பட்டு, சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மேலும் தினந்தோறும் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் வந்திறங்கும் ஒத்திகை நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஜனாதிபதி வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, சேலம், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து 500 போலீசார், உள்ளூர் போலீசார் என மொத்தம் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் தீவிர சோதனை மேற்கொள்கின்றனர். விடுதிகளில் சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பதையும் கண்காணிக்கின்றனர்.

    இதுதவிர மாவட்டத்தில் உள்ள பர்லியார், குஞ்சப்பனை, நாடுகாணி உள்பட அனைத்து எல்லை களிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் 3 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கோத்தகிரி அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அக்கால் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தபிரபு(வயது 34). கட்டுமான தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் ஆனந்தபிரபுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதை சித்ரா கண்டித்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வேலை முடிந்து ஆனந்தபிரபு குடிபோதையில் வீடு திரும்பினார். அப்போது அவரை சித்ரா கண்டித்தார். இதனால் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதனால் விரக்தி அடைந்த ஆனந்தபிரபு தற்கொலை செய்து கொள்வதாக கூறி படுக்கை அறைக்கு சென்று உள்பக்கமாக தாழிட்டு கொண்டார். ஆனால் அவர் நாடகம் ஆடுவதாக சித்ரா நினைத்தார். அதன்பின்னர் நீண்ட நேரம் ஆகியும் ஆனந்தபிரபு அறையை விட்டு வெளியே வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த சித்ரா, கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. உடனே கோத்தகிரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ஆனந்தபிரபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கூடலூர் அருகே இன்று அதிகாலை பலசரக்கு கடையை அடித்து நொறுக்கிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாடந்தொரை பகுதியில் உள்ளது செலுக்கடி கிராமம்.

    இந்த கிராமத்தையொட்டி அடர்ந்த வனப்பகுதியில் யானை, கரடி உள்ளிட்ட வன உயிரினங்கள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. சில நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகள், கடைகளை அடித்து நொறுக்கி பொருட்களை சேதப்படுத்தி விட்டு செல்கின்றன. இதனால் பொதுமக்கள் எப்போது யானை வரும் என்ற அச்சத்திலேயே இருந்து வருகின்றனர்.

    செலுக்கடி பகுதியை சேர்ந்தவர் உன்னிப்பா. இவர் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு பணி முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் செலுக்கடி பகுதிக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது.

    வெகுநேரமாக அங்கு சுற்றிதிரிந்த காட்டு யானை அந்த பகுதியில் உள்ள உன்னிப்பாவின் பலசரக்கு கடை முன்பு சென்று கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சேதப்படுத்தி கொண்டிருந்தது.

    சத்தம் கேட்ட உன்னிப்பா மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது யானை நின்றிருந்தது. இதையடுத்து யானையை விரட்டு முயற்சியில் ஈடுபட்டனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர்.

    பின்னர் பொதுமக்களின் உதவியோடு யானையை குடியிருப்பு பகுதியில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து இந்த பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே இந்த பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


    ஊட்டியில் 699 பேரும், குன்னூரில் 453 பேரும், கோத்தகிரியில் 662 பேரும், கூடலூரில் 580 பேரும் மொத்தம் 2,394 பேருக்கு சுழற்சி முறையில் 3 நாட்கள் தேர்வுகள் நடைபெறுகிறது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கூடலூர், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதியில் அடிப்படை கல்வியறிவு பெறாதவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் வாசிப்பு திறன் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதையொட்டி 3 மாதங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள பயிற்சி மையங்களில் ‘கற்போம் எழுதுவோம்’ என்ற கோட்பாட்டின்படி படிப்பறிவு இல்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பரவல் காரணமாக அவர்களுக்கு எழுத்தறிவு தேர்வு நடத்தப்படாமல் இருந்தது.

    தற்போது கொரோனா பரவல் குறைந்துவிட்டதால் நேற்று எழுத்தறிவு தேர்வு நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் 163 மையங்களில் 2,394 பேருக்கு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடித்து தேர்வு எழுதும் வகையில் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    கூடலூர் அருகே மசினகுடி, மாவனல்லா, ஆனைகட்டி ஆகிய மையங்களில் நடைபெற்ற தேர்வுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறும்போது, ஊட்டியில் 699 பேரும், குன்னூரில் 453 பேரும், கோத்தகிரியில் 662 பேரும், கூடலூரில் 580 பேரும் மொத்தம் 2,394 பேருக்கு சுழற்சி முறையில் 3 நாட்கள் தேர்வுகள் நடைபெறுகிறது. சிறப்பாக தேர்வு எழுதியவர்களுக்கு வட்டார வளமையம் மூலம் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்றார்.

