என் மலர்tooltip icon

    செய்திகள்

    சயான்
    X
    சயான்

    ரகசிய வாக்குமூலம் அளித்த சயானை கண்காணிக்கும் போலீஸ்

    கோர்ட்டு அளித்த நிபந்தனை ஜாமீனில் ஊட்டியில் தங்கியுள்ள சயான், தினந்தோறும் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி நள்ளிரவில் 11 பேர் கொண்ட கும்பல் புகுந்தது.

    அந்த கும்பல் அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து விட்டு பங்களாவுக்குள் இருந்த முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றது.

    இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ், மனோஜ்சாமி, ஜித்தின்ராய், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ்சாமி, உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

    இந்த வழக்கு ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் எனவும், பல முக்கிய தகவல்களை கூற இருப்பதாகவும் சயான் தரப்பில் நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

    கோர்ட்டு அனுமதியை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சயானுக்கு கோத்தகிரி போலீசார் சம்மன் அனுப்பினர். நேற்று முன்தினம் சயான் ஊட்டியில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு தனி பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரானார்.

    அவரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ், கோத்த கிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

    சயான் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வந்தபோது எடுத்தபடம்.

    3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்களையும், இதில் முக்கிய பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரகசிய வாக்குமூலங்கள் அனைத்தும் எழுத்து பூர்வமாக போலீசார் பதிவு செய்துள்ளனர்.

    சயான் கூறிய விவரங்களின் அடிப்படையில் ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கு வருகிற 27-ந் தேதி ஊட்டி கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அதற்குள் சயான் வாக்குமூலம் விவரங்கள் அனைத்தையும் தயார் செய்து தாக்கல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    வாக்குமூலம் கொடுத்த சயான், கோர்ட்டு அளித்த நிபந்தனை ஜாமீன் பெயரில் ஊட்டியில் தங்கியுள்ளார். தினந்தோறும் கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

    சயான் வாக்குமூலத்தை தொடர்ந்து அவருக்கு ஏதாவது மிரட்டலோ அல்லது பிரச்சினையோ ஏற்படலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதனால் அவர் ஊட்டியில் தங்கியிருக்கும் இடத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் மீண்டும் அழைத்தால் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் சயானுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.


    Next Story
    ×