என் மலர்tooltip icon

    நீலகிரி

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் புலன்விசாரணை 60 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும் யாருடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவது நோக்கமல்ல என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை போலீசார் மீண்டும் விசாரிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் கூடுதல் தகவல்களை திரட்டுவதற்காக போலீசார் கோர்ட்டின் அனுமதி பெற்று விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான், நிபந்தனை ஜாமீனில் ஊட்டியில் தங்கியிருக்கிறார். அவரை மறுவிசாரணைக்காக ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து சயான் கடந்த 17-ந் தேதி ஊட்டியில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு தனி பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ், விசாரணை அதிகாரியான கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் 3 மணி நேரம் விசாரித்தனர்.

    அப்போது சயான், கொடநாடு வழக்கில் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை சயான் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அந்த விவரங்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் கார் டிரைவராக பணியாற்றிய சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜின் அண்ணன் தனபாலிடம் விசாரிக்க முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் கனகராஜ், கொடநாடு வழக்கில் தேடப்பட்டவர். சம்பவம் நடந்த சில நாட்களில் அவர் விபத்து ஒன்றில் பலியானார். அதன்பிறகு கனகராஜின் அண்ணன் தனபால், தனது சகோதரர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி வந்தார்.

    தனபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் நேற்று ஊட்டிக்கு வந்த அவர் போலீசார் முன்பு ஆஜரானார். சுமார் ஒரு மணி நேரம் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தனது தம்பியின் மரணம் விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை. எனவே கனகராஜின் விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    சயான் மற்றும் கனகராஜின் சகோதரரிடம் போலீசார் விசாரித்துள்ள நிலையில் இந்த வழக்கு நாளை மறுநாள் (27-ந் தேதி) நீலகிரி மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அப்போது சயான், தனபால் அளித்த வாக்குமூலம் விவரங்களை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது. அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மேலும் சிலரிடம் விசாரிக்க போலீசார் அனுமதி கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை ஐகோர்ட்

    இதற்கிடையே வழக்கின் சாட்சிகளில் ஒருவரான கோவையைச் சேர்ந்த ரவி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் இந்த வழக்கு தொடர்பாக தனக்கு மிரட்டல் வருவதாகவும், எனவே போலீஸ் மறுவிசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் புலன்விசாரணை 60 நாட்களுக்குள் முடிக்கப்படும். யாருடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவது நோக்கமல்ல என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை 27-ந் தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

    இந்த தீர்ப்பு 27-ந் தேதி வரும் நிலையில், அதேநாளில் நீலகிரி கோர்ட்டில் சயானின் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட உள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


    இதையும் படியுங்கள்...இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
    சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதாலும், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததாலும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஊட்டி:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தோட்டக்கலைத்துறை, சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் நேற்று திறக்கப்பட்டன.

    நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் திறக்கப்பட்டன. நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்து பூங்காக்களையும், சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர்.

    நேற்று ஒரே நாளில் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 1,536 சுற்றுலா பயணிகள் வருகை தந்து பார்வையிட்டனர். ரோஜா பூங்காவுக்கு 567 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 103 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 274 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 72 பேரும், கல்லாறு பழப்பண்ணைக்கு 82 பேரும் வருகை தந்தனர்.

    இன்று 2-வது நாளாக பூங்காக்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்பட்டது. நேற்றைவிட இன்று சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து இருந்தனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியை காண முடிந்தது.

    சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதாலும், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததாலும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



    மிதிப்படகு 4 இருக்கைகள் வார நாட்களில் ரூ.350, வைப்பு தொகை ரூ.350 என ரூ.700-ம், வார இறுதி நாட்களில் ரூ.400-ம், வைப்பு தொகை ரூ.400 என ரூ.800 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    பெட்ரோல் விலை உயர்வு காரணமாக தமிழகம் முழுவதும் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து படகு இல்லங்களிலும் படகு சவரிக்கான கட்டணம் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

