என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஊட்டி நகராட்சி தமிழகத்தில் முன்மாதிரியாக திகழ்கிறது. இதற்கு வழங்கப்படும் விருது மூலம் திறம்பட செயல்பட உறுதுணையாக இருக்கும்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சுமார் 13 ஆயிரம் பேர் இருக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு தமிழக அரசு விருது வழங்க உள்ளது.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

    இங்கு மாற்றுத்திறனாளிகள் 8 ஆயிரம் பேருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் 18 வயதுக்கு மேல் 5 ஆயிரம் பேர் உள்ளனர்.

    அவர்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து கொரோனா தடுப்பூசி செலுத்த முடியாது. இதனால் வீடுகளுக்கு நேரடியாக சென்று செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு எனக்கு விருது அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையை தொடர ஊக்கமளிக்கும்.

    மேலும் ஊட்டி நகராட்சி தமிழகத்தில் முன்மாதிரியாக திகழ்கிறது. இதற்கு வழங்கப்படும் விருது மூலம் திறம்பட செயல்பட உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேவர்சோலை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கூடலூர்:

    கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட நாகம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 72). இவர் மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, தேவர்சோலை அருகே மச்சிக்கொல்லி பேபி நகர் பகுதியில் குடும்பத்தினருடன் குடியேறினார். இந்த நிலையில் பாலகிருஷ்ணனுக்கும், குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பாலகிருஷ்ணன், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தேவர்சோலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மசினகுடி அருகே ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி காட்டுயானை பலியானது. இதனால் தடுப்பு நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டு(வெளி மண்டலம்) மசினகுடி, சிங்காரா, சீகூர் மற்றும் கிழக்கு சரிவு வனச்சரகங்கள் உள்ளது. இங்குள்ள முட்புதர் காடுகளில் காட்டுயானைகள், புலிகள், கரடிகள், சிறுத்தைப்புலிகள், செந்நாய்கள், கழுதைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.

    இந்த நிலையில் மசினகுடி அருகே நீலகிரி கிழக்கு சரிவு வனச்சரக பகுதியில் உள்ள மங்களாபட்டியில் நேற்று முன்தினம் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது துதிக்கை மற்றும் வாய் பகுதியில் ரத்தம் வெளியேறியபடி காட்டுயானை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த், வனச்சரகர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி காட்டுயானை இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக டாக்டர் ராஜேஷ்குமார், கால்நடைகள் பாதுகாப்புத்துறை டாக்டர் ரேவதி ஆகியோர் வரவழைக்கப்பட்டு, காட்டுயானையின் உடல் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் பாதுகாப்பு உடைகள் அணிந்தவாறு டாக்டர்கள் ராஜேஷ் குமார், ரேவதி ஆகியோர் காட்டுயானையின் உடலில் மாதிரியை சேகரித்தனர். இந்த சமயத்தில் வனத்துறையினர் மற்றும் ஊழியர்கள் யாரும் யானையின் உடல் அருகில் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து பிற வனவிலங்குகளுக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யானையின் உடலை வனத்துறையினர் தீ மூட்டி எரித்தனர்.

    இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-

    வனப்பகுதியில் சுமார் 4 வயது ஆண் யானை ரத்தம் வெளியேறியவாறு இறந்து கிடந்து உள்ளது. இது தொடர்பாக கள ஆய்வு நடத்தியபோது ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வகை நோய் தாக்கிய விலங்கின் உடலை பிரேத பரிசோதனை செய்வது இல்லை. பாதுகாப்பு உடைகள் அணிந்தபடி மருத்துவ குழுவினர் யானையின் உடலில் மாதிரியை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இதன் விவரம் நாளை (இன்று) தெரியவரும். இதனிடையே குறிப்பிட்ட வனப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தடுப்பூசிகள் செலுத்துவதில் நீலகிரி மாவட்டம் முன்னோடியாக திகழ்கிறது என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். உதவி கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தடுப்பூசி போட பொதுமக்கள் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு தருகின்றனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு அதிகளவு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு முன்னோடி மாவட்டமாக நீலகிரி திகழ்கிறது.

    தடுப்பூசிகள் போடும் பணி அதிக அளவு நடைபெறுவதால் தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள் தாமாக முன்வந்து 2 ஆயிரம் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கி உள்ளது. இதுதவிர இன்னும் 10 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக விளங்குவதால் அனைத்து வணிக நிறுவனங்களிலும் பணியாற்றும் பணியாளர்கள், தொழிலாளர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வணிக நிறுவனங்களை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்படும்.

