search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாடந்தொரை செலுக்கடி பகுதியில் காட்டு யானை சேதப்படுத்திய பலசரக்கு கடை
    X
    பாடந்தொரை செலுக்கடி பகுதியில் காட்டு யானை சேதப்படுத்திய பலசரக்கு கடை

    கூடலூர் அருகே பலசரக்கு கடையை அடித்து நொறுக்கிய காட்டு யானை

    கூடலூர் அருகே இன்று அதிகாலை பலசரக்கு கடையை அடித்து நொறுக்கிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாடந்தொரை பகுதியில் உள்ளது செலுக்கடி கிராமம்.

    இந்த கிராமத்தையொட்டி அடர்ந்த வனப்பகுதியில் யானை, கரடி உள்ளிட்ட வன உயிரினங்கள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. சில நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகள், கடைகளை அடித்து நொறுக்கி பொருட்களை சேதப்படுத்தி விட்டு செல்கின்றன. இதனால் பொதுமக்கள் எப்போது யானை வரும் என்ற அச்சத்திலேயே இருந்து வருகின்றனர்.

    செலுக்கடி பகுதியை சேர்ந்தவர் உன்னிப்பா. இவர் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு பணி முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் செலுக்கடி பகுதிக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது.

    வெகுநேரமாக அங்கு சுற்றிதிரிந்த காட்டு யானை அந்த பகுதியில் உள்ள உன்னிப்பாவின் பலசரக்கு கடை முன்பு சென்று கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சேதப்படுத்தி கொண்டிருந்தது.

    சத்தம் கேட்ட உன்னிப்பா மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது யானை நின்றிருந்தது. இதையடுத்து யானையை விரட்டு முயற்சியில் ஈடுபட்டனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர்.

    பின்னர் பொதுமக்களின் உதவியோடு யானையை குடியிருப்பு பகுதியில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து இந்த பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே இந்த பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


    Next Story
    ×