என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்த தொழிலாளர்கள், டிரைவர்கள், வியாபாரிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஊரடங்கில் தளர்வை தொடர்ந்து கடந்த 23-ந் தேதி முதல் தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்படும் பூங்காக்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் செயல்படும் ஊட்டி, பைக்காரா படகு இல்லங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டது.
ஊட்டி நகரில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதமான காலநிலையை அனுபவித்தபடி சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்ட மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஊட்டி படகு இல்லத்தில் மழையில் நனைந்தபடி மிதி படகு மற்றும் துடுப்பு படகுகளில் சவாரி செய்து வருகின்றனர். அதிக மழை பெய்தால் படகு சவாரி நிறுத்தப்பட்டு, மழை குறைந்த பிறகு இயக்கப்படுகிறது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்து வருகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 23-ந் தேதி 1,536 பேர், 24-ந் தேதி 1,077 பேர், 25-ந் தேதி 1,008 பேர், 26-ந் தேதி 1,468 பேர், 27-ந் தேதி 1,830 பேர், நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 664 பேர், நேற்று 4 ஆயிரத்து 500 பேர் என மொத்தம் 15 ஆயிரத்து 083 சுற்றுலா பயணிகள் வருகை தந்து உள்ளனர்.
இதேபோன்று ஊட்டி படகு இல்லத்துக்கு வார நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. வார விடுமுறை நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 ஆயிரத்து 626 பேர் வருகை தந்தனர். ஒரு வாரத்தில் 12 ஆயிரத்து 500 பேர் படகு இல்லத்துக்கு வந்து உள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால், அவர்களை நம்பி பிழைப்பு நடத்தி வருபவர்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் கட்டிட வரன்முறை சட்டம் அமலில் உள்ளது. இங்கு நீர்நிலைகள் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் கட்டிடம் கட்ட அனுமதி கிடையாது. மேலும் பொக்லைன் எந்திரம் கொண்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ளுதல், ஆழ்துளை கிணறு அமைத்தல் போன்றவற்றுக்கு தடை உள்ளது. அவசிய தேவையென்றால் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். எனினும் இதை மீறி குன்னூர் பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குன்னூர் நகராட்சி அலுவலக பகுதியில் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நடைபாதைக்கு அருகில் தனியார் மூலம் வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணியில் 2 பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
தற்போது குன்னூர் பகுதியில் மழை பெய்து வருவதால், நிலப்பகுதி சற்று ஈரமாக காணப்படுகிறது. இதுபோன்ற நிலையில் நேற்று அந்த கட்டுமான இடத்தில் கான்கிரீட் தூண் அமைப்பதற்காக மண்ணை அகற்றும் பணி நடந்தது. அப்போது மதியம் 2.45 மணியளவில் திடீரென ஒருபுறத்தில் இருந்து மொத்தமாக மண் சரிந்து விழுந்தது. இதில் ராகுல்(வயது 26), ரசீது(29) ஆகிய 2 வடமாநில தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். மண்ணுக்குள் புதைந்து காயம் அடைந்த அவர்களை சக தொழிலாளர்கள் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு மீட்டனர். தொடர்ந்து குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் விளங்குகிறது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தொழிற்சாலைகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருமானம் ஈட்டுகின்றனர். தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டு, குன்னூரில் செயல்படும் ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் ஆன்லைன் மூலம் ஏலம் நடைபெறுகிறது. அதன்படி விற்பனை எண் 34-க்கான ஏலம் கடந்த 26, 27-ந் தேதிகளில் நடந்தது. இந்த ஏலத்துக்கு 20 லட்சத்து 29 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. அதில் 15 லட்சத்து 53 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் இலை ரகமாகவும், 4 லட்சத்து 76 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 18 லட்சத்து 1000 கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 90 சதவீத விற்பனை ஆகும். இதன் ரொக்க மதிப்பு ரூ.16 கோடியே 78 லட்சம். விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களிலும் கிலோவுக்கு ரூ.1 விலை உயர்வு இருந்தது.
சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.287, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.250 என இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.72 முதல் ரூ.77 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.150 முதல் ரூ.198 வரை ஏலம் போனது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.71 முதல் ரூ.84 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.140 முதல் ரூ.219 வரை விற்பனையானது. அடுத்த ஏலம்(விற்பனை எண்-35) வருகிற 2, 3-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 19 லட்சத்து 38 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.

தமிழகம், கேரளா, கர்நாடகா என 3 மாநிலங்கள் கூடலூர் பகுதியில் இணைகிறது. கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து இரு சக்கர வாகனங் களில் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் மசினகுடி போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறும் போது தடை செய்யப்பட்ட, போதை பொருட்களை கடத்தி வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்றனர்.