    இந்த கட்டண உயர்வானது ஊட்டி படகு இல்லம் மற்றும் பைக்காரா படகு இல்லத்திலும் நேற்று அமலுக்கு வந்துள்ளது. இக்கட்டண உயர்வானது திங்கள் முதல் வெள்ளி, விடுமுறை தினங்களான சனி, ஞாயிறு மற்றும் விரைவு சவாரி கட்டணம் என 3 பிரிவாக பிரிக்கப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    மிதிபடகில் 2 இருக்கைகள் வார நாட்களில் ரூ.250, வைப்பு தொகை ரூ.250 சேர்த்து மொத்தம் ரூ.500, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.300, வைப்பு தொகை ரூ.300 என மொத்தம் ரூ.600 ஆக வசூலிக்கப்படும். விரைவு சவாரி கட்டணம் அனைத்து நாட்களிலும் டெபாசிட் உள்பட ரூ.700 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    மிதிப்படகு 4 இருக்கைகள் வார நாட்களில் ரூ.350, வைப்பு தொகை ரூ.350 என ரூ.700-ம், வார இறுதி நாட்களில் ரூ.400-ம், வைப்பு தொகை ரூ.400 என ரூ.800 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விரைவு சவாரி கட்டணம் அனைத்து நாட்களிலும் டெபாசிட் தொகை ரூ.1000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    துடுப்பு படகு 4 இருக்கைகள் ரூ.345, ஓட்டுனர் கட்டணம் ரூ.55, வைப்பு கட்டணம் ரூ.400 என மொத்தம் ரூ.800, வார இறுதிநாட்களில் ரூ.395, ஓட்டுனர் கட்டணம் ரூ.55, வைப்பு தொகை ரூ.450 என ரூ.900 ஆகும். விரைவு சவாரி அனைத்து நாட்களிலும் வைப்பு தொகை உள்பட ரூ.1100 ஆகும்.

    6 இருக்கைகள் ரூ.395, ஓட்டுனர் கட்டணம் ரூ.55, வைப்பு தொகை ரூ.450 என மொத்தம் ரூ.900 ஆகும். வார இறுதிநாட்களில் ரூ.445, ஓட்டுனர் கட்டணம், வைப்பு தொகை என ரூ.1000 ஆகும். விரைவு சவாரி கட்டணம் வைப்பு தொகை உள்பட ரூ.1200 ஆகும்.

    எந்திரப்படகு 8 இருக்கை வார நாட்களில் ரூ.750, ஓட்டுனர் கட்டணம் ரூ.50 என ரூ.800, வாரஇறுதிநாட்களில் ரூ.900, விரைவு சவாரி கட்டணம் ரூ.1100, 10 இருக்கைகள் ரூ.950, ஓட்டுனர் கட்டணம் 50 என ரூ.1000, வாரஇறுதிநாட்கள் ரூ.1100, விரைவு சவாரி கட்டணம் ரூ.1300, ஓட்டுனர் கட்டணம் ரூ.50, ரூ.1400, வார இறுதி நாட்கள் ரூ.1550, விரைவு சவாரி கட்டணம் ரூ.1900 மாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
    சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் செயல்படும் ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகியவை இன்று திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
    ஊட்டி:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தோட்டக்கலைத்துறை, சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து சுற்றுலா தலங்கள், பூங்காக்களை இன்று முதல் திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி 4 மாதங்களுக்கு பிறகு இன்று பூங்காக்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாதலமான நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் இன்று திறக்கப்பட்டன.

    சுற்றுலா பயணிகளும், நடைபயிற்சி மேற்கொள்பவர்களும் காலை முதலே பூங்காக்களுக்கு வரத் தொடங்கினர். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்கள் சுற்றிப்பார்த்து ரசித்தனர். போட்டி, போட்டு அவர்கள் பூங்காக்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர். இன்று பூங்காக்கள் திறக்கப்படுவதை அறிந்து அவர்கள் அங்கேயே தங்கியிருந்தனர். காலையில் விடிந்ததும் பூங்காக்களுக்கு சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பூங்கா நுழைவுவாயிலில் சுற்றுலா பயணிகள் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கப்பட்டது. மேலும் தெர்மல் ஸ்கேன் எந்திரம் மூலம் சுற்றுலா பயணிகளின் உடல் வெப்ப பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஒரே இடத்தில் அதிகம் பேர் குவிவதை தடுக்க ஊழியர்கள் சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோல சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் செயல்படும் ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகியவை இன்று திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படகு சவாரி மேற்கொண்டனர். முதல் நாள் என்பதால் படகு சவாரி செய்ய கூட்டம் குறைவாக இருந்தது. வரும் நாட்களில் படகு சவாரி செய்ய கூட்டம் அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு பூங்கா மற்றும் படகு இல்லம் இன்று திறந்து செயல்பட்டது. கோவை நகரில் உள்ள வ.உ.சி. பூங்காவும் திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்காக்கள் இன்று திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். கொடைக்கானல் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் படகு சவாரி அனுமதி வழங்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் படகு சவாரி மேற்கொண்டனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, மோயர்பாயிண்ட், பேரிஜம், பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட சுற்றுலாதலங்களும் திறக்கப்பட்டன. பூங்கா மற்றும் ஏரிக்கு வந்த சுற்றுலா பயணிகளை மலர்செண்டு கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.


    மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் குறுக்கே தட்டபள்ளம் அருகே வளைவில் ஒரு காட்டு யானை ஒன்று சாலை வழியாக வந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மலைப்பகுதியில் இருந்து சமவெளி பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை உள்ளது. தற்போது குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலாப்பழம் அதிக அளவில் விளைந்துள்ளது. இதனால் பலா பழங்களை சாப்பிடுவதற்காக அந்த பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில், குஞ்சப்பனையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் குறுக்கே தட்டபள்ளம் அருகே வளைவில் ஒரு காட்டு யானை ஒன்று சாலை வழியாக வந்தது. இந்த யானையை கண்டு அந்த வழியாக வந்த சில வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் வாகனத்தில் உள்ள ஹாரனை ஒலிக்க விட்டதால், அந்த யானை சாலையை வழிமறித்து நின்று விட்டது. கோத்தகிரிக்கு செல்லும் பிரதான சாலை என்பதால் வாகனங்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நெடுந்தூரத்துக்கு வரிசையாக அணிவகுத்து நின்றன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யானை அசையாமல் அப்படியே நின்று விட்டது. அதன் பின்னர் வாகனங்களுக்கு வழி விட்டு சாலையில் இருந்து, யானை அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றது. இதையடுத்து வாகனங்கள் சிறிது சீராக அங்கிருந்து சென்றன. அடிக்கடி யானைகள் சாலைக்கு வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்றும் யானையை தொந்தரவு செய்ய கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சிறு விவசாயிகள் கைகளால் இயக்கும் கத்திரிக்கோல் வடிவிலான எந்திரம் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட எந்திரங்களை பயன்படுத்தி பச்சை தேயிலையை அறுவடை செய்து வருகின்றனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக தேயிலை விவசாயமே உள்ளது. இந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளனர். இதற்கிடையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதுமான மழை பெய்ததாலும், இதமான சீதோஷ்ண காலநிலை உள்ளதாலும் தோட்டங்களில் உள்ள செடிகளில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து வருகிறது.

    தற்போது பச்சை தேயிலை கிலோவுக்கு குறைந்தபட்சம் 14 ரூபாய் முதல் 22 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதல் விலை சற்று குறைவாக இருப்பினும், மகசூல் அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் ஆறுதல் அடைந்து உள்ளனர். இதனால் பச்சை தேயிலை அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பச்சை தேயிலையை பறிப்பதற்கு போதிய தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பச்சை தேயிலையை அறுவடை செய்ய கையால் இயக்கும் எந்திரம், மோட்டார் மூலம் இயங்கும் எந்திரம் போன்ற நவீன எந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர். பெரிய தேயிலை எஸ்டேட் உரிமையாளர்கள் மோட்டார் மற்றும் காற்றால் இயங்கக்கூடிய அதி நவீன எந்திரங்களை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 300 கிலோ வரை பச்சை தேயிலையை அறுவடை செய்கின்றனர்.

    மேலும் சிறு விவசாயிகள் கைகளால் இயக்கும் கத்திரிக்கோல் வடிவிலான எந்திரம் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட எந்திரங்களை பயன்படுத்தி அறுவடை செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சாதாரணமாக தொழிலாளி நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக சுமார் 50 கிலோ பச்சை தேயிலையை பறிக்க முடியும். ஆனால் எந்திரங்கள் மூலமாக அறுவடை செய்யும்போது அதிக அளவில் அறுவடை செய்ய முடிகிறது என்றனர்.
    ஊட்டி அருகே கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி:

    ஊட்டியில் மான் பூங்கா சாலை அருகே உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக நகர மேற்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, அந்த பிணத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் 25 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் கயிறு கட்டி இறங்கி பிணத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக மிதந்தது ஊட்டி முள்ளிக்கொரை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான பிரபு(வயது 43) என்பது தெரியவந்தது. ஆனால் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் கிணற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோர்ட்டு அளித்த நிபந்தனை ஜாமீனில் ஊட்டியில் தங்கியுள்ள சயான், தினந்தோறும் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி நள்ளிரவில் 11 பேர் கொண்ட கும்பல் புகுந்தது.

    அந்த கும்பல் அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து விட்டு பங்களாவுக்குள் இருந்த முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றது.

    இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ், மனோஜ்சாமி, ஜித்தின்ராய், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ்சாமி, உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

    இந்த வழக்கு ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் எனவும், பல முக்கிய தகவல்களை கூற இருப்பதாகவும் சயான் தரப்பில் நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

    கோர்ட்டு அனுமதியை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சயானுக்கு கோத்தகிரி போலீசார் சம்மன் அனுப்பினர். நேற்று முன்தினம் சயான் ஊட்டியில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு தனி பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரானார்.

    அவரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ், கோத்த கிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

    சயான் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வந்தபோது எடுத்தபடம்.

    3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்களையும், இதில் முக்கிய பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரகசிய வாக்குமூலங்கள் அனைத்தும் எழுத்து பூர்வமாக போலீசார் பதிவு செய்துள்ளனர்.

    சயான் கூறிய விவரங்களின் அடிப்படையில் ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கு வருகிற 27-ந் தேதி ஊட்டி கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அதற்குள் சயான் வாக்குமூலம் விவரங்கள் அனைத்தையும் தயார் செய்து தாக்கல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    வாக்குமூலம் கொடுத்த சயான், கோர்ட்டு அளித்த நிபந்தனை ஜாமீன் பெயரில் ஊட்டியில் தங்கியுள்ளார். தினந்தோறும் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

    சயான் வாக்குமூலத்தை தொடர்ந்து அவருக்கு ஏதாவது மிரட்டலோ அல்லது பிரச்சினையோ ஏற்படலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதனால் அவர் ஊட்டியில் தங்கியிருக்கும் இடத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் மீண்டும் அழைத்தால் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் சயானுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.


    அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால் அவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி நள்ளிரவில் 11 பேர் கொண்ட கும்பல் புகுந்தது.

    அவர்களை அங்கிருந்த காவலாளி ஒம்பகதூர் தடுத்தார். இதையடுத்து அந்த கும்பல் காவலாளியை தாக்கி கொலை செய்துவிட்டு பங்களாவிற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

    இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மற்றும் கேரளாவை சேர்ந்த அவரது நண்பர் சயான் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து அவர்களை தேடினர். இந்த சமயத்தில் சேலத்தில் நடந்த விபத்தில் கனகராஜ் இறந்து விட்டார்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ், மனோஜ்சாமி, ஜித்தின்ராய், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ்சாமி, உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். தற்போது இவர்களில் 8 பேர் ஜாமீனிலும், சயான், மனோஜ் நிபந்ததை ஜாமீனில் ஊட்டியிலும் தங்கியுள்ளனர்.

    இந்த வழக்கு நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் மறுவிசாரணை நடத்த வேண்டும் எனவும், பல முக்கிய தகவல்களை கூற இருப்பதாகவும் சயான் தரப்பில் நீதிபதியிடம் முறையிடப்பட்டது. மேலும் போலீசார் இந்த வழக்கில் கூடுதல் தகவல்களை பெற வேண்டி உள்ளதாகவும் கோர்ட்டில் குறிப்பிட்டிருந்தனர்.

    இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சயானுக்கு கோத்தகிரி போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து நேற்று சயான் ஊட்டியில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு தனி பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ், விசாரணை அதிகாரியான கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.

    3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்களையும், இதில் முக்கிய பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாகவும் ரகசிய வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விசாரணை முடிந்ததும், சயானை மீண்டும் தாங்கள் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.

    சயான் தனது வாக்குமூலத்தில், சென்னையை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவரின் உத்தரவின்படி கொடநாடு எஸ்டேட் பங்களாவில் மர வேலை பார்த்த ஒருவரின் உதவியுடன் பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்களை கடத்தி ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜிடம் ஒப்படைத்து விட்டதாகவும், கூடலூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அத்துடன் சில நாட்களில் கனகராஜ் கார் விபத்தில் மரணம் அடைந்து விட்டதாலும், எஸ்டேட்டில் கணிப்பொறி உதவியாளராக வேலை பார்த்த தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டதாலும், தனது மனைவி மற்றும் குழந்தை கார் விபத்தில் இறந்ததாலும் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவியது. அதன் காரணமாகவே இதுவரை முக்கிய தகவல்களை தெரிவிக்காமல் இருந்து வந்ததாகவும், தனக்கு போலீசார் உரிய பாதுகாப்பு அளித்தால் இந்த வழக்கில் உள்ள அனைத்து விவரங்களையும் கூற தான் தயாராக இருப்பதாக வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக கூறப்படுகிறது.

