search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தேயிலை தோட்டத்தில் உலா வந்த கரடி
    X
    தேயிலை தோட்டத்தில் உலா வந்த கரடி

    கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் கரடிகள் நடமாட்டம்- பொதுமக்கள் பீதி

    தேயிலை தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை காணப்படுகிறது.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடி, காட்டுயானை, சிறுத்தை, காட்டெருமை, புலி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு தேடி வனப்பகுதியைவிட்டு வெளியே வரும் வனவிலங்குகள் மனிதர்களை தாக்குவதும், பயிர்களை சேதப்படுத்துவதும் தொடர்கிறது. மேலும் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடக்கிறது.

    இந்த நிலையில் கோத்தகிரியில் உள்ள காம்பாய் கடை, ஹேப்பி வேலி, கார்சிலி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகளை ஒட்டி அமைந்து உள்ள தேயிலை தோட்டத்தில் 2 முகாமிட்டுள்ளன. அவை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருகின்றன.

    இதுபோன்று குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடிகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரும் பீதியடைந்து உள்ளனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடிகளின் நடமாட்டதை வனத்துறையினர் கண்காணித்து, அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் சிறுத்தைப்புலி மற்றும் கரடி நடமாட்டம் அதிகளவில் இருக்கிறது. இதனால் தனியாக வெளியே செல்லவே பயமாக இருக்கிறது. குழந்தைகளை விளையாட அனுப்ப முடியவில்லை.

    தேயிலை தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை காணப்படுகிறது. எனவே அந்த கரடிகளை கூண்டு வைத்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×