    போக்குவரத்து துறை மூலம் வாகன டிரைவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. எனவே அந்தந்தப் பகுதியில் நடை பெறும் முகாம்களில் சென்று இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

    சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டு இருந்தாலும் நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டு அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தாசில்தார் தினேஷ், வட்டார மருத்துவ அலுவலர் ஹாஜரா பேகம் உள்பட தன்னார்வ மற்றும் தனியார் தொண்டு நிறுவன பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    பந்தலூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பந்தலூர்:

    பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே அத்திசால் படிச்சேரி ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். சேரம்பாடி வனச்சரகத்தில் வனக்காவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சஞ்சய்(வயது 24). பி.காம். பட்டதாரி. இவர் அரசு மற்றும் தனியார் துறை வேலை தேடி வந்தார். ஆனால் வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சஞ்சய், விட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குன்னூரில் டாஸ்மாக் கடையில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி:

    குன்னூர் மவுண்ட் ரோடு சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் டாஸ்மாக் கடை மற்றும் கீழ் தளத்தில் பார் உள்ளது. தற்போது பார் மூடப்பட்டு உள்ளதால், டாஸ்மாக் கடை மட்டும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கீழ்தளத்தில் இருந்து மேல்தளத்தின் மரத்துண்டுகளால் ஆன தரைத்தளத்தை துளையிட்டு மர்ம ஆசாமிகள் மதுபாட்டில்களை திருடி சென்றனர். இதுகுறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில், வெலிங்டன் ஸ்டாப் காலேஜ் பகுதியை சேர்ந்த வின்சென்ட் (வயது 43) மற்றும் எஸ்.வி.கே. தெருவை சேர்ந்த சுரேஷ் (35) ஆகியோர் டாஸ்மாக் கடையில் திருடியது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
    பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் 5 வயது முதல் 19 வயது வரை பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற மாணவர்கள் இருந்தால் விவரங்களை தெரிவிக்கலாம்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. நடப்பு கல்வியாண்டில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்வதற்கான மாவட்ட அளவிலான கூட்டம், ஊட்டி அரசு மேல்நிலை பள்ளி அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் 6 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி செல்லா இடைநின்ற மாணவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், மாற்றுத்திறன் உடைய குழந்தைகள் கணக்கெடுக்கப்பட உள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் பெற்றோர்களை இழந்த மாணவர்களை கண்டறியும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இதேபோல் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மேற்கண்ட மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். அவர்கள் தொடர்ந்து கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    ஊட்டி, குன்னூர் உள்பட 6 தாலுக்காக்களில் 1,578 குடியிருப்பு பகுதிகளில் வீடு, வீடாக கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. குறிப்பாக தேயிலை தோட்டங்கள், தொழிற்சாலைகள், பழங்குடியின குடியிருப்புகள், கட்டுமான பணி நடைபெறும் பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகள் இருக்கிறார்களா? என கணக்கெடுக்கப்பட இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் 5 வயது முதல் 19 வயது வரை பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற மாணவர்கள் இருந்தால் விவரங்களை தெரிவிக்கலாம். ஊட்டியில் 9788858996, குன்னூரில் 8903960379, கோத்தகிரியில் 9788858998, கூடலூரில் 9788858999 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இந்த பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட உள்ளனர்.
    பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஹெல்மெட் அணியாமல் வந்தனர். அவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் என இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நடைமுறை கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஜனாதிபதி 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்ததால் இருசக்கர வாகன சோதனையை போலீசார் மேற்கொள்ளாமல் இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முதல் ஊட்டியில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வின்சென்ட் மற்றும் போலீசார் இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஊட்டி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, ஏ.டி.சி., மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தனர். பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஹெல்மெட் அணியாமல் வந்தனர். அவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. ஊட்டி நகரில் நேற்று ஹெல்மெட் அணியாமல் சென்ற 100-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    தேயிலை தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை காணப்படுகிறது.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடி, காட்டுயானை, சிறுத்தை, காட்டெருமை, புலி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு தேடி வனப்பகுதியைவிட்டு வெளியே வரும் வனவிலங்குகள் மனிதர்களை தாக்குவதும், பயிர்களை சேதப்படுத்துவதும் தொடர்கிறது. மேலும் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடக்கிறது.

    இந்த நிலையில் கோத்தகிரியில் உள்ள காம்பாய் கடை, ஹேப்பி வேலி, கார்சிலி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகளை ஒட்டி அமைந்து உள்ள தேயிலை தோட்டத்தில் 2 முகாமிட்டுள்ளன. அவை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருகின்றன.

    இதுபோன்று குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடிகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரும் பீதியடைந்து உள்ளனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடிகளின் நடமாட்டதை வனத்துறையினர் கண்காணித்து, அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் சிறுத்தைப்புலி மற்றும் கரடி நடமாட்டம் அதிகளவில் இருக்கிறது. இதனால் தனியாக வெளியே செல்லவே பயமாக இருக்கிறது. குழந்தைகளை விளையாட அனுப்ப முடியவில்லை.