    போலீசார் விசாரணை

    இந்த நிலையில் சயான், முக்கிய அ.தி.மு.க. பிரமுகர்களின் பெயர்களை தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அவர்களுக்கும், இந்த வழக்கிற்கும் என்ன தொடர்பு உள்ளது, இவர்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், அதற்கான ஆதாரங்களை திரட்டும் பணியிலும் போலீசார் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ஆதாரங்கள் அனைத்தும் திரட்டப்பட்டு, அதில் அந்த பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால் அவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் கூறும் தகவல்களையும், சயான் சொல்லிய தகவல்களையும் ஆராய்ந்து அதன்பின்னர் அதனை அறிக்கையாக கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கை முதலில் இருந்து விசாரிக்க தொடங்கியுள்ளதுடன், ஆதாரங்களை திரட்டும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    நீலகிரி மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்களில் தடை செய்த 9.475 கிலோ கிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.21 ஆயிரத்து 150 அபராதம் விதிக்கப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிப்பதற்காக ஒரே நாளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், தாசில்தார்கள், துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து மாவட்டம் முழுவதும் சோதனை செய்தனர். அப்போது கொரோனா தொற்றை பரப்பும் வகையில் முகக்கவசம் அணியாமல் இருந்த நபர்களிடம் இருந்து ரூ.37 ஆயிரத்து 200 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

    கடைகள், வணிக நிறுவனங்களில் தடை செய்த 9.475 கிலோ கிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.21 ஆயிரத்து 150 அபராதம் விதிக்கப்பட்டது.

    நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக்கை தடுப்பதோடு, கொரோனாவை தடுக்க பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    உருளைக்கிழங்கு, பீட்ரூட், பூண்டு, பட்டாணி, அவரை போன்றவற்றுக்கு நல்ல விலை இருப்பதால், அதனை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

    ஊட்டியை சுற்றி அணிக்கொரை, ஆடாசோலை, இடுஹட்டி, தும்மனட்டி, எம்.பாலடா, இத்தலார் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிட்ட கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை மழை ஓரளவு குறைந்து பின்னர் அறுவடை செய்யும் பணி நடந்தது. பின்னர் காய்கறிகளை விவசாயிகள் நகராட்சி மார்க்கெட்டில் விற்பனை செய்தனர்.

    தொடர்ந்து அடுத்து பயிரிடுவதற்காக விளைநிலங்கள் உழுது தயார் செய்யப்பட்டது. பின்னர் பாத்திகள் அமைக்கப்பட்டு, கேரட், முட்டைகோஸ், பூண்டு போன்ற பயிர்கள் நாற்றுகளாக நடவு செய்யப்பட்டதோடு, விதைப்பும் மேற்கொள்ளப்பட்டது. மழை குறைந்ததால் இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர் மழையால் பூண்டு செடிகள் சாய்ந்தன. பூண்டு அழுகும் அபாயம் ஏற்பட்டதால், விவசாயிகள் அறுவடை செய்து தார்ப்பாய் கொண்டு மூடி வைத்தனர். பின்னர் போதிய அளவு விளைச்சல் இல்லாததால் குறைந்த விலைக்கு விற்பனையானது.

    தற்போது உருளைக்கிழங்கு, பீட்ரூட், பூண்டு, பட்டாணி, அவரை போன்றவற்றுக்கு நல்ல விலை இருப்பதால், அதனை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மலைப்பிரதேசம் என்பதால் மழையை நம்பி விவசாயம் செய்து வருகிறோம். தொடர் மழை பெய்தால் மலைச்சரிவில் விளைநிலங்கள் சரிந்து பயிர் வீணாகிவிடும். பரவலாக மழை பெய்தால் காய்கறி பயிர்களுக்கு தண்ணீர் கிடைப்பதுடன், தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். மழைநீரை சேமித்து வைக்க சில இடங்களில் செயற்கை குட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளது என்றனர்.
    ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கலெக்டர் கவுரவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும் அவர் ஏற்று கொண்டார்.

    பின்னர் விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

    அதனை தொடர்ந்து விழாவில் கோத்தர், படுகர், தோடர் இன மக்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அவர்கள் தங்களுடைய பாரம்பரிய உடை அணிந்து, பாடல்களின் இசைக்கு ஏற்றவாறு நடனமாடினர். இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட அதிகாரிகள் கண்டு ரசித்தனர்.

    படுகர் இன பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து பாடலுக்கு நடனமாடி கொண்டிருந்தனர். அப்போது விழா மேடையில் இருந்து கலைநிகழ்ச்சியை கண்டு ரசித்து கொண்டிருந்த கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கீழே இறங்கி வந்து, படுகர் இன பெண்களுடன் சேர்ந்து நடமானடினார்.

    கலெக்டர் படுகர் இன பெண்களுடன் சேர்ந்து நடனமாடியதை அங்கிருந்த அனைவருடன் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

    இந்த விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ×