என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகிய 5 பூங்காக்கள் உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலக தர கட்டுப்பாடு அமைப்பு மூலம் அதன் குழுவினர் ஊட்டி தாவரவியல் பூங்கா உள்பட தோட்டக்கலை பூங்காக்கள் மற்றும் பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
பூங்காக்களில் புல்வெளிகள் பராமரிக்கப்படுவது, மலர் மற்றும் அலங்கார செடிகள் நடவு செய்து வளர்ப்பது, சுற்றுலா பயணிகளுக்காக மேம்பாடு, பதிவேடுகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் அழகியல் மற்றும் தொழில் நுட்ப பூங்கா மேலாண்மைக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கும், பல்வேறு வகையான ரோஜா ரகங்களின் தொகுப்பு மற்றும் வளர்ப்பிற்காக ஊட்டி அரசு ரோஜா பூங்காவிற்கும் ஐ.எஸ்.ஓ. எனப்படும் உலக தர கட்டுப்பாட்டு கழக சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
இதேபோல அயல்நாட்டு தாவரங்கள் மற்றும் பல்வேறு தாவரங்களின் தொகுப்பாக விளங்குவதற்காக குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கும், தரமான நடவு பொருள் உற்பத்தி மற்றும் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப தளமாக விளங்குவதற்காக பர்லியார் அரசு தோட்டக்கலை பண்ணைக்கும் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார். நிகழ்ச்சியில் தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் பங்கேற்றார்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இதனால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த ஊட்டி, பைக்காரா படகு இல்லங்களில் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. மேலும் ஊட்டி, பைக்காராவில் மோட்டார் படகுகள் பெட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலை கூடியதால், படகு சவாரி கட்டணமும் உயர்த்தப்பட்டது. அதன்படி 3 விதமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
அதாவது வார நாட்கள், வார விடுமுறை நாட்கள்(சனி, ஞாயிற்றுக்கிழமை), சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் நாட்களில்(உடனடியாக படகு சவாரி செய்ய) என 3 வகையாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இது பழைய கட்டணத்தை விட 25 சதவீதம் அதிகமாக இருந்தது. தற்போது படகு இல்லங்கள் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால் சவாரிக்கான கட்டணம் உயர்த்தப்பட்டு இருந்ததால், சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் படகு சவாரி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று மீண்டும் பழைய கட்டணம் நடைமுறைக்கு வந்து உள்ளது.
அதன்படி 2 இருக்கைகள் கொண்ட மிதி படகில் சவாரி செய்ய ரூ.500, 4 இருக்கைகளுக்கு ரூ.700, 4 இருக்கைகள் கொண்ட துடுப்பு படகில் சவாரி செய்ய ரூ.800, 6 இருக்கைகளுக்கு ரூ.900, 8 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகில் சவாரி செய்ய ரூ.800, 10 இருக்கைகளுக்கு ரூ.1,000, 15 இருக்கைகளுக்கு ரூ.1,400 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மிதி படகு மற்றும் துடுப்பு படகுகளில் அரை மணி நேரம் சவாரி செய்யலாம். மோட்டார் படகில் 20 நிமிடம் சவாரி மேற்கொள்ளலாம்.
மிதி படகு, துடுப்பு படகில் பயணம் செய்பவர்கள் மொத்த தொகையை செலுத்தி சவாரி முடித்த பிறகு பாதி தொகையை வைப்பு தொகையாக திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். உயர்த்தப்பட்ட படகு சவாரி கட்டணம் குறைக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

குன்னூர்:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடுபங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கில் சயானிடம் மறு விசாரணை, கனகராஜ் சகோதரிடம் விசாரணை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் கொடநாடு எஸ்டேட் மேலாளர் என பலரிடமும் போலீசார் மேற்கொண்டு வரும் அதிரடி விசாரணைகளால் தற்போது வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீசாரும் தனித்தனி குழுவாக பிரிந்து இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள், அரசு தரப்பு சாட்சிகளில் இதுவரை விசாரிக்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் இதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள், என பலரிடமும் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை ஐ.ஜி.சுதாகர், டி.ஐ.ஜி, எஸ்.பி. ஆஷிஷ்ராவத் தலைமையிலான அதிகாரிகள் கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து கொடநாடு எஸ்டேட்டிற்கு சென்ற ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான அதிகாரிகள் அந்த பங்களா முழுவதும் ஆய்வு செய்தனர்.