ஊட்டியில், நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கான வாடகை கடந்த 4 ஆண்டுகளாக செலுத்தப்படவில்லை எனக் கூறி நகராட்சி நிர்வாகம் 736 கடைகளுக்கு சீல் வைத்தது. இதை எதிர்த்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
இதனால், கடந்த 3 நாள்களாக நகராட்சி மார்க்கெட் மூடப்பட்டு, கடைகள் திறக்கப்படாததால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள வியாபாரிகள் ஊட்டியில் ஆலோசனை நடத்தினர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நீலகிரி மாவட்டத் தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஊட்டி நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் முஸ்தபா, துணைத் தலைவர் ரெக்ஸ் மணி, பொருளாளர் ராஜா முகமது, அன்வர்கான், குமார் மற்றும் மாவட்டம் முழுவதிலிருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
வாடகை நிலுவை பிரச்சனை குறித்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- நகராட்சி அதிகாரிகள், வியாபாரிகளின் பொருட்களை வெளியே எடுக்க விடாமல் கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் கடைகளில் இருப்பு உள்ள நிலையில், கடைகளில் உள்ள கோழிகள் இறந்தும், மீன், இறைச்சி, காய்கறிகள் மற்றும் பழங்கள் அழுகியும் துர்நாற்றம் வீசி வருவதால் மார்க்கெட்டில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ளாட்சிக் கடைகளின் வாடகை பலமடங்கு உயர்த்தப்பட்டதால், வாடகையை குறைக்க வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளோம். அரசு, கடைகளுக்கான வாடகையை நிர்ணயித்தால், அந்த வாடகையை வியாபாரிகள் செலுத்தி விடுவர்.
ஊட்டி நகராட்சி ஆணையரை மாற்றக் கோரியும், வாடகை பிரச்சனை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், வருகிற 30-ந்தேதி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இப்பிரச்சனைக்கு திங்கட்கிழமைக்குள் தீர்வு காணப்படாவிட்டால் மார்க்கெட் வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று ஊட்டி காந்தலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பொதுமக்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா, பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா, நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட உள்ளது. தொற்று பரவலை தடுக்க 4,200 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி 100 சதவீதம் நிறைவடைந்து இருக்கிறது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பஸ் மற்றும் வாகன ஓட்டுனர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று உறுதி செய்யப்படும்.
நீலகிரி மாவட்டத்தில 9 பேரூராட்சிகள், கூடலூர் நகராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டது. கோத்தகிரி, குன்னூர் ஆகிய 2 வட்டாரங்களில் 18 வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி 100 சதவீதத்தை நெருங்கி வருகிறது. மாவட்ட அளவில் கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் செலுத்த இலக்கை நோக்கி பணிகள் நடைபெற்று வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த பணிபுரியும் இடங்களில் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று சான்றிதழ்களை சரிபார்த்து கண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களை வேலைக்கு எடுக்க கூடாது.
கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பிறகு தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதனால் மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வர தொற்று பாதிப்பு இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை (சனிக்கிழமை) குன்னூர் வருகிறார். அவருடன் முப்படை தளபதி மற்றும் 14 ராணுவ உயர் அதிகாரிகளும் உடன் வருகின்றனர்.
இதற்காக நாளை காலை டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலம் அவர் கோவை வருகிறார். பின்னர் இங்கிருந்து குன்னூர் ஜிம்கானா கிளப் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார்.
பின்னர் காரில் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு செல்லும் அவர் நாளை இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலை வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு செல்கிறார்.
அங்கு நடப்பு ஆண்டில் பயிற்சியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுடன் உரையாற்றுகிறார். வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு அவரவர் மொழியில் மொழியாக்கம் செய்வதற்காக மொழி பெயர்ப்பாளர்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கோவையில் இருந்து குன்னூருக்கு ஹெலிகாப்டரில் வரும் போது கால நிலை மாற்றம் ஏற்பட்டால், அவர் ஹெலிகாப்டரில் ஊட்டி தீட்டுக்கல் பகுதிக்கு சென்று அங்கிருந்து கார் மூலம் குன்னூர் வருவதற்கான நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அப்போது சில வியாபாரிகள் கடைகளுக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பஜ்ஜி மிளகாய், பீட்ரூட், முள்ளங்கி, புரூக்கோலி உள்ளிட்ட காய்கறிகளை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். காய்கறிகள் ஏலம் நடைபெறாததால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த காய்கறிகளை திரும்பி எடுக்க வந்தனர். ஆனால், சீல் வைக்கும் பணிக்காக நுழைவுவாயில் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதனால், திரும்பி எடுத்து செல்ல முடியவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ஊட்டி நகராட்சிக்கு வாடகை செலுத்தாததால் கடைகளை சீல் வைக்கும் பணி நடக்கிறது. இதனால் 3 மாதம் விளைநிலங்களில் பராமரித்து அறுவடை செய்து காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்தோம். இங்கு மண்டிகள் மூடப்பட்டதாலும், ஏலம் நடக்காததாலும் விற்பனை செய்ய முடியவில்லை. தொடர் மழை பெய்து வருவதால் அழுகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ஊட்டி மார்க்கெட்டில் 5 டன் காய்கறிகள் தேக்கம் அடைந்து இருக்கிறது. மேலும் ஊட்டியில் இருந்து கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு காய்கறிகள் அனுப்பும் பணி பாதிக்கப்பட்டது. காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியில் கடந்த வாரம் 2 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளை இடித்து சேதப்படுத்தி, வீட்டில் உள்ள அரிசி, பருப்புகளை தின்று அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து யானைகள் அட்டகாசத்தை தடுக்க வலியுறுத்தி தேவாலா பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடுகாணி பகுதியில் உள்ள 2 காட்டு யானைகளை விரட்ட முதுமலை யானைகள் முகாமிலிருந்து சுஜய், சீனிவாசன், பொம்மன் என்ற 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த பகுதிகளில் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் யாரும் இனி அச்சம் கொள்ள வேண்டிய தேவை இல்லை. மேலும், காட்டு யானைகள் ஊருக்குள் வந்தால், இது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானையை விரட்ட 3 கும்கி யானைகள் நாடுகாணி பகுதிக்கு வந்திருப்பதால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஊட்டி:
ஊட்டி நகரசபை மார்க்கெட்டில் 1587 கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளாக கடை உரிமையாளர்கள் பலர் நகரசபைக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் உள்ளதால் ரூ.38 கோடி வாடகை நிலுவைத் தொகையாக உள்ளது.
இதனால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது, பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது போன்றவற்றில் நகரசபைக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆணையாளர் சரஸ்வதி தெரிவித்தார். மேலும் நகரசபைக்கு வாடகை செலுத்தாத 1395 கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில் நேற்று வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைப்பதற்காக பாதுகாப்பு வழங்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத்திடம் நகரசபை சார்பில் அனுமதி கேட்கப்பட்டது.
இதையறிந்த வியாபாரிகள் நகரசபையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டி நகரசபை மார்க்கெட்டில் திரண்டனர். கடைகளை அடைக்கக் கூடாது என கூறி அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று மாலை முதலே ஊட்டியில் பரபரப்பு நிலவி வந்தது.
இந்தநிலையில் இன்று காலை ஊட்டி மார்க்கெட் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். நகரசபை ஆணையாளர் சரஸ்வதி மற்றும் அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைப்பதற்காக சென்றனர்.
அப்போது வியாபாரிகள் கடைகளுக்குள் சென்று அதிகாரிகள் சீல் வைக்க முடியாதவாறு நின்று கொண்டனர். மேலும் அதிகாரிகளை முற்றுகையிட்டு வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில் எங்களது கோரிக்கையை தமிழக அரசிடம் தெரிவித்துள்ளோம். அரசு கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறி உள்ளது.
ஆனால் நகரசபை ஆணையாளரின் இந்த அராஜகப்போக்கு காரணமாக ஒட்டுமொத்த வியாபாரிகளின் வாழ்வாதாரமே கேள்விக் குறியாகி உள்ளது என தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி 100 சதவீத இலக்கை எட்ட முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உள்ளாட்சித்துறை மூலம் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறவர்கள் கண்டறியப்பட்டு, நேரடியாக வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நீலகிரியை சேர்ந்தவர்கள் சிலர் வெளி இடங்களில் வசித்து வருவதால் வீடுகள் மூட்டப்பட்டு உள்ளன. இருப்பினும் கடந்த வாக்காளர் பட்டியலில் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது நீலகிரியில் 6 அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த மையங்கள் செயல்பட்டு வருகிறது.
ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் பொறுப்பு டாக்டர் அர்ஜூன் (8056316453), குன்னூர் அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவில் டாக்டர் ராஜ்பிரகாஷ் (9677720300), கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் கிருத்திகா (8903727841), கூடலூர் அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் நவனீதரன் (9361163725), பந்தலூர் அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவில் டாக்டர் அபிநத் (9629179454),
மஞ்சூர் அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் பூவிழி (8072424941) ஆகிய மையங்களில் டாக்டர்களை தொடர்பு கொண்டு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல், 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இந்த மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.






