என் மலர்
நீலகிரி
- பெரும்பாலான பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாமலும், காலாவதியான நிலையிலும் இயக்கப்பட்டு வருகிறது.
- நாடுகாணி பொன்னூர் வந்தபோது மீண்டும் பஸ் பழுதடைந்து நின்றது
ஊட்டி:
கூடலூர் அரசு போக்குவரத்துக்கழக கிளை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 50 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாமலும், காலாவதியான நிலையிலும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு கூடலூரில் இருந்து பந்தலூர் தாலுகா தாளூருக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.
இதற்கிடையே கூடலூர் செம்பாலா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென அரசு பஸ் பழுதடைந்து நடுவழியில் நின்றது. மின் சாதனத்தில் (சென்சார்) பிரச்சினை ஏற்பட்டதால் பஸ் நடுவழியில் நின்றதாக தெரிகிறது. பள்ளி மாணவர்கள் அவதி பின்னர் டிரைவரின் பல்வேறு முயற்சியால் அரை மணி நேரத்துக்கு பிறகு பஸ் மீண்டும் புறப்பட்டது.
தொடர்ந்து நாடுகாணி பொன்னூர் வந்தபோது மீண்டும் பஸ் பழுதடைந்து நின்றது. இதனால் மாணவர்கள், நடுவழியில் அவதிப்பட்டனர். பின்னர் பஸ் பழுது பார்க்கப்பட்டு புறப்பட்டது. ஆனால் பொன்வயல் பகுதியில் 3-வது முறையாக பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். பல்வேறு முயற்சி செய்த பின்னரும் பஸ்சை இயக்க முடியவில்லை.
இதனால் காலையில் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் தவித்தனர். தொடர்ந்து காலதாமதம் ஆவதை உணர்ந்த பயணிகள் வேறு வாகனங்களில் தங்களது ஊர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு தாமதமாக சென்றனர். பள்ளிகளுக்கு மாணவர்கள் காலதாமதமாக சென்றார்கள். பராமரிக்க வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சம்பந்தப்பட்ட பஸ்சில் சென்சார் பிரச்சினை உள்ளது. இதை பழுது பார்க்க கோவை அல்லது ஊட்டியில் போக்குவரத்து கழக பொறியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் கூடலூர் பகுதியில் இயக்கப்படும் பஸ்களை பராமரிப்பது இல்லை. எனவே, பஸ்களை முறையாக பராமரித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- கூடலூா் நகா்மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது.
- காளம்புழா மின்மயான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.
ஊட்டி:
கூடலூா் நகா்ம ன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்து க்கு நகராட்சித் தலைவா் பரிமளா தலைமை தாங்கினாா். துணைத் தலைவா் சிவராஜ், கமிஷனர் காந்திராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நகா் மன்ற உறுப்பினா்கள் பேசியதாவது:- காளம்புழா மின்மயான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும். அந்த பகுதியில் குடிநீா், மின்வசதி செய்து தரவேண்டும். மாக்கமூலா பகுதியிலுள்ள பொதுகிணறுக்கு செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. இதனை விரைந்து சீரமைத்துத் தர வேண்டும். முதல்மைல், புறமணவயல், நேதாஜி நகா் ஆகிய பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்து தரவேண்டும்.
நடுகூடலூா் பகுதியில் குடிநீா் விநியோகம் சீராக இல்லை. பல இடங்களுக்கு குடிநீா் வந்து சோ்வதில்லை. மங்குழியில் மழையில் பாலம் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் தற்காலிக பாலம் அமைத்து தர வேண்டும்.
மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஏழுமுறம் பாலத்தை விரைவில் அமைத்துத் தரவேண்டும். யானைகள் நடமாடும் பகுதியான தொரப்பள்ளி பகுதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை. தொரப்ப ள்ளியிலிருந்து இருவயல் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதை சீரமைத்துத் தரவேண்டும். எஸ்.எஸ்.நகா் பகுதியில் தெருவிளக்கு, குடிநீா் வசதி, நடைபாதை அமைத்து தரவேண்டும்.
நகராட்சியின் சுகாதாரத் துறையில் செலவு கணக்குகளை முறையாக காண்பிப்பதில்லை. கூடலூா் பஸ் நிலையம் அருகில் கழிவறைகள் கட்ட வேண்டும். நகரில் குறுகிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தவிா்க்க முறையான பாா்க்கிங் வசதி செய்து தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து உறுப்பினா்கள் பேசினா்.
விவாதத்தில், வெண்ணிலா(திமுக), இளங்கோ (திமுக), வா்கீஸ் (காங்), ஷகிலா (மு.லீக்), லீலா வாசு (சி.பி.எம்.), ராஜு(காங்), சத்தியசீலன் (திமுக), உஷா (திமுக), கௌசல்யா (திமுக), உஸ்மான் (காங்), அனூப்கான்(அதிமுக) ஆகியோா் பேசினா்.
- வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
- மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர், ஊட்டி, கோத்தகிரி மற்றும் குன்னூர் ஆகிய வட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த வாரம் வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் ஊட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.
6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடந்த போட்டியில் இறுதி சுற்றில் கூடலூர் முதல்மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி டியானி தொடர்ந்து 4 சுற்றுகளிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சென்னையில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் தகுதியினை பெற்றார்.
காந்திநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் கோகுல்தாசன் மாணவர்கள் பிரிவில் முதலிடம் பிடித்தார்.
மாணவிகள் பிரிவில் சக்கத்த நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி பவிக்க்ஷாவும், பாட்டவயல் நடுநிலைப் பள்ளியின் மாணவி அனிதா செபஸ்டியன் ஆகியோர் முறையே 2,3-ம் இடங்களை பிடித்து செஸ்போட்டியை காண தகுதி பெற்றனர்.
மாணவர்கள் பிரிவில் கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாண வன் புகழேந்தி, கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சரவன்குமார் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.
போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை மாவட்ட உதவிதிட்ட அலுவலர் குமார் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டி–களுக்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி இயக்குனர் ராஜேஷ் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.முதன்மை நடுவராக நீலகிரி மாவட்ட சதுரங்க அமைப்பின் துணை செயலாளர் ஜுனைஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயக்குமார், சுரேஷ் உள்ளிட்டோர் கல நடுவர்களாக பணி–யாற்றினார்.
- பெரும்பாலான அணைகள் கட்டப்பட்டு 60 ஆண்டை கடந்து விட்டன.
- மின்சாரம் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயன்படுகிறது.
ஊட்டி:
நீலகிரியில், குந்தா, பைக்காரா மின் வட்டத்தின் கீழ், 13 அணைகள் உள்ளன. பெரும்பாலான அணைகள் கட்டப்பட்டு 60 ஆண்டை கடந்து விட்டன.
நீலகிரி அணைகளில் இருந்து, 833.65 மெகாவாட் நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
குந்தா, கெத்தை, பில்லூர் அவலாஞ்சி அணைகளில் தண்ணீரை தேக்கி வைத்து, ராட்சத குழாய்களில் கொண்டு சென்று மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த மின்சாரம் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயன்படுகிறது. சகதி நிறைந்த அணைகள் துார்வாரப் பட்டு, பல ஆண்டுகள் ஆனதால், தண்ணீர் தேக்கி வைப் பதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது.
இதனால், பருவ மழையின் போது, ஏராளமான நீர் வீணாக வெளி யேறுகிறது. சேறும், சகதியுமான அணைகளை உடனடியாக துார்வார வேண்டி இருப்பதால், மின்வாரிய தலைமை அலுவலகம் இதற்கான அறிக்கையை கேட்டுள்ளது. இதுகுறித்து குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் செந்தில் ராஜன் கூறுகையில், குந்தா, பைக்காரா நீர் மின்திட்டத்தின் கீழ், அதிகளவில் சகதி நிரம்பிய அணைகளை துார்வார மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து வாரியத்துக்கு விரைவில் அனுப்பப்படும்,'' என்றார்.
- மருத்துவர்கள் மருத்துவ அறிவை ஆவணப்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல் பயிற்சி கோத்தகிரியில் நடைபெற்றது.
- தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பாரம்பரிய மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
அரவேணு:
பாரம்பரிய பழங்குடி இன மருத்துவர்கள் மருத்துவ அறிவை ஆவணப்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல் பயிற்சி கோத்தகிரியில் நடைபெற்றது. பழங்குடியினர் மக்களின் பாரம்பரிய மருத்துவ அறிவை ஆவணப்படுத்தும் மற்றும் மதிப்பீடு செய்வது குறித்த பயிற்சி கோத்தகிரியில் உள்ள தென்பாஸ்கோ வளாகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பாரம்பரிய மருத்துவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியில் பங்கேற்ற அனைவரையும் திட்ட மேலாளர் பாலசு ப்ரமணியம் அனைவரையும் வரவேற்றார்.பெங்களூர் பல்துறை சுகாதார விஞ்ஞா னியும், தொழில்நுட்ப பல்கலைக்கழக உதவி பேராசிரியருமான முனைவர் பிரகாஷ் மற்றும் முனைவர் ஹரே ராமமூர்த்தி தமிழ்நாடு பாரம்பரிய சித்த மருத்துவர்களின் மகா சங்கத் தலைவர் கமனந்தன் கார்டன் ஆப் அறக்கட்டளையின் பண்டைய பழங்குடி மக்களின் மூலிகை அறிவை புதுப்பிக்கும் திட்டத்தின் மேலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
கார்டன் ஆப் அறக்கட்டளை மேலா ண்மை அறங்காவலர் லட்சுமி நாராயணன், திட்ட மேலாளரும், நீலகிரி இயற்கை மேலாண்மை தலைவருமான சிவக்குமார், தன்போஸ்கோ இயக்குனர் அருட்தந்தை ராபர்ட் ஆகியோ ர் கலந்து கொண்டனர். முடிவில் பாரம்பரிய மருத்துவர் தனலட்சுமி நன்றி கூறினார்.
- குன்னூர் உலிக்கல் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது.
- 12-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் பாஸ்கரன் மின்விளக்குகள் டெண்டர் விடுவது குறித்து எதிர்ப்பு தெரிவித்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கல் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இந்த பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ராதா மற்றும் துணை தலைவர் ரமேஷ், தலைமை தாங்கினர்.பேருராட்சி எழுத்தர் மேகலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு பணிகள் குறித்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.இதில் 12-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் பாஸ்கரன் மின்விளக்குகள் டெண்டர் விடுவது குறித்து எதிர்ப்பு தெரிவித்தார்.
அதற்கு பேரூராட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் 6-வது வார்டு மணிமாலா பேசுகையில் நான்சச் எஸ்டேட்டுக்கு சொந்தமான சந்தக்கடை பகுதியில் குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும் என்றார். இதேபோல் 18 வது வார்டு ட்ருக் பகுதியில் கடந்த 7 மாத காலமாக பணிகள் நடக்கவில்லை. எனவே எஸ்டேட் பணியாளர்களுக்கு முறையான கழிப்பிட வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பேசினார். இதற்கு பதில் அளித்த துணை தலைவர் பேரூராட்சியில் போதிய அளவு நிதி இல்லாதததால் இந்த பணிகள் அனைத்தும் படிபடியாக செய்து தரப்படும் என உறுதியளித்தார்.
- வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து விடுகிறது.
- வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் காட்டு யானைகள், கரடிகள், மான்கள், சிறுத்தை, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து விடுகிறது.
வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியும் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று மாலை மசினகுடி வனப்பகுதியில் வேட்டைத்தடுப்பு காவலா்களான மாரி, மாதன், காலன், மாதேஷ் ஆகிய 4 போ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு புதருக்குள் பதுங்கியிருந்த கரடி திடீரென வெளியில் வந்து தாக்க முயன்றது.
இதை பார்த்ததும் அதிர்ச்சியான 4 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். ஆனால் கரடி விடாமல் விரட்டி சென்று 3 பேரை தாக்கியது.
இதில் மாரி என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 2 பேருக்கு கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. ஒருவர் எந்தவித காயமும் இன்றி தப்பினார்.
பின்னர் அவர் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்து வனத்துறையினர் விரைந்து வந்து கரடியை அங்கிருந்து விரட்டி காயம் அடைந்த 3 பேரையும் மசினகுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கரடி தாக்கியதில் பலத்த காயம் அடைந்த மாரி என்பவர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரடி தாக்கி காயம் அடைந்த வேட்டை தடுப்பு காவலர்கள்
- இளம்பெண் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த தனியார் நிறுவன நிர்வாகிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளம்பெண் எவ்வளவு நாட்களாக நிறுவனத்தின் கீழ் பணியாற்றி வந்தார். மாயமாவதற்கு முன்பு உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிவித்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் காவலாளிகள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிறுவனத்தின் மூலம் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் தர்ஷனா என்ற பெண் ஊட்டி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
நான் கடந்த சில ஆண்டுகளாக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறேன்.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி நான் பணியில் இருந்தேன். அப்போது அங்கு வந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த சிலர் என்னை தொடர்ந்து வேலை பார்க்குமாறு தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.
எனவே என்னை மிரட்டி தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
பின்னர் அவர் வெளியில் வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், என்னுடன் பணியாற்றி வந்த ஊட்டி கல்லட்டியை சேர்ந்த 23 வயது திருமணமான இளம்பெண்ணும் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த மே மாதம் 15-ந் தேதி இளம்பெண்ணும், நானும் இரவு பணியில் இருந்தோம். ஆனால் அதன்பின்னர் அவர் பணிக்கு வரவில்லை. கடந்த 2 மாதங்களாக நான் அவரை பார்க்கவே இல்லை. அவர் மாயமாகி விட்டார். அவரின் கதி என்ன என்பது தெரியவில்லை. எனவே அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்றார்.
இதுகுறித்து ஊட்டி மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த வழக்கு ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
அனைத்து மகளிர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
முதலில் அந்த பெண் தன்னை தாக்கியதாக மட்டும் புகார் கூறி இருந்தார். அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தன்னுடன் பணியாற்றிய இளம்பெண்ணை காணவில்லை என கூறியதை தொடர்ந்து போலீசார் ஆஸ்பத்திரியில் பணியாற்றிய இளம்பெண் மாயமானது உண்மை தானா? என்பது குறித்தும் விசாரிக்க தொடங்கினர்.
இது தொடர்பாக புகார் அளித்த தர்ஷனாவிடம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் இளம்பெண் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த தனியார் நிறுவன நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் எவ்வளவு நாட்களாக இந்த நிறுவனத்தின் கீழ் பணியாற்றி வந்தார். மாயமாவதற்கு முன்பு உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிவித்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம்பெண் மாயமாகி 2 மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. உண்மையிலேயே அவர் மாயமானாரா அல்லது வேறு ஏதாவது இதில் நடந்துள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடர் கனமழை பெய்தது.
- மழை பெய்ததால் நடைபாதையில் விழுந்த மண் குவியல்களை அகற்ற முடியவில்லை.
கூடலூர்
கூடலூர் பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடர் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் பாலம் உடைந்தது. தொடர்ந்து மண் சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்தன. கூடலூர் நகரின் மையப்பகுதியில் கிளை நூலகம் உள்ளது. இதன் முன்பு நகராட்சி நடைபாதை செல்கிறது.
தொடர் மழையால் கிளை நூலகத்தின் வளாகத்தில் உள்ள மேடான இடத்தில் இருந்து மண் சரிவு ஏற்பட்டு நடைபாதையில் விழுந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் நடைபாதையில் விழுந்த மண் குவியல்களை அகற்ற முடியவில்லை.
மேலும் மக்களின் நடமாட்டமும் குறைவாக காணப்பட்டது. தற்போது மழையும் குறைந்து விட்டதால் இயல்பு நிலை திரும்பி உள்ளது. ஆனால், இதுவரை நடைபாதையில் விழுந்து கிடக்கும் மண்குவியல்கள் அகற்றப்படவில்லை. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமத்துக்கு ஆளாகினர். தொடர்ந்து மண் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்பகுதியில் அனைத்து வங்கிகளும் செயல்படுகிறது. மேலும் காலை, மாலை நேரத்தில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடைபாதையில் நடந்து முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
சில சமயங்களில் பெண்கள், வயதானவர்கள் தடுமாறி கீழே விழும் அவல நிலையும் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடைபாதையில் கிடக்கும் மண் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்தது.
- தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களிடம் ஜோதி வழங்கப்பட்டது.
சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் சென்னை மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க உள்ளார்கள். செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் நேற்று கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு செஸ் ஒலிம்பியாட் ஜோதி வந்தது. ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் திறந்தவெளி வாகனத்தில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் ஏந்தி சென்று மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து ஒலிம்பியாட் ஜோதி ஊர்வலமாக சேரிங்கிராசுக்கு வந்தது.
அப்போது சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களிடம் ஜோதி வழங்கப்பட்டது. பின்னர் இந்த ஜோதியானது ஊட்டி மத்திய பஸ் நிலையம் வரை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து செஸ் ஒலிம்பியாட்டி போட்டியை முன்னிட்டு, தமிழகத்தின் உயர்ந்த மலை சிகரமான தொட்டபெட்டாவில் பள்ளி மாணவ-மாணவிகள் இடையே செஸ் போட்டி நடத்தப்பட்டது.
மேலும் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வைக்கப்பட்டு இருந்த செல்பி ஸ்பாட்டில் மாணவ -மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் மலர்விழி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- சுந்தரம் தனது வீட்டில் மாடு வளர்த்து வருகிறார்.
- பசு மாடு 15 அடி ஆழ கிணற்றில் விழுந்தது.
அரவேணு
கோத்தகிரி பாண்டியன் பார்க் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவர் தனது வீட்டில் மாடு வளர்த்து வருகிறார். தினமும் அந்த மாட்டை அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
நேற்றும் வழக்கம்போல் மாட்டை தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பசு மாடு ஒன்று கால் தவறி அங்கு பராமரிப்பின்றி சுற்றுச்சுவர் இல்லாமல் இருந்த 15 அடி ஆழ கிணற்றில் விழுந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கோத்தகிரி தீயணைப்புத் துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர்.தீய ணைப்பு நிலைய அலுவலர் கருப்பசாமி தலை மையி லான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேர போரா ட்டத்திற்கு பிறகு பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.
- பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி தேசிய மாணவா் படை சாா்பில் காா்கில் போா் வெற்றி தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
- கல்லூரி மாணவா்கள் நடத்திய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.
குன்னூர்
குன்னூா் வெலிங்டன் ராணுவ மைய வளாகத்தில் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி தேசிய மாணவா் படை சாா்பில் காா்கில் போா் வெற்றி தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.பாகிஸ்தானுடன் 1999-ம் ஆண்டு நடந்த காா்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காா்கில் போரில் உயிா்நீத்த ராணுவ வீரா்களுக்கும், தற்போது உயிரோடு உள்ள ராணுவ வீரா்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் வெலிங்டன் ராணுவ மைய நுழைவாயில் முன்பு குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி சாா்பில் தேசிய மாணவா் படை கல்லூரி மாணவா்கள் நடத்திய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், காா்கில் போரின்போது நமது நாட்டு வீரா்கள் போரிட்டதை தத்ரூபமாக மாணவா்கள் நடித்துக் காட்டினா். இதனை ராணுவ அதிகாரிகளும் பொதுமக்களும் கண்டு ரசித்தனா். இந்நிகழ்ச்சியில் பிராவிடன்ஸ் கல்லூரியின் தேசிய மாணவா் படை அதிகாரி சிந்தியா ஜாா்ஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.






