என் மலர்
செய்திகள்

ராஜ்நாத் சிங்
ஒருங்கிணைந்த படைக்குழு உருவாக்குவது குறித்து தீவிர ஆலோசனை: ராஜ்நாத் சிங்
நமது எல்லையில் சவால்கள் இருந்த போதிலும், இந்திய தேசிய பாதுகாப்போடு மத்திய அரசு எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாது என்ற நம்பிக்கை நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கடலோர காவல்படைக்கு ‘விக்ரஹா’ என்ற அதிநவீன ரோந்து கப்பல் தயார் செய்யப்பட்டது. இதனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. இதில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். பின்னர் அவர் காலநிலை மாற்றம் காரணமாக ஹெலிகாப்டருக்கு பதிலாக சாலை மார்க்கமாக கார் மூலம் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலை வழியாக குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு சென்றார். அவரை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட பலர் வரவேற்றனர். இதையடுத்து நேற்றிரவு அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று காலை 10 மணியளவில் வெலிங்டன் ராணுவ கல்லூரி மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரை பார்வையிட்டார். அதன்பின்னர் ராணுவ கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அங்கு பயிற்சி பெற்று வரக்கூடிய இந்தியா மற்றும் வெளிநாடுகள் என 30 நாடுகளை சேர்ந்த முப்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
அதனைத்தொடர்ந்து குன்னூர் வெலிங்கடன் ராணுவ கல்லூரியில் உள்ள பயிற்சி மையம், கண்காட்சி மையத்தை பார்வையிட்டார். அப்போது கண்காட்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட உடைகள், தொப்பி, துப்பாக்கி, லத்தி, பழங்கால கொடிகள், நாணயங்கள் போன்றவற்றை பார்வையிட்டார்.
அப்போது ராஜ்நாத் சிங் கூறுகையில் ‘‘ஒருங்கிணைந்த படைக்குழு அமைப்பது குறித்து மிகத் தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது. போரின்போது விரைவாக முடிவு எடுக்கப்படுவது முக்கியமான காரணியாகும். இந்த குழு விரைவாக முடிவு எடுக்கும் வாய்ப்பை மட்டும் பெற்றிருக்காது. ஒருங்கிணைந்த சண்டையிடும் குழுவை அதிகரிக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கும்.
ஒருங்கிணைந்த படைக்குழு எதிரிகளை எதிர்த்து சண்டையிடும் புதிய குழுவாக இருக்கும். இதன் கீழ், மிகவும் சுறுசுறுப்பான மற்றும் தன்னம்பிக்கையுடன் உள்ள வீரர்கள் உருவாக்கப்படுவார்கள். ஆப்கானிஸ்தானில் சூழ்நிலை மாறி வருவது நமக்கு மிகவும் சவாலாக உள்ளது. இந்த நிலை யுக்தி குறித்து மாற்று யோசனை செய்ய நமது நாட்டை கொண்டு சென்றுள்ளது.
இந்திய- சீனா எல்லை விவகாரத்தில் சீனா நமது நாட்டு எல்லைக்குள் மீறி வந்தபோது, நான் ராணுவ தளபதிக்கு இரவு 11.30 மணியளவில் பேசினேன். சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இந்த சூழ்நிலையில் நமது படைகள் விவேகமாக நடந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது. எந்த சூழ்நிலையிலும், எந்த நேரத்திலும், எந்த எதிரியையும் நாம் எதிர்கொள்ளத் தயார் என்பதை நம்முடைய பாதுகாப்புப்படை வீரர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்தனர்.

இந்தியா சொந்த மண்ணில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது மட்டுமல்ல, தேவைப்பட்டால் அவர்களுடைய நாட்டின் நிலத்தில் கூட தாக்குதல் நடத்த முடியும்.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் வெற்றி பெற்றால், அது நம்முடைய வலிமைக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும். 2016-ம் ஆண்டு எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தியது, 2019-ல் பாலகோட் தாக்குதல் திருப்பி தாக்குதல் நடத்தும் பதிலடி கொடுக்கும் மனநிலையை ஏற்படுத்தியுள்ளது.
நமது எல்லையில் சவால்கள் இருந்த போதிலும், இந்திய தேசிய பாதுகாப்போடு மத்திய அரசு எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாது என்ற நம்பிக்கை நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
Next Story