அப்போது கொலை நடந்த 8-வது கேட் பகுதிக்கு சென்றனர். அங்கு வைத்து, காவலாளி கொலை செய்யப்பட்டது எப்படி? எவ்வாறு கொல்லப்பட்டார்? என பல கோணத்தில் அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் காயம் அடைந்த கிருஷ்ணபகதூர் தற்போது எங்கு உள்ளார்? என்பது குறித்து விசாரித்து உள்ளனர்.
தொடர்ந்து பங்களாவிற்குள் சென்று கொள்ளை சம்பவம் அரங்கேறிய அறை ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அதில் இருந்த பொருட்கள் என்ன என்பது குறித்தும், கொலையாளிகள் எந்த கேட்டின் வழியாக உள்ளே நுழைந்தனர்? என எஸ்டேட் மேலாளரிடம் விசாரித்தனர்.
மேலும் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் அவர்களின் வீடுகளுக்கு சென்றும் அதிகாரிகளில் நேரில் விசாரணை மேற்கொண்டனர். பங்களாவில் உள்ள ஜெனரேட்டர் அறை, சி.சி.டி.வி.கேமிராக்கள் மெயின் அறை முழுவதும் தீவிர சோதனை மேற் கொண்டனர்.
ஜெனரேட்டர் அறையில் சோதனை மேற்கொண்டபோது, கொள்ளை நடந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் உடனடியாக ஜெனரேட்டர் இயக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அன்றைய தினம் ஜெனரேட்டர் இயக்கப்படவில்லை. அதற்கு என நியமிக்கப்பட்ட ஊழியர் அன்றைய தினம் எங்கே சென்றார். யார்? அவரை ஜெனரேட்டரை இயக்க வேண்டாம் என்று யாராவது சொன்னார்களா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதுடன், பங்களாவில் இருந்து வழக்கு தொடர்பான ஆதாரங்களை திரட்டினர்.
கொள்ளை சம்பவம் நடந்தபோது பங்களாவில் மர வேலைகளும், சிறு, சிறு கட்டிட வேலைகளும் நடந்து வந்துள்ளன. இந்த வேலைகளில் அதிகமாக கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதியை சேர்ந்தவர்களே ஈடுபட்டுள்ளனர்.எனவே அவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்ட அதிகாரிகள், கோத்தகிரியில் உள்ள ஆசாரிகள் மற்றும் கட்டிட தொழிலாளர்களிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். சுமார் 3½ மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த விசாரணையை முடித்து கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே கொடநாடு பங்களாவில் வேலை பார்த்த கட்டிட தொழிலாளர்களிடம் விசாரிப்பதற்காக ஒரு தனிப்படை போலீசார் கூடலூருக்கு விரைந்தனர். அவர்கள், அங்கு பங்களாவில் வேலை பார்த்த கட்டிட தொழிலாளிகள் மற்றும் மரவேலைகளில் ஈடுபட்ட தொழிலாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அதிரடி விசாரணையில் இறங்கினர். அப்போது கொள்ளை நடந்த சம்பவம் குறித்தும், அவர்களுக்கு தெரிந்த தகவல்களை போலீசார் பெற்று கொண்டனர்.
அடுத்த கட்டமாக கோத்தகிரி துணைமின் நிலையத்தில் கொடநாடு கொள்ளை சம்பவம் நடந்தபோது பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். அப்போது பணிபுரிந்த பலரும் மாறுதலாகி வேறு இடங்களுக்கு சென்று விட்டனர். தற்போது அவர்கள் எங்கு உள்ளனர் என்பது குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கொடநாடு கொலை வழக்கில் கூடுதல் விசாரணை மேற்கொள்வதற்காக ஊட்டியில் உள்ள பழைய எஸ்.பி. அலுவலகத்தில் தனி அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் தான் வழக்கு சம்பந்தமாக பலரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. விசாரணையை துரிதமாக மேற்கொண்டு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரக்கூடிய அடுத்த மாதம் 1-ந் தேதிக்கு முன்னதாக முடிக்க திட்டமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படியுங்கள்... கனமழைக்கு வாய்ப்புள்ள 2 மாவட்டங்கள்
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புற வணிக வளாகங்களில் மொத்தம் 1,587 கடைகள் உள்ளது.
இங்கு வாடகை செலுத்தாத 750 கடைகளுக்கு கடந்த மாதம் 25-ந் தேதி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த 9 நாட்களுக்கும் மேலாக அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தது.
கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி வியாபாரிகள் தொடர் போராட்டம் மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே நிலுவை வாடகையை வியாபாரிகள் செலுத்தி வருகின்றனர். வாடகை செலுத்திய வியாபாரிகளின் கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறைந்த வாடகை பாக்கி உள்ள கடைகளை திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கடை நடத்தி வந்த வியாபாரிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு நேற்று முதல் கடைகளை திறந்தனர். மொத்தமுள்ள 1587 கடைகளில் தற்போது வரை 719 கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதில் சீல் வைக்கப்பட்ட 150 கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. மார்க்கெட்டில் கடைகள் திறந்த தகவல் அறிந்ததும் இன்று காலை முதல் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி சென்றனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான உண்மைகளை வெளியே கொண்டு வர காவல்துறை மூலம் முழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஊட்டி கோர்ட்டு 4 வார கால அவகாசம் வழங்கியதை தொடர்ந்து, போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். நேற்று முன்தினம் கொடநாடு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த நீலகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் சேர்க்கப்பட்ட முக்கிய சாட்சிகள் மற்றும் சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் களத்தில் இறங்கி உள்ளனர்.
இதுதொடர்பாக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்துடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது யார், யாரிடம் விசாரணை நடத்துவது, தற்போது யாரிடம் விசாரணை நடந்து வருகிறது, வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முழு விசாரணை நடத்த மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு தனிப்படையிலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட தலா 5 பேர் என மொத்தம் 25 போலீசார் இடம்பெற்று உள்ளனர்.
ஏற்கனவே வழக்கில் கைதான 10 பேர் மற்றும் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்த இருக்கின்றனர். மேலும் 5 தனிப்படைகளும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ள உள்ளன. போலீசார் தொடர்ந்து ஒரு மாதம் விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் போலீசார் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினர்.
இந்த நிலையில் நேற்று ஊட்டியில் உள்ள பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர், கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் நடராஜனிடம் விசாரணை நடத்தினர். அப்போது நடராஜனின் வக்கீல் ராஜ்குமார் உடனிருந்தார்.
காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை என 2½ மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு, மேலாளர் நடராஜன் வாக்குமூலம் அளித்தார். பங்களாவுக்கு வந்து செல்லும் முக்கிய நபர்கள், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா தங்கும் அறைகள் குறித்து கூறியதாக தெரிகிறது. மேலும் சில முக்கிய தகவல்களையும் அந்த ரகசிய வாக்குமூலத்தில் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் நிறைந்து காணப்படும் மாவட்டமாகும். இங்குள்ள சுற்றுலா தலங்களையும், இயற்கை எழிலையும் கண்டு ரசிப்பதற்காக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து தங்கி, இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்வார்கள்.
குறிப்பாக கோடை காலங்களான ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் கோடைவிழா கண்காட்சியை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோடை கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.
கொரோனா முதல் அலைக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதத்தில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் கொரோனா 2-வது அலை பரவவே சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு, சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.
தொற்று பரவல் குறைந்ததை அடுத்து கடந்த 23-ந் தேதி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளும் சுற்றுலா தலங்களை கண்டு மகிழ்ந்தனர். தோட்டக்கலைத்துறை பூங்காக்கள் திறந்தபோதும், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படவில்லை.
இதனால் சுற்றுலா பயணிகள் பலரும் அதன் நுழைவு வாயில் வரை வந்துவிட்டு வெளியில் நின்று ஏக்கத்துடன் பார்த்துவிட்டு திரும்பி சென்று வந்தனர்.
இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு முதுமலை புலிகள் காப்பகம் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக மீண்டும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்ட தகவல் அறிந்ததும் ஊட்டியில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் பலரும் அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்துவிட்டு நேரடியாக கார், வேன் போன்ற வாகனங்களில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வரத்தொடங்கினர்.
சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் நுழைவு வாயிலில் வனத்துறையினர் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்தனர். மேலும் கிருமி நாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்ய வைத்தனர். மேலும் முக கவசம் அணிந்தவர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர்.
அவர்கள் நுழைவு வாயிலில் இருந்து வனத்துறைக்கு சொந்தமான வாகனங்களில் வாகன சவாரி மேற்கொண்டு முதுமலை புலிகள் காப்பகம் முழுவதும் சுற்றி பார்த்து அங்குள்ள இயற்கை காட்சிகளை குடும்பத்தோடு கண்டு ரசித்ததோடு, வளர்ப்பு யானைகளையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது:-
அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முதுமுலை புலிகள் காப்பகத்தில் இன்று முதல் 50 சதவீத சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 6-ந் தேதி முதல் யானை சவாரி தொடங்கப்படும். அன்றைய தினம் தங்கும் விடுதிகளும் திறக்கப்பட உள்ளது. அதிலும் 50 சதவீதத்தினர் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்ய வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் 97 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்து உள்ளது. மீதமுள்ள 3 சதவீதம் பேரில் கொரோனா பாதித்தவர்கள் இருந்தால், அவர்களுக்கு 3 மாதத்திற்கு பிறகு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மது குடிப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது இல்லை என்ற தகவல் வருகிறது. எனவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிய எளிதாக இருக்கும்.

கலெக்டர் உத்தரவின்படி நேற்று முதல் நீலகிரியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது வாங்க வரும் நபர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளதற்கான சான்றிதழ் அல்லது செல்போனில் பதிவிறக்கம் செய்த சான்றிதழை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் சரிபார்த்தனர். சான்றிதழை காட்டியவர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்யப்பட்டது.
கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மது விற்பனை செய்யப்படவில்லை. அவர்களது பெயர், செல்போன் எண், முகவரி, ஆதார் எண் போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மவுண்ட் ரோட்டில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நடைபாதை அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு மேடான பகுதியை சமன் செய்யும் பணி நடந்தது. இந்த பணியில் 2 பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
கடந்த 29-ந் தேதி நடந்த பணியின்போது, அங்கு திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் 2 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை சக தொழிலாளர்கள் மீட்டனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் யோகேஷ் கண்ணன் மீது 2 பிரிவுகளின் கீழ் குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
எனினும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்று இருந்ததால், அங்கு கட்டுமான பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள தடுப்புச்சுவர் ஓரத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. இதில் குடிநீர் குழாய்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
மேலும் மண்சரிவால் அரசு ஆஸ்பத்திரியின் ஆக்சிஜன் ஜெனரேட்டர் அறை மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் அந்தரத்தில் தொங்குகின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அந்த நில உரிமையாளர் யோகேஷ் கண்ணனிடமும் விசாரணை நடத்தினர்.
பின்னர் சேதம் அடைந்த மின்கம்பங்களை பொக்லைன் எந்திரம் உதவியுடன் சீரமைக்கும் பணியில் 40 மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் அந்தரத்தில் தொங்கும் கட்டிடங்களின் பாதுகாப்புக்காக நெடுஞ்சாலைத்துறை மூலம் 3 ஆயிரம் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர். இது தொடர்பான வழக்கு நீலகிரியில் உள்ள ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என போலீசாரும், இந்த வழக்கில் கூடுதல் தகவல்களை அளிக்க உள்ளதாக சயானும் கோர்ட்டில் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 17-ந் தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உள்ளிட்ட உயர் போலீசார் சயானிடம் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இதேபோல் விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் விசாரித்தனர்.
தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக கோத்தகிரி, கொடநாடு, கூடலூர் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.க்கள் உள்பட போலீசாரிடம் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். அவர்கள் அளித்த விவரங்களும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த 27-ந் தேதி இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சயான் மற்றும் தனபால் அளித்த வாக்குமூலங்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூடுதல் விசாரணை நடத்த வேண்டியதால் அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்று ஊட்டி மாவட்ட கோர்ட்டில் கொடநாடு கொலை வழக்கு நீதிபதி சஞ்சய் பாபா முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகினர்.
அரசு தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோரும், எதிர்தரப்பை சேர்ந்த வக்கீல்களும் ஆஜராகி இருந்தனர். விசாரணை தொடங்கியதும் அரசு தரப்பில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மேலும் போலீஸ் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

இதுகுறித்து அரசு தரப்பு வக்கீல் ஷாஜகான் கூறுகையில், கொடநாடு வழக்கில் பல விஷயங்களை முழுமையாக புலன் விசாரணை செய்ய வேண்டி உள்ளது. இந்த விவகாரத்தில் சதி நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரிக்க வேண்டி உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக மேலும் புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதால் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளோம். அதை நீதிபதியும் ஏற்றுக்கொண்டு வழக்கை அக்டோபர் 1-ந் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார் என்றார்.
இன்று கோர்ட்டில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், தடயவியல் நிபுணர் ராஜ்மோகன், மின்வாரிய உதவி பொறியாளர் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் இன்று ஆஜராகவில்லை.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி கொலை செய்யப்பட்டு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. வழக்கு தொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு நீலகிரியில் உள்ள ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே நீதிமன்ற அனுமதி பெற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தலைமையிலான போலீசார் கடந்த 17-ந்தேதி சயானிடம் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இதேபோல் விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் விசாரித்தனர்.
தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக கோத்தகரி, கொடநாடு, கூடலூர் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ.க்கள் ஆகியோரிடம் 2 நாட்கள் ரகசிய விசாரணை நடத்தினர். இதுதவிர மேலும் சிலரிடமும் தொடர்ந்து ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கைதாகி தற்போது நிபந்தனை ஜாமினில் ஊட்டியில் தங்கி இருக்கும் சயான், போலீசாரிடம் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக தான் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் வனப்பகுதிக்குள் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் அதிகளவில் காட்டுயானைகள் முகாமிட்டு சுற்றிவருகின்றன. இந்த யானைகள் அவ்வப்போது கிராமபகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே அந்த பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காட்டு யானைகள் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஓடக்கொல்லி பகுதியில் இன்று அதிகாலையில் புகுந்தன. அங்கு யானைகள் அந்த பகுதியில் உள்ள ஜார்ஜ் குட்டி என்பவர் வீட்டையும், வெள்ளச்சி என்பவர் வீட்டையும் அடித்து நொறுக்கியது. யானை வந்த சத்தம் கேட்டு வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் வீட்டுக்குள் ஓடி தஞ்சம் அடைந்தனர். வீட்டை தாக்கி சேதப்படுத்திய யானைகள் வீட்டுக்குள் இருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்களை நாசம் செய்து விட்டு அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- காட்டு யானைகள் நாங்கள் வசிக்கும் பகுதிகளில் முகாமிட்டிருப்பதால் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளை இடித்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் யானைகள் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுவதால் உயிருக்கு உத்தரவாதம் இன்றி வாழ வேண்டியுள்ளது. இதனால் வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் யானைகளைஅடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