    தேயிலை தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை காணப்படுகிறது. எனவே அந்த கரடிகளை கூண்டு வைத்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலாவில் தார்சாலை அமைக்கப்படுமா? என்று ஆதிவாசி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
    பந்தலூர்:

    பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலா ஆதிவாசி காலனி உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த காலனியானது பள்ளத்தாக்கான பகுதியில் அமைந்து உள்ளது. மேலும் அந்த காலனிக்கு செல்லும் சாலை மண் சாலையாக காணப்படுகிறது.

    மழைக்காலங்களில் அந்த சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இது தவிர குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடையும் சம்பவங்களும் நிகழ்ந்து உள்ளது. குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளை விரைவாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து அந்த காலனி ஆதிவாசி மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் தார்சாலை கிடையாது. மண்சாலை மட்டுமே உள்ளது. அதுவும் மழைக்காலங்களில் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிடுகிறது. கர்ப்பிணிகள், நோயாளிகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளுக்கு வாகனங்களில் அழைத்து செல்ல தார்சாலை உள்ள மூலக்கடை வரை தொட்டில் கட்டி சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    அப்போது குண்டும், குழியுமான அந்த சாலையில் விரைவாக செல்ல முடிவது இல்லை. மேலும் வலுக்கி விழுந்து காயம் அடையும் நிலை காணப்படுகிறது. காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் துரத்தினால் கூட விரைவாக ஓடி சென்று ஒளிந்து கொள்ள முடிவது இல்லை. இதனால் எங்கள் பகுதியில் தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை பலமுறை கேட்டுக்கொண்டோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது உடனடி நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க தனிக்குழு அமைக்க வேண்டும் என்று வனத்துறைக்கு, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப்பகுதி உள்ளது. இங்கு காட்டுயானைகள், புலிகள், மான்கள், கரடிகள், காட்டெருமைகள், சிறுத்தைப்புலிகள் என பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திலேயே கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் வனவிலங்கு-மனித மோதல் அதிகமாக நடக்கிறது. குறிப்பாக காட்டுயானைகள் அட்டகாசம் அதிகளவில் உள்ளது.

    கேரள வனத்தில் இருந்து கூடலூர் வழியாக முதுமலை, சத்தியமங்கலம் மற்றும் கர்நாடகா வனப்பகுதிக்கு காட்டுயானைகள் இடம்பெயர்ந்து செல்கிறது. அப்போது காட்டுயானைகள் கூடலூர் பகுதிக்குள் நுழைந்து வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இதை தடுக்கக்கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வனப்பகுதியில் பார்த்தீனியம், உண்ணி செடிகளின் அதிகமாக உள்ளதால் பசுந்தீவன தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விவசாய பயிர்களை தேடி காட்டுயானைகள் வருகிறது. இதை தடுக்க முயலும்போது மனிதர்களுக்கும், காட்டுயானைகளுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    காட்டுயானைகளுக்கு தேவையான பசுந்தீவனங்களை வனப்பகுதியில் பூர்த்தி செய்தால் மட்டுமே அவை ஊருக்குள் வருவது தடுக்கப்படும். இதற்கு தீர்வு காண அதிகாரிகள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பை சேர்ந்த தனிக்குழு அமைத்து வனப்பகுதியை ஆராய வேண்டும். தொடர்ந்து வனப்பகுதியில் பசுந்தீவனத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் உள்ளனர்.
    குன்னூர் அருகே ராணுவத்தினர் மூடிய சாலையை திறந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ஊட்டி:

    குன்னூர் அருகே பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேல் பாரத்நகர் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமத்துக்கு செல்லும் சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்ததோடு, சிறிய ரக வாகனங்கள் சென்று வந்தது. அப்பகுதி மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேல் சாலையை பயன்படுத்தினர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சாலை ராணுவத்துக்கு சொந்தமானது என்று கூறி, 2 இடங்களில் முள்வேலியுடன் தடுப்புகள் அமைத்தனர். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் நோயாளிகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 2 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டி இருந்ததால் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டர், ராணுவ அதிகாரி போன்றோரிடம் மூடப்பட்ட சாலையை திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் முடிவு செய்தனர்.

    இந்தநிலையில் நேற்று குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஷ்வரி பேச்சுவார்த்தைக்கு பின் மேல் பாரத்நகர் பகுதியில் அடைக்கப்பட்ட சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறந்து விட உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து 2 இடங்களில் வைக்கப்பட்ட முள்வேலி அகற்றப்பட்டு, சாலை திறந்து விடப்பட்டது.

    அப்போது குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரேஷ், தாசில்தார் தினேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனாத்தனன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றிய அதிகாரிகளுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    ×