    பின்னர் ஆனைகட்டி பகுதியில் குழந்தைகள் ஆன்லைன் மூலம் பாடங்கள் படிப்பதை முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் பார்வையிட்டு, அவர்களிடம் பாடம் சம்பந்தமாக கேள்விகளை கேட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளமைய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
    புனேவில் இருந்து ஸ்ட்ராபெர்ரி நாற்றுகள் வாங்கப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடவு செய்யப்பட்டன.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தும்மனட்டியில் தோட்டக்கலை பண்ணை உள்ளது. இந்த பண்ணை 25 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இங்கு 5 பசுமை குடில்கள் உள்ளன. இங்கு டர்போ, சூப்பர் ரெட், எரக்டஸ், பைசட் ஆகிய 4 ரகங்களை சேர்ந்த கார்னேசன் நாற்றுகள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு ஒரு நாற்று ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 லட்சம் கார்னேசன் செடிகள் வளர்க்கப்பட்டு, அதன் மலர்கள் பறித்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் உற்பத்தியான கார்னேசன் மலர்களை வாங்க வியாபாரிகள் வரவில்லை.

    இதனால் மலர்கள் பூத்தும் விற்பனை செய்ய முடியாமல் தோட்டக்கலைத்துறைக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து மாற்று ஏற்பாடாக புதிதாக பசுமை குடில் அமைத்து ஸ்ட்ராபெர்ரி செடிகள் நடவு செய்யப்பட்டன. தற்போது அந்த செடிகளில் குறிப்பிட்ட இடைவெளியில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை செய்யும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுகிறது. இதன்மூலம் தோட்டக்கலைக்கு வருமானம் கிடைத்து வருகிறது.

    இதுகுறித்து தும்மனட்டி தோட்டக்கலை பண்ணை மேலாளர் சத்யஸ்ரீ கூறியதாவது:-

    புனேவில் இருந்து ஸ்ட்ராபெர்ரி நாற்றுகள் வாங்கப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடவு செய்யப்பட்டன. நபிலா, வின்டர் டான் ஆகிய 2 ரகங்களை சேர்ந்த 12 ஆயிரம் ஸ்ட்ராபெர்ரி செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஸ்ட்ராபெர்ரி பழம் ஒரு கிலோ ரூ.175-க்கு விற்பனை செய்து வருகிறோம். குறிப்பிட்ட இடைவெளியில் 200 கிலோ அறுவடை செய்யப்படுகிறது. இதுவரை 4 டன் பழங்கள் அறுவடை செய்து விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

    சொட்டுநீர் பாசனம் மூலம் ஸ்ட்ராபெர்ரி செடிகள் பராமரிக்கப்படுகிறது. அதன்மூலம் செடிக்கு தேவையான உரம், மருந்து கலந்து விடப்படுகிறது. குறிப்பிட்ட வெப்பநிலைக்காக பசுமை குடில் அமைக்கப்பட்டு உள்ளது. வெப்பநிலை அதிகமாக இருந்தால் குளிர்விப்பதற்காக தண்ணீர் மற்றும் பனிமூட்டம் வரவழைக்க தனி வசதி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தொடர் மழையால் அவலாஞ்சி உள்ளிட்ட வனப்பகுதிகளில் புதிதாக நீர்வீழ்ச்சிகள் தோன்றி உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. கடந்த 3 நாட்களாக மழை குறைந்து பரவலாக பெய்து வருகிறது. பந்தலூரில் அதிக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொடர் மழையால் அவலாஞ்சி உள்ளிட்ட வனப்பகுதிகளில் புதிதாக நீர்வீழ்ச்சிகள் தோன்றி உள்ளது. அங்கு நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையால் மின்வாரிய கட்டுப்பாட்டில் உள்ள 12 அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. வனப்பகுதிகளில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து இருக்கிறது. முழு கொள்ளளவை எட்டியதால் குந்தா அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மற்ற அணைகளில் தண்ணீர் முன்பு இருந்ததை விட கூடுதலாக 3 அடி உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பைக்காரா அணையின் 100 அடி கொள்ளளவில் 55 அடியாகவும், 33 அடி கொள்ளளவான கிளன்மார்கன் அணையில் 22.5 அடியாகவும், காமராஜ் சாகர் அணையின் 49 அடி கொள்ளளவில் 32 அடியாகவும், 17 அடி கொள்ளளவு கொண்ட மாயார் அணையில் 15.5 அடியாகவும், கெத்தை அணையின் 156 அடி கொள்ளளவில் 154.5 அடியாகவும் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது.

    அப்பர்பவானி அணையின் 210 அடி கொள்ளளவில் 110.5 அடியாகவும், அவலாஞ்சி அணையின் 171 அடி கொள்ளளவில் 76.5 அடியாகவும், 184 அடி கொள்ளளவு கொண்ட எமரால்டு அணையில் 85 அடியாகவும், 89 அடி கொள்ளளவு கொண்ட குந்தா அணை 88.5 அடியாககவும் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

    நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-2.6, நடுவட்டம்-24, கிளன்மார்கன்-10, அவலாஞ்சி-18, எமரால்டு-12, கூடலூர்-15, தேவாலா-22, செருமுள்ளி-15, பாடாந்தொரை-17, ஓவேலி-14, பந்தலூர்-77.1, சேரங்கோடு-19 என மழை பதிவானது.
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5-ந் தேதி ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி அதிகாரிகள் பயிற்சி மையத்தில் வருகிற 4-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வருகிற 3-ந் தேதி ஊட்டிக்கு வருகிறார். பின்னர் அவர் ராஜ்பவனில் தங்குகிறார். தொடர்ந்து 5-ந் தேதி ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.


    